×

மாமல்லபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் மிதமான கோடை மழை: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பகுதியில் நேற்று காலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்து, வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசி வந்தது. மேலும், கோடை வெயிலால் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக குறைந்து காணப்பட்டது. உள்ளூர் மக்களும் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.

இந்நிலையில், மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நேற்று காலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை செல்லும் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளை சூழ்ந்து பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும், நேற்று மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த தனியார் பள்ளி மாணவர்கள், வெளிநாட்டு பயணிகள் மழையிலும் வெண்ணெய் உருண்டை பாறையை கண்டு ரசித்தனர். இந்த, கன மழையால் மாமல்லபுரம் கோவளம் சாலையில் வேப்பமரம் ஒன்று முறிந்து விழுந்து வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து, விரைந்து வந்த மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள், பேரூராட்சி ஊழியர்கள் மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் துண்டு, துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்தினர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதிய பேருந்து நிலையம், அனுமந்தபுத்தேரி, புலிப்பாக்கம், பரனூர், மகேந்திரா சிட்டி, வீராபுரம், சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், பொத்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர் வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post மாமல்லபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் மிதமான கோடை மழை: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Chengalpattu ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில்...