×

சாலை விபத்தில் படுகாயமடைந்த திருமழிசை திமுக பேரூராட்சி தலைவர் காலமானார்

திருவள்ளூர்: திருமழிசை திமுக பேரூராட்சி தலைவரும், மாவட்ட திமுக நெசவாளரணி துணை அமைப்பாளராக இருந்த வடிவேல் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் பரிதாபமாக காலமானார். திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி தலைவராக பதவி வகித்து வந்தவர் உ.வடிவேல்(61). இவர் மாவட்ட திமுக நெசவாளரணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 12ம் தேதி அன்று தனது சம்பந்தி மூர்த்தியுடன் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியில் உள்ள தனது மாந்தோட்டத்திற்கு காரில் சென்றுள்ளார். பிறகு மண்ணூர் கூட்டுச் சாலையில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் தனது மாந்தோட்டம் உள்ள வளர்புரம் நோக்கி வடிவேல் காரை ஓட்டிச்செல்ல, அவருடைய சம்பந்தி ஓட்டுனர் சீட் அருகில் அமர்ந்து சென்றுள்ளார்.

மண்ணூர் கூட்டுச்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதியதில் டயர் வெடித்து கார் கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயங்களுடன் இருந்த வடிவேலுவையும், சிறிய காயங்களுடன் இருந்த அவருடைய சம்பந்தியையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தண்டலம் பகுதியில் உள்ள சவிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், வடிவேல் பலத்த காயமடைந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உ.வடிவேல் உயிரிழந்தார். இந்த துயர செய்தியை கேட்ட திருமழிசை பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சாலை விபத்தில் படுகாயமடைந்த திருமழிசை திமுக பேரூராட்சி தலைவர் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Thirumazhisai DMK ,Municipal President ,Tiruvallur ,Vadivel ,Thirumashisai DMK ,president ,DMK ,U. Vadivel ,Tirumazhisai ,Municipality ,Tiruvallur District ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு