×

கோயிலில் திருமணம் செய்துகொண்டு எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி: அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமரசம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வள்ளுவர்புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின்- சசிகலா தம்பதியினரின் மகன் சந்தோஷ். இவர் திருப்பதி சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோல் திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் நம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயபிரபா தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மகள் பூவிழி தனியார் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பள்ளிப்பருவத்தில் இருந்து இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் பூவிழிக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பூவிழி சந்தோஷ் இருவரும் திருவள்ளூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து எஸ்.பி. சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மங்கள பிரியா இரு வீட்டாரையும் அழைத்து சமரசப்படுத்தினார். அப்போது பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி காதலன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

The post கோயிலில் திருமணம் செய்துகொண்டு எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி: அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமரசம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Santhosh ,Stalin ,Sasikala ,Valluvarpuram ,Tirupati Law College ,Jayaprabha Tamilchelvi ,Tiruvallur ,Poondi Union ,Nambakkam ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி