×

புழல் அருகே தனியார் குடோனில் கெமிக்கல் கசிந்து துர்நாற்றம்: பொதுமக்கள் அவதி

புழல்: புழல் அருகே தனியார் குடோனில் கெமிக்கல் கசிந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். புழல் அடுத்த கதிர்வேடு அம்பேத்கர் தெரு பின்புறம் சுமார் 10க்கும் மேற்பட்ட தனியார் குடோன்கள் உள்ளன. இதில் ஒரு குடோனில் நேற்று முன்தினம் இரவு கெமிக்கல் பேரல்கள் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை அந்த குடோனில் இருந்த ஒரு பேரலில் இருந்து கெமிக்கல் கசிந்து வெளியேறியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் குடோனுக்கு அருகே உள்ள கதிர்வேடு அம்பேத்கர் தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெருவைச் சேர்ந்த குடியிருப்புவாசிகளுக்கு குமட்டல் ஏற்பட்டது.

மேலும், குழந்தைகள், முதியவர்கள், உடல்நிலை பாதித்தோர் மூச்சுவிட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து, புழல் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், புழல் போலீசார் மற்றும் மாதவரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். பேரலில் ஏற்பட்டிருந்த கெமிக்கல் கசிவை சீர் செய்தனர். மேலும், கெமிக்கல் கசிவினால் ஏற்பட்ட துர்நாற்றத்தை போக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டனர். இந்த கெமிக்கல் கசிவினால் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. இதுகுறித்து புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post புழல் அருகே தனியார் குடோனில் கெமிக்கல் கசிந்து துர்நாற்றம்: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Kathirvedu Ambedkar Street ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் காவலர்கள் சோதனையில்...