×
Saravana Stores

நாங்கள் பேட்டிங்கில் தவறு செய்ததால் தோற்றுவிட்டோம்: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி

கவுகாத்தி: ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 34 பந்துகளில் 48 ரன்களை சேர்த்தார். இதன்பின் பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் – பேர்ஸ்டோவ் ஜோடி களமிறங்கியது. போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அதிரடி வீரர் ரூசோவ் 22 ரன்களிலும், தொடர்ந்து வந்த ஷஷாங்க் சிங் டக் அவுட்டாகியும் ஆவேஷ்கான் பந்தில் ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின்னர் சாஹல் பவுலிங்கில் பேர்ஸ்டோவ் 22 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். பின்னர் கேப்டன் சாம் கரன் – ஜித்தேஷ் சர்மா கூட்டணி இணைந்தது. இருவரும் நேர்த்தியாக ஆடினர். அப்போது சாஹல் பவுலிங்கில் ஜித்தேஷ் சர்மா 22 ரன்கள் எடுத்து வெளியேற, அஷுதோஷ் சர்மா களம் புகுந்தார்.

இதனிடையே சிறப்பாக ஆடிய கேப்டன் சாம் கரன் 38 பந்துகளில் அரைசதம் கடந்தார். கடைசி 2 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட போது, ஆவேஷ் கான் பவுலிங்கில் அபாரமாக 2 சிக்சர்கள் விளாசப்பட்டது. இறுதியாக பஞ்சாப் 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய கேப்டன் சாம் கரன் 41 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 63 ரன்களை சேர்த்தார். இந்த போட்டியில் 2 விக்கெட் மற்றும் 63 ரன்கள் குவித்த சாம்கரன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் 2024-ம் ஆண்டு சீசனில் பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது அந்த அணி தொடர்ந்து 4வது தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியிடம் தோற்ற ராயல்ஸ் நேற்று பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது.

எனினும் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 2வது இடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி போட்டியிலும் தோற்று சிஎஸ்கே அணி ஆர்சிபிஐ வீழ்த்தினால் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே 2வது இடத்திற்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் மூன்றாவது இடத்திற்கும் செல்லும். இந்த நிலையில் இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், “இந்த ஆடுகளம் இன்று கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இது நிச்சயமாக 140 ரன்கள் எடுக்கும் விக்கெட் கிடையாது. நாங்கள் கொஞ்சம் முயற்சி செய்து 160 ரன்கள் அடித்திருக்க வேண்டும். நாங்கள் பேட்டிங்கில் தான் தவறு செய்து விட்டோம். அங்கே தான் நாங்கள் தோற்றுவிட்டோம் என்று நினைக்கின்றேன். இன்றைய ஆட்டத்தில் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் இருந்திருந்தால் கொஞ்சம் நெருக்கடி கொடுத்திருக்கலாம். வெறும் 5 பவுலர்களை வைத்து போட்டியை நகர்த்துவது என்பது சவாலான காரியம் கிடையாது. ஆனால் இந்த 5 பவுலர்களை பயன்படுத்தி எனக்கு பழகிவிட்டது. இந்த 5 பவுலர்களுமே தரமான வீரர்கள்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அனைவரும் அமர்ந்து தற்போது நாம் தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும் நாம் ஒரு அணியாக என்ன தவறு செய்கிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த தொடரில் தற்போது முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த சமயத்தில் ஏதேனும் ஒரு வீரர் தன் பொறுப்பை உணர்ந்து என் அணிக்காக நான் வெற்றியை தேடி தருவேன் என்ற உணர்வில் விளையாட வேண்டும். இதை செய்யக்கூடிய வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். ஆனால் அனைவருமே சேர்ந்து செய்தால்தான், நம்மால் வெற்றி பெற முடியும். ஏனென்றால் இது தனிப்பட்ட வீரர்கள் விளையாடும் போட்டி கிடையாது. ஒரு அணியாக சேர்ந்து விளையாடும் ஆட்டம். எனினும் இது போன்ற நெருக்கடியான கட்டத்தில் தனிப்பட்ட ஒரு வீரர் அனைவருக்காகவும் எழுந்து போராட வேண்டும்’’ என்றார்.

The post நாங்கள் பேட்டிங்கில் தவறு செய்ததால் தோற்றுவிட்டோம்: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Sanju Samson ,Guwahati ,IPL ,Punjab ,Ryan Barrack ,Punjab… ,Dinakaran ,
× RELATED புத்தகம் வழங்கிய ஒருமாதத்தில் கோத்ரா...