×
Saravana Stores

மங்கலங்களை வாரி வழங்கும் சிவராத்திரி

சிவராத்திரி என்று சொன்னால், சிவனுக்கு உரியராத்திரி என்று பொருள். சிவன் என்கிற சப்தத்துக்கு பல பொருள்கள் உண்டு. சிவன் என்றால், தமிழில் ‘‘சிவந்தவன்’’ என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்கலகரமானது என்று பல பொருள்கள் உண்டு. முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமர் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன. எல்லா மங்கலங்களையும் வாரி வாரி வழங்கும் ராத்திரி சிவராத்திரி என்பதால் அதை மிக விசேஷமாகக் கொண்டாடுகின்றனர்.

சிவன் பெருமை பேசும் எட்டுத்தொகை

எட்டுத் தொகை நூல்களுள் ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் நான்கு தொகை நூல்களில் அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவபெருமானைப் பற்றியனவே ஆகும். இப்பாடல்களில், சிவபெருமானுடைய வடிவங்கள் சிறப்பாகப் பேசப் பெறுகின்றன. ஐங்குறுநூற்றில் உமாதேவியை ஒருபாகத்தில் கொண்ட நீலநிறம் வாய்ந்த திருமேனியை உடையவன் என்ற செய்தி, கடவுள் வாழ்த்துப் பாடலில் அமைந்துள்ளது. அகநானூற்றுப் பாடலில் ‘செவ்வான் அன்னமேனி’ என்றும், ‘நெற்றியில் இமையாத கண்ணை உடையவன்’ என்றும் கூறப் பெறுகிறது. புறநானூற்றுப் பாடலில் திருமுடியில் கொன்றை மாலை அணிந்தவன், கழுத்தில் கருப்பு நிறத்தை உடையவன் என்று குறிக்கப் பெறுகிறது.

பிற நாடுகளில் சிவன் பற்றிய வியப்பான செய்திகள்

ஆசியாவில் சிவாஸ் என்ற நகரில் சிவ வழிபாடும் இருந்து வந்ததை அறிய முடிகிறது. பிலிப்பைன்ஸ் நகர மக்கள் சிவபெருமானை சிவப்பன் என்று வணங்கி வருகின்றனர். ஜப்பானியர்களது புராதனமான கடவுள் சிவோ என்று அவர்களின் ஏடுகளில் தகவல் உள்ளது. பாபிலோனியர்களது செப்பேடுகளில் சிவன் என்ற வார்த்தை ஒரு மாதத்தினுடைய பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கேடியாவின் மக்கள் சிவன் ஒரு நட்சத்திரம் என்று குறிப்பிடுகின்றனர்.

நந்தி தேவர் உருவம்

தொல்லியல் மற்றும் புதைபொருள் ஆராய்ச்சியின் மூலம் கொரியாவில் பற்பல சிவலிங்கம் இருந்துள்ளதை அறியலாம். பாலித்தீவுகள், இலங்கை, இந்தோனேசியா எங்கிலும் சைவ வழிபாட்டை காண முடிகிறது. எகிப்து ஆற்றங்கரையில் ஆயிரம் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திபெத்தில் நாகரீகத்தில் சைவ வழிபாடு கி.பி. 5-ம் நூற்றாண்டிலேயே வேரூன்றியதை மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை திருப்பாவை, திருவெம்பாவை, விழா நடந்ததாக அறிய முடிகிறது. சாகர் வம்சத்து அரசன் மோகன் என்பவன் தன் நாட்டு நாணயங்களில் நந்திதேவர் சின்னங்களைப் பொறித்ததாக செய்தி உண்டு. சுக்கில யஜீர் வேதமும் சிவபூஜை சிறப்பை தெளிவாகக் கூறுகின்றது.

அமெரிக்காவில் குன்றின் மீது ஒரு கோயில்

சயாம் நாட்டு மன்னரின் முடிசூட்டு விழா நிகழ்ச்சிகளில் பாலி எழுத்துகளில் எழுதிய திருவெம்பாவை படிக்கப்பட்டதை அறிகிறோம். மிகப் பழைய காலமான கற்காலத்திலேயே சிவலிங்க வழிபாடு இருந்ததற்கான அடையாளக் கூறுகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திக்கின்றன. இதில் இருந்தே சைவத்தின் தொன்மையை நாம் அறிந்து கொள்ளலாம். வட அமெரிக்காவில் கொலராடோ என்னும் இடத்தில் உள்ள ஒரு குன்றின் மீது சிவன் கோயிலும் அதில் ஒரு பெரிய சிவலிங்கமும் 1937ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டன. இந்தக்கோயில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

வாழ்வின் விடியலை நோக்கும் சிவராத்திரி

சிவமந்திரம், சிவதரிசனம், சிவவழிபாடு ஆகிய மூன்றுமே ஒவ்வொரு வருடைய வாழ்கையிலும் மிகவும் முக்கியம். அப்படி வாழ்ந்து காட்டியவர்களை நாயன்மார்கள் என்று போற்றுகிறது பெரியபுராணம். சிவன் கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்குத் திரியைத் தூண்டிவிட்ட காரணத்தினால் அளவில்லாத புண்ணியம் பெற்ற எலி, மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்ததை புராணங்கள் தெரிவிக்கின்றன. மகாபாரதத்தில் வேத வியாசர் அர்ச்சுனனைப் பார்த்துச் சொல்கிறார். “எவன் ஒருவன் அனுதினமும் சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து, மனத்தூய்மையோடு ருத்ர ஜெபம் செய்கிறானோ, அவன் இந்த உலகில் எல்லாவகையான இன்பங்களையும் அடைவது நிச்சயம்” என்கிறார். சிவ தரிசனமும் சிவ நாமமும் பாபங்களை பஸ்பமாக்கி மகத்தான வாழ்க்கையைத்தரும். ‘‘ஓம் நமசிவாய’’ என்ற மந்திரத்தை அன்போடு உச்சரித்தாலே, பல பிறவிகளில் செய்த பாவம் விலகும். அதை இரவு முழுக்க ஓதி, விடியல் எனும் வாழ்வை நோக்கும் வழிபாடே சிவராத்திரி.

The post மங்கலங்களை வாரி வழங்கும் சிவராத்திரி appeared first on Dinakaran.

Tags : Shivratri ,Shiva ,Shivaratri ,
× RELATED வேதை மேல மறைக்காடர் கோயிலில்...