சென்னை: தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நடிகையை சீரழித்து பாலியலில் தொழிலில் தள்ள முயற்சி செய்த வழக்கில், கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 13ம் தேதி இரவு ராணி(30)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று வழிபடும் போது, அங்கு பூசாரியாக உள்ள கார்த்திக் முனுசாமி அறிமுகமானார். என்னை காரில் வீட்டில் விட்டுவிட்டு செல்கிறேன் என்று ஒருநாள் அழைத்து சென்றார். பிறகு எனது வீட்டிற்கு வந்த அவர், கோயில் தீர்த்தம் என்று கொடுத்தார். அதை குடித்த நான் மயக்கமடைந்தேன். பிறகு எழுந்து பார்த்த போது நான் நிர்வாணமாக படுக்கை அறையில் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தேன். பிறகு கார்த்திக் முனுசாமிக்கு போன் செய்த போது, அவர் வீட்டிற்கு வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டு, திருமணம் செய்து கொள்வதாக கூறினர்.
முதல் மனைவி பிரியா இருந்தும் தனக்கு வீட்டிலேயே தாலி கட்டி கணவன் மனைவி போல் குடும்பம் நடத்தினார். இதனால் கருவுற்ற என்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தார். பிறகு விஐபி நண்பர் என்று வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் நெருக்கமாக இருக்க வலியுறுத்தினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பிறகு அவரது தோழி சுவேதா என்னை பாலியல் தொழிலுக்கு செல்ல கட்டாயப்படுத்தினார்.
இதுகுறித்து கார்த்திக் முனுசாமி மனைவி பிரியாவிடம் கூறியதும், அவர் எனது கணவர் குறித்து புகார் அளிக்க கூடாது என்று மிரட்டினார். எனது வாழ்க்கையை சீரழித்த கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அந்த புகாரின் மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் புகார் உண்மை என்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து பூசாரி கார்த்திக் முனுசாமி மீது ஐபிசி 417, 354(ஏ), 312, 294(பி), 506(2) மற்றும் ஐடி பிரிவு 67ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனால் கார்த்திக் முனுசாமி, தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க உதவி கமிஷனர் கருணாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகை அளித்த புகாரில் கோயில் பூசாரி யின் செல்போனில் இளம் பெண்களின் ஆபாச புகைப்படங்கள் பல இருந்ததாகவும், தனது புகைப்படத்தை வேறு ஒரு நபருக்கு அனுப்பி இருந்ததாகவும் கூறியிருந்தார். பல குடும்ப பெண்களிடமும் அவர் பழக்கம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களையும் பல விஐபிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க தனிப்படை போலீசாருக்கு தொடர்ந்து தொழில் அதிபர்கள் பலர் போன் செய்து உதவி கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். அவரை கைது செய்தால், பல விவரங்கள் தெரியவரும் என்கின்றனர் போலீசார்.
கோயில் பூசாரி சஸ்பெண்ட்
பழமை வாய்ந்த காளிகாம்பாள் கோயில் நிர்வாகத்தினரை சென்னையில் வசிக்கும் விஸ்வகர்மா மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் இந்த கோயிலை நிர்வகித்து வருகிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வை மட்டும் செய்து வருகிறது. இந்த கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி, நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து 6 பிரிவுகளின் கீழ் கார்த்திக் முனுசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது உண்மை என்பது உறுதியானதையடுத்து பூசாரி கார்த்திக் முனுசாமியை பணி நீக்கம் செய்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
The post தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து நடிகையை சீரழித்த வழக்கு; கோயில் பூசாரி கார்த்திக்கை பிடிக்க தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.