×

மாநகரில் ஹெல்மெட் விழிப்புணர்வால் சாலை விபத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது

திருப்பூர், மே 15: திருப்பூர் மாநகரில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணிந்து செல்வதால் சாலை விபத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
டாலர் சிட்டி, குட்டி ஜப்பான் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்பூர் பகுதியில் பின்னலாடை தொழில்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில்களான டையிங், நிட்டிங், காம்பேக்டிங், வாசிங், விசைத்தறி உள்ளிட்ட தொழில்களும் மற்றும் உடுமலை பகுதியில் விவசாயமும், உள்ளிட்ட பல்வேறுதொழில்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இத்தொழில்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களான அசாம், ஒரிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பரவலாக வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.
மேலும், இங்குள்ள நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். தினமும் வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரயில்களில் 400க்கும் மேற்பட்டோர் புதிதாக திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றார்கள்.
இடைத்தரகர்கள் மூலம் ரயில் நிலையத்திலேயே அவர்களுக்கான பணி இடத்தை தேர்வு செய்து பிரித்து அனுப்புகின்றார்கள். மேலும், சிலர் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர். அப்படி உள்ள பல தரப்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்கும், இதர தேவைகளுக்காக செல்வதற்கும் பெரும்பாலும், இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துகிறார்கள்.
முதலில் பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டை பயன்படுத்தாமல் இருந்தனர். ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு அரசு சார்பிலும், போக்குவரத்து போலீஸ் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்ததன் விளைவாகவும், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விதித்த அபராதமும் தான் பெரும்பாலானவர்களை தற்போது ஹெல்மெட் அணிய வைத்துள்ளது.
அப்படி பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய தொடங்கியதால் தான் தற்போது சாலை விபத்துகளில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. திருப்பூரில் நடக்கும் சாலை விபத்துகளில் இறப்பவர்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள் அல்லது ஹெல்மெட்டை முறையாக அணியாமல் வருபவர்கள் தான்.
இது குறித்து மாநகர போலீஸ் அதிகாரி கூறியதாவது:
திருப்பூர் மாநகரில் தற்போது விபத்துகள் குறைந்துள்ளன. குறிப்பாக, திருப்பூரில் தற்போது 80 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து தான் இரு சக்கர வாகனத்தை இயக்குகின்றனர். அதில் 20 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை இயக்குகின்றனர்.
அதிலும் 10 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் வைத்து கொண்டு செல்கிறார்கள். ஹெல்மெட் வைத்திருந்தும் அணியாமல் சென்றாலும் ஒரே அபராதம் தான் விதிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மாநகரில் ஹெல்மெட் விழிப்புணர்வால் சாலை விபத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dollar City ,Little Japan ,
× RELATED குட்டி ஜப்பான் சிவகாசியில் பள்ளி, கல்லூரி நோட்டுகள் தயாரிப்பு பணி ஜரூர்