×

திருப்பதியில் பரபரப்பு; தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரசார் தாக்குதல்

திருப்பதி: திருப்பதி மாவட்டம் சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் திருப்பதி பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் புலிவர்த்தி நானி நேற்று அங்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, பல்கலைக்கழக சாலை அருகே திடீரென ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் பானு என்பவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து காரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினார். புலிவர்த்தி நானிக்கு பாதுகாப்புக்கு வந்த மாநில காவல் துறையைச் சேர்ந்த தரணி மீதும் தாக்குதல் நடத்தியதால் அவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் தாக்கப்பட்டதை அறிந்த அக்கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்து சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் வாக்கு பெட்டிகளை பத்திரப்படுத்தி வைக்கும் பத்மாவதி பல்கலைக்கழக வளாகத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்தும் அளவிற்கு பாதுகாப்பு இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கார் அடித்து நொறுக்கப்பட்டது. இரண்டு சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். ஏற்கனவே சந்திரகிரி தொகுதி பதற்றம் நிறைந்த தொகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் சுமூகமாக முடிந்த மறுநாள் இதுபோன்ற வன்முறைகள் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தாக்குதலில் காயம் அடைந்த நானி, போலீஸ்காரர் தரணி ஆகியோருக்கு திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.

The post திருப்பதியில் பரபரப்பு; தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரசார் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : YSR ,Congressman ,Tirupathi ,Chandragiri Legislative Constituency ,Tirupathi District ,Tirupati Padmavati Women's University ,Telugu Desam Party ,Puliborty Nani ,Telugu ,Nation ,
× RELATED ஆந்திராவில் நடுரோட்டில் வழிமறித்து...