×
Saravana Stores

கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர் நேரில் ஆஜர்

கள்ளக்குறிச்சி,மே 15: கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில், தனியார் பள்ளி மாணவி மதி உயிரிழந்த விவாகரம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது பள்ளி நிர்வாகிகளை பார்த்ததும் மாணவியின் தாய் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் மதி (17), பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 2022 ஜூலை 13ம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்த பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய 5 பேரில் வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய இரண்டு பேரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இருந்து சிபிசிஐடி போலீசார் நீக்கி இருந்தனர்.
விடுப்பட்ட வழக்கு ஆவணங்கள், பள்ளி வளாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், ஜிப்மர் மருத்துவக் குழுவின் ஆய்வு அறிக்கைகளை வழங்ககோரி தாய் செல்வி, மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்ட ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய இருவரையும் மீண்டும் வழக்கில் சேர்த்து விசாரிக்கவும், சில முக்கிய சிசிடிவி காட்சி ஆதாரங்களை தங்கள் தரப்பிற்கு வழங்கவும் கோரி வழக்கறிஞர் பாப்பாமோகன் ஏற்கனவே வாதிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு மூன்றாவது முறையாக கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகிய மூவரும் ஆஜராகினர். மாணவி மதியின் தாய் செல்வி தரப்பு வழக்கறிஞர் பாப்பாமோகன் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து விசாரணையை மே 28க்கு ஒத்திவைத்து நீதிபதி ராம் உத்தரவிட்டார். தனியார் பள்ளி நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது வளாகத்தில் நின்றிருந்த மாணவி மதியின் தாய் செல்வி நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

The post கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர் நேரில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,
× RELATED அரசு பள்ளியில் புறக்கணிப்பதாக கூறி...