×
Saravana Stores

நுகர்வோர் பாதுகாப்பு சட்ட வரம்பிற்குள் வரமாட்டார்கள் வக்கீல்கள் மீது சேவை குறைபாடு வழக்கு தொடர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: நுகர்வோர் பாதுகாப்பு சட்ட வரம்பிற்குள் வரமாட்டார்கள் என்பதால் வக்கீல்கள் மீது சேவை குறைபாடு வழக்கு தொடர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம் திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு வருமாறு: வழக்கறிஞர் தொழில் தனித்துவமானது.

அந்த பணியின் தன்மை சிறப்பு வாய்ந்தது. அதை மற்ற தொழில்களுடன் ஒப்பிட முடியாது. எனவே வழக்கறிஞர்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் வரம்பிற்குள் வரமாட்டார்கள். எனவே வக்கீல்கள் மீது நுகர்வோர் நீதிமன்றங்களில் சேவை குறைபாடு தொடர்பாக வழக்குத் தொடர முடியாது. ஒரு வழக்கறிஞர் தனது பணியின் போது தனது சேவைகளை வழங்கும் விதத்தில் வாடிக்கையாளரால் கணிசமான அளவு நேரடிக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு வழக்கறிஞரால் பெறப்படும் சேவைகள் தனிப்பட்ட சேவை என்ற ஒப்பந்தமாக இருக்கும். எனவே, சேவை என்பதன் வரையறையில் இருந்து வக்கீல் தொழிலுக்கு விலக்கு அளிக்கப்படும். எனவே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019ன் பிரிவு 2 (42)ல் உள்ள சேவை வரையறையின் விலக்களிக்கப்பட்ட பகுதிக்குள் வக்கீல் தொழில் வரும். எனவே வக்கீல் தொழிலில் ஈடுபடும் வழக்கறிஞர்களுக்கு எதிராக சேவையில் குறைபாடு இருப்பதாகக் கூறப்படும் புகார் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019ன் கீழ் பராமரிக்கப்படாது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கம் நுகர்வோருக்கு சரியான நேரத்தில் பயனுள்ள நிர்வாகத்தை வழங்குவது, அவர்களின் தகராறுகளைத் தீர்ப்பது ஆகும். அனைத்து தொழில்களும் சேவை சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டால், வழக்குகள் குவிந்துவிடும். எனவே சட்டத் தொழிலை வேறு எந்த பாரம்பரியத் தொழில்களுடன் ஒப்பிட முடியாது. இது வணிக ரீதியானது அல்ல. ஆனால் அடிப்படையில் ஒரு சேவை சார்ந்த உன்னதமான தொழில். நமது அரசியலமைப்புச் சட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நீதித்துறையின் பரிணாமம் வழக்கறிஞர்களின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாகும் இவ்வாறு தெரிவித்தனர்.

The post நுகர்வோர் பாதுகாப்பு சட்ட வரம்பிற்குள் வரமாட்டார்கள் வக்கீல்கள் மீது சேவை குறைபாடு வழக்கு தொடர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,Bela M Trivedi ,Pankaj Mittal ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை என்பது நீதிமன்ற பகுதி...