×

மோட்டார் வாகனங்கள் தானாக தீப்பற்றி எரிவதற்கு காரணம் என்ன? போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை

சென்னை: மோட்டார் வாகனங்கள் தானாக தீப் பற்றி எரிவதற்கான காரணம் மற்றும் அதை தவிர்ப்பது குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கார், பைக் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்று உற்பத்தி ஆகும் நிலையில், மோட்டார் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதே நேரம் மோட்டார் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை சமாளிக்க, பலரும் தங்கள் வாகனங்களை இயற்கை எரிவாயு மூலம் (காஸ்) இயக்க முயற்சி செய்கின்றனர்.

இப்படி காஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட 4 சக்கர வாகனம் மற்றும் 3 சக்கர வாகனங்கள் அதிக மைலேஜ் கொடுப்பதுடன், அதற்கான செலவும் குறைந்த அளவே உள்ளது. ஆனால், இதுபோன்ற காஸ் சிலிண்டர் பொருத்தி இயக்கப்படும் வாகனங்கள் சமீபகாலமாக பயணம் செய்து கொண்டிருக்கும்போது அல்லது நிறுத்தி வைக்கும்போது திடீர் திடீரென தீப்பற்றி எரிவதாக புகார் கூறப்படுகிறது. இதுபோன்ற காஸ் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் தீ பற்றி எரியாமல் இருக்க தமிழக அரசின் போக்குவரத்து ஆணையம் சார்பில் சில அறிவுரைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த விபத்துக்கள் பற்றி ஆய்வு செய்தபோது, மோட்டார் வாகனங்களில் மாறுதல் செய்யப்படுகையில் அங்கீகரிக்கப்படாத CNG (அழுத்தப்பட்ட இயற்கை வாயு) மற்றும் LPG (திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு) மாற்றங்கள், அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகிறது என தெரியவருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகனச் சட்டம் (மற்றும்) விதிகளின்படி குற்றமாகும். எனவே, வாகன உரிமையாளர்கள் இந்த வகையான செய்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* அங்கீகரிக்கப்படாத CNG (அழுத்தப்பட்ட இயற்கை வாயு) மற்றும் LPG (திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு) மாற்றங்கள், அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றம் செய்யப்படுவதால், வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகின்றன.
* வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யக்கூடாது.
* அப்படி செய்வது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம்.
* வாகன உரிமையாளர்கள் இந்த வகையான செய்கையில் ஈடுபட வேண்டாம்.

 

The post மோட்டார் வாகனங்கள் தானாக தீப்பற்றி எரிவதற்கு காரணம் என்ன? போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu government ,India ,Dinakaran ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...