×

ஆன்லைனிலும் தங்க நகைகள் விற்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

ஜுவல்லரி தொழிலில் கலக்கி வரும் நாகராணி அருண்

‘‘இந்த துறை மட்டுமல்ல எந்த துறையில் பெண்கள் துணிந்து இயங்கினாலும் வெற்றி நிச்சயம்தான்’’ என்கிறார் சவாலான நகைத் தொழிலை ஆன்லைனில் அசத்தலாக செய்து வரும் பெண் தொழில்முனைவோர் நாகராணி அருண். உடுமலைப்பேட்டையில் தனது கணவரோடு சேர்ந்து சாய் ஜுவல்லரி என்ற நகைக்கடையினை நடத்தி வருவதோடு அதனை ஆன்லைன் மூலமாகவும் விற்பனையும் செய்து வரும் நாகராணி அருண், நகை விற்பனைத் துறையில் அவர் சந்திக்கும் சவால்கள், வெற்றிகள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘நான் உடுமலைப்பேட்டையில் எம்.பி.ஏ படித்து விட்டு ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தேன். எனது கணவரும் எம்.பி.ஏதான். அவர் பிரபல நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மருத்துவமனையில் வேலை பார்த்தாலும், நான் ஆன்லைன் மூலமாக சிறிய அளவில் பிசினஸ் செய்து வந்தேன். அதில் செட்டிநாடு காட்டன் புடவைகள், ஆர்ட்டிபிஷியல் நகைகள், சுடிதார், குர்தி வகைகள் மற்றும் கைப்பைகளை விற்பனை செய்து வந்தேன். அதன் அடுத்த கட்டமாக ஆரம்பித்ததுதான் இந்த நகை வியாபாரம்.

* நகைக் கடை வைக்கும் எண்ணம் தோன்ற காரணம்…

நானும் என் கணவர் இருவரும் வேலைக்குப் போனாலும், எங்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கிடையாது. கிடைக்கும் சம்பளம் எங்களின் அன்றாட செலவிற்கே சரியாக இருந்தது. அதனால் எங்களின் வருமானத்தை அதிகரிக்க விரும்பினோம். மாதச் சம்பளத்தில் வேலை பார்த்தால் நம்முடைய வருமானம் படிப்படியாக அதிகரிக்குமே தவிர நாம் எதிர்பார்க்கும் சம்பளம் பெற முடியாது. மேலும் எங்க இருவருக்குமே சொந்தமாக ஏதாவது ஒரு வியாபாரம் செய்ய வேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது.

ஆனால் என்ன செய்வதுன்னு அப்ப தெரியவில்லை. நான் ஆன்லைனில் பிசினஸ் செய்த போது என் கணவரும் வேலை நேரம் போக கிடைக்கும் நேரத்தில் தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்தார். மேலும் நகைக்கடையில் பதினாறு வருடம் வேலை பார்த்த அனுபவமும் அவருக்கு இருக்கு.

அதனை முன் வைத்து ஏன் நகைத் தொழிலில் ஈடுபடக்கூடாதுன்னு தோன்றியது. ஒரு கட்டத்தில் இருவருமே பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, தைரியமாக இந்த நகை பிசினஸில் இறங்கினோம். அந்த துணிச்சலான எண்ணத்தின் வெளிப்பாடுதான் எங்க நகைக் கடை. பொதுவாக நகைத் தொழிலில் பெரிய பெரிய ஜாம்பவான்கள்தான் இருப்பாங்க. எங்களை போன்ற எளிய நபர்களும் அந்தத் தொழிலில் ஈடுபடுவது என்பது கனவாகத்தான் இருந்தது. அந்த கனவினை நாங்க இருவரும் சேர்ந்து நினைவாக்கி இருக்கிறோம்.

* நகைக்கடை வைப்பது சாத்தியமானது எப்படி..?

நாங்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு வியாபாரத்தில் இறங்க போவதாக வீட்டில் சொன்ன போது, எல்லோரும் அதை எதிர்க்கதான் ெசய்தாங்க. மாதம் ஒரு குறிப்பிட்ட வருமானம் வரும். சொந்தமாக தொழில் செய்தால், அதில் வருமானம் நிலைத்து இருக்காது என்று பயந்தார்கள். உறவினர்கள் மட்டுமில்லை நண்பர்கள் பலரும் நாங்க எடுத்த முடிவினை விமர்சனம் தான் செய்தார்கள். ஆனால் நாங்க அதைப் பற்றி யோசிக்காமல், எங்களின் இலக்கை நோக்கி பயணிக்க முடிவு செய்தோம்.

எங்க தெருவில் மட்டுமே 65 நகைக் கடைகள் உள்ளது. இதில் நாங்கள் எப்படி கால் ஊன்றப் போகிறோம் என்ற அக்கறை தான் மற்றவர்களின் பயத்திற்கு காரணம். நாங்கள் துணிந்து இறங்கினோம். இப்போது வெற்றியும் பெற்றுள்ளோம். எளிய பொருளாதார பின்னணியைக் கொண்ட எங்களுக்கு முதலீடு என்பது நம்பிக்கை மற்றும் நாணயம்தான். எங்களை நம்பி சரக்குகளை தந்த அன்பர்களுக்குதான் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். என் கணவரின் தொழில் பக்தி மற்றும் அனுபவம் இரண்டுமே எங்களுக்கு பெரிதும் கைகொடுத்தது எனலாம். கடையில் அமர்ந்து வியாபாரத்தை கணவர் கவனிக்க ஆன்லைன் விற்பனைகளை நான் பார்த்துக் கொண்டு வருகிறேன்.

*ஆன்லைனில் தங்க நகைகள் வாங்க முன் வருகிறார்களா..?

நான் ஏற்கனவே ஆன்லைன் வியாபாரத்தில் இருந்ததால் எனக்கான வாடிக்கையாளர்கள் இருந்தனர். அவர்களை நம்பி துணிந்து இறங்கினேன். துணிகளையே நான் மிகவும் கவனத்துடன்தான் தேர்வு செய்வேன். காரணம், நான் ெகாடுக்கும் பொருள் தரமாக இருந்தால்தான் மக்கள் திரும்பவும் நம்மை நாடி வருவார்கள். துணிகளையே நான் கவனமாக தேர்வு செய்யும் போது தங்க நகைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என்பதில் நானும் என் கணவரும் மிகவும் உறுதியாக இருந்தோம்.

நகையின் தரத்தில் நாங்க என்றுமே காம்பிரமைஸ் செய்யக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டோம். எங்களின் பொருட்கள் தரமாக இருக்கும் என்பதால், என்னுடைய வாடிக்கையாளர்கள் வாங்க முன்வந்தார்கள். தங்க நகைகள் மட்டுமின்றி வெள்ளிப் பொருட்கள், ஐம்பொன் நகைகள், ஒரு கிராம் கோல்டு, மைக்ரோ பாலீஷ் நகைகள், ஸ்படிக மாலைகள். கருங்காலி மாலைகள் என எங்களின் வியாபாரத்தினை விரிவுபடுத்தினோம். நேரடியாக நகைகளை வாங்க வந்தாலும், அதே அளவில் ஆன்லைன் முறையிலும் விற்பனையாகிறது.

*கருங்காலி மற்றும் ஸ்படிக மாலைகள்…

கருங்காலி மாலைகள் மற்றவர்களை போலவே எங்களது வாழ்விலும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் அது சற்றே மிகையில்லை. பொதுவாக கருங்காலி மாலை எதிர்மறை எண்ணங்களை விலக்கி நேர்மறையாக வைத்திருக்க உதவும். நல்ல தொழில் வளர்ச்சி கொடுக்கும், நம்மிடம் பணப் புழக்கத்தினை அதிகரிக்கும். எங்களிடம் ஒரிஜினல் கருங்காலி மாலை உள்ளது. கருங்காலி மாலையை தங்கத்திலும் கட்டித் தருகிறோம். சாதாரண நூலில் கட்டிய மாலை, ஒரிஜினல் சொக்க வெள்ளியில் கட்டப்பட்ட கருங்காலி மாலையும் எங்களிடம் இருக்கிறது. கருங்காலி மாலையில் வெள்ளி கப்பு வைத்தும் கட்டி கொடுக்கிறோம்.

கருங்காலி மாலைகளை ஒரிஜினல் வெள்ளியான 92.5 தரத்தில் செய்து தருகிறோம். நான் இதுவரை 6000க்கும் அதிகமான கருங்காலி மாலைகளை விற்பனை செய்துள்ளேன். இந்தியாவில் மட்டுமல்ல துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனைவருமே விரும்பி வாங்கி அணிகின்றனர். பாசிட்டிவ் எண்ணங்களுக்காக கருங்காலி மாலை பயன்படுத்துகிறார்கள் பலர். இந்த வெயிலுக்கு நம்மிடம் அதிக அளவில் ஸ்படிக மாலையினைதான் ஆர்டர் செய்கிறார்கள். ஸ்படிக மாலை உடல் சூட்டை குறைத்து குளுமையாக வைத்திருக்கும். நாங்க ஒரிஜினல் ஸ்படிகம்தான் விற்பனை செய்கிறோம். இதனை வெள்ளியிலும் கட்டித் தருகிறோம்.

* ஐம்பொன் மற்றும் மைக்ரோ பாலீஷ் நகைகள்…

மைக்ரோ பாலீஷ் நகைகள் என்பது பார்ப்பதற்கு தங்கம் போல இருக்கும். அதில் ஐம்பொன் கொலுசுகள் செய்து தருகிறோம். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை எல்லோருக்குமான அளவில் கொலுசு உள்ளது. ஆண்களுக்கான கை காப்புகளும் அதிகம் விற்பனையாகிறது. தங்கத்தை விடவும் பாலீஷ் செய்யப்பட்ட நகைகளைதான் மக்கள் அதிகம் விரும்புறாங்க. இது தங்கம் இல்லை என்று சொன்னாலும் யாராலும் நம்ப முடியாது.

அவ்வளவு தத்ரூபமாய் தங்கம் போலவே மின்னும். இதனை தவிர தாலிக் கொடிகள், செயின்கள், வளையல்கள், பிரேஸ்லெட்கள் என அனைத்தும் விற்பனையில் உள்ளது. தற்போது ராக்கெட் விலையில் தங்கம் ஏறி இருக்கிறது. அதனை வாங்கி பாதுகாப்பதற்கு இது போன்ற பாலீஷ் நகைகளை விதவிதமான டிசைனில் அணியவே விரும்புகிறார்கள். பார்க்க தங்கம் போலவே இருக்கும் மற்றும் பாதுகாப்பானதும் கூட.

*எதிர்கால திட்டங்கள்…

தற்போது சிறிய கடையாகத்தான் வைத்துள்ளோம். நானும் கணவர் இருவர் மட்டுமே பார்த்துக் கொள்கிறோம். எங்க கடையை விரிவுபடுத்த வேண்டும். நிறைய புதுப்புது டிசைன்களை கொண்டு வரவேண்டும். பலருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும். மேலும் ஆன்லைன் விற்பனையையும் அதிகப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமும் உள்ளது. அதற்காக நானும் எனது கணவர் இருவரும் கடுமையாக உழைத்து வருகிறோம். கண்டிப்பாக வெற்றியும் பெறுவோம்.

*உங்களை போல பெண் தொழில் முனைவோருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…

பெண்கள் நகைத் தொழிலில் மட்டுமில்லை எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் துணிந்து செயல்பட வேண்டும். வேலைக்கு சென்று அதில் வரும் வருமானம் போதும் என்று நினைக்க வேண்டாம். அதில் இருந்து மேலும் முன்னேற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயிங்கள். அப்போதுதான் உங்களால் ஒரு தொழிலில் தைரியமாக செயல்பட முடியும்.

பரந்து விரிந்த இந்த உலகில் உங்களுக்கான சிறந்த வாய்ப்புகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கிறது. துணிச்சலாய் துவங்குங்கள்… தெளிவாய் தேர்வு செய்யுங்கள்… உங்களுக்கான பாதையில் வெற்றி வசப்படும். உடுமலைப்பேட்டை அருகேயுள்ள சிறிய ஊரிலிருந்து என்னால் சாதிக்க முடியும் என்ற ேபாது, கண்டிப்பாக நிச்சயமாக உங்களாலும் சாதிக்க முடியும்’’ என்ற நாகராணி அருண் சிறந்த பெண் தொழில்முனைவோர், சிறந்த ஆன்லைன் விற்பனையாளர் என்பதற்கான விமன்ஸ் லீடர்ஷிப் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

தொகுப்பு: தனு.ஜே

 

The post ஆன்லைனிலும் தங்க நகைகள் விற்கலாம்! appeared first on Dinakaran.

Tags : Kunkumum ,Nagarani Arun ,Nagarani ,Dinakaran ,
× RELATED பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!