×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*கடலைப்பருப்பு, துவரம்பருப்பு தலா ஒரு கப், நறுக்கிய வாழைப்பூ ஒரு கப், உப்பு, மிளகாய் சேர்த்து ஊறவைத்து கெட்டியாக அரைத்து உருண்டைகளாக்கி ஆவியில் வேகவைத்து குழம்புகளில் போட்டால் சுவையாக இருக்கும்.

* லெமன் ரைஸ், பொரியல் போன்றவற்றில் மிளகாய்க்கு பதிலாக இஞ்சியை தோல் நீக்கி துருவிச் சேர்த்தால் மணமாக இருக்கும். உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.

– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்.

* வெங்காய ஊத்தப்பம் செய்யும் போது அது இரு புறமும் வெந்து இருந்தால் தான் சுவையாக இருக்கும். சீக்கிரம் ஜீரணமாகும். அதன் நடுப்பகுதியில் சிறு துளை செய்து எண்ணெய் ஊற்றினால் விரைவாக வெந்து விடுவதுடன் சுவையும் ஜோராக இருக்கும்.

* வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ போன்றவற்றில் கூட்டு வைக்கும் போது தேங்காய் எண்ணெயில் தாளியுங்கள். அதிக ருசியாக இருக்கும்.

– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

* கடலைப்பருப்பை வேகவைத்த உடன் பச்சைமிளகாய், தேங்காய் துருவல் சிறிது உப்பு எல்லாம் மிக்ஸியில் அரைத்து வேகவைத்த பருப்பில் பிசறி பிறகு தாளிக்க கடலைப்பருப்பு மசியல் மிகவும் சுவையாக இருக்கும்.

* பீட்ரூட்டை குக்கரில் வேகவைத்து கொண்டு பின்பு நறுக்கினால் சுலபமாக நறுக்கவரும். தோல் உரிந்து விடும்.

* மோர்க்குழம்பு தயார் செய்து இறக்கி வைக்கும் முன்பாக சிறிது தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொஞ்ச நேரம் கழித்து இறக்கினால் குழம்பு சுவையாக இருக்கும்.

* பாட்டில் மூடியைத் திறக்க முடியாமல் இறுக்கமாக இருந்தால், ஈரத்துணியால் மூடியை இறுகப் பற்றிக் கொண்டு திருகினால் மூடியை சுலபமாக திறந்து விடலாம்.

– கே. பிரபாவதி, கன்னியாகுமரி.

* வெண்டைக்காயை ஃபிரிட்ஜில் வைக்கும்போது அதன் நுனி மற்றும் தலைப்பகுதியை வெட்டி வைத்தால் நீண்ட நாட்கள் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.

* எப்போது வடை அல்லது துவையல் செய்தாலும் வேப்பம் பூ சேர்த்து செய்தால் ருசியாக இருப்பதுடன் குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப் பூச்சி தொல்லையும் நீங்கும்.

* பொரியலில் தேங்காய்க்கு பதில் புழுங்கல் அரிசியை பொன்னிறமாக வறுத்து அரைத்து பொரியலின் கடைசியில் சேர்த்தால் மணமும், சுவையும் கூடுதலாக கிடைக்கும்.

* சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி வட்டவடிவமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறு மொறுப்பாக இருக்கும்.

– கே. ஆர். இரவீந்திரன், சென்னை.

* இரவில் மீந்துபோன உளுந்துமாவு கொழுக் கட்டைகளை மறு நாள் காலை நன்கு உதிர்த்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளியுடன் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி எடுத்தால் சுவையான கொழுக்கட்டை உப்புமா கிடைக்கும்.

– என். பர்வதவர்த்தினி, சென்னை.

* பச்சை கொத்தமல்லி இலை துவையல் அரைக்கும் போது மிளகாய்க்கு பதில் மிளகை வறுத்து அரைத்து விட மணம் மாறுதலாக இருப்பதுடன் சுவையும் கூடுதல்.

* இடியாப்பத்துக்கு மாவு பிசையும் போது அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேருங்கள். இடியாப்பம் அதிக மென்மையாக இருக்கும்.

* பச்சை பட்டாணி வேகவைக்கும் போது அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை தூவுங்கள். பட்டாணி சுவை அதிகமாக இருக்கும்.

– கே.கவிதா, வேலூர்.

* தோசை ஊற்றும் போது கல்லில் ஒட்டிக் கொண்டால், கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு கல்லில் தேய்த்து விட்டு பிறகு ஊற்றினால் தோசை சரியாக வரும்.

* செம்பு பாத்திரங்களில் காய்கறிகளை வேகவைக்கக் கூடாது. அப்படி வேகவைப்பதினால் அவற்றிலுள்ள வைட்டமின் ‘சி’ சத்து அழிந்து விடும்.

– கே. விஜயலட்சுமி, திருவண்ணாமலை.

* வாட்டர் பில்டரில் கொஞ்சம் துளசியைப் போட்டு விட்டால் தண்ணீர் மணமாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.

* சில்வர் பேப்பரில் சப்பாத்தி, புரோட்டாவை சுற்றிவைத்தால் வெகுநேரம் வரை சூடாக இருக்கும்.

* கோதுமை மாவை நன்கு சலித்து, சிறிதளவு டேபிள் சால்ட்டை சேர்த்து வைத்தால் வண்டுகள் வராது.

– க. நாகமுத்து, திண்டுக்கல்

கத்தரிக்காய் சாம்பல்!

தேவையானவை:
குண்டு கத்தரிக்காய் – 300 கிராம்,
உருளைக்கிழங்கு – 300 கிராம்,
தக்காளி – 300 கிராம்,
நல்லெண்ணெய் – 150 கிராம்,
வெங்காயம் – 3,
பச்சை மிளகாய் – 8,
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
தண்ணீர் – 1 கப்,
கடுகு – 1 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

செய்முறை: கத்தரிக்காய், உருளைக் கிழங்கு, தக்காளி மூன்றையும் நன்றாக கழுவிய பிறகு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வானொலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி நறுக்கிய காய்கறிகளையும் போட்டு, தண்ணீர் ஊற்றி குக்கரில் நன்கு வேக வைத்து, ஆறியதும் மத்தால் மசித்துக் கொள்ளவும். வானொலியை அடுப்பில் வைத்துக் சூடானதும், எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதனை மசித்த கத்தரிக்காய் கலவையில் சேர்த்து இறக்கவும். பிறகு கொத்தமல்லி தழையை தூவவும். இதனை பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

– சௌமியா சுப்ரமணியன், சென்னை.

 

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dinakaran ,
× RELATED சருமப் பாதுகாப்புக்கு வைட்டமின் தரும் பயன்கள்!