ஓமலூர் : ஓமலூர் அருகே பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி உட்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் பன்னீர்செல்வம். பொட்டியபுரம் கிராமம் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் சேட்டு மகன் விஸ்வநாதன். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், உயிர் நண்பர்களாக பழகி வந்தனர்.
இருவரும் சேர்ந்து பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இருவரும் ஒருவரை அழிக்க திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 11ம் தேதி இரவு பன்னீர்செல்வத்தின் வீடு மீது, விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேர் பெட்ரோல் குண்டை வீசி தாக்கியுள்ளனர். அதேபோல பொட்டியபுரம் அண்ணாநகர் காலனியில் உள்ள விஸ்வநாதன் வீடு மீதும் அன்றைய தினமே 4 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், 2 கிராம மக்களும் அச்சமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து இருதரப்பு புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஓமலூர் இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் பெட்ரோல் குண்டு வீசியவர்களை தேடி வந்தனர்.
இதில், பன்னீர்செல்வம் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய பொட்டியபுரம் அண்ணாநகர் காலனியை சேர்ந்த விஸ்வநாதன் (24), கருப்பூரை சேர்ந்த அஜித் (21), பாலாஜி (20), மேட்டூரை சேர்ந்த பெரோஸ் (32), திருப்பூரை சேர்ந்த ரமேஷ் (35) ஆகியோரையும், விஸ்வநாதன் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய ராஜா (எ) ராஜபாண்டியன் (22) ஆகிய 6 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த காமலாபுரம் பன்னீர்செல்வத்தை (25) போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் திருப்பூரை சேர்ந்த ரமேஷை, விஸ்வநாதன் ஓமலூர் வருமாறு அழைத்துள்ளார். காரில் வந்த ரமேஷ், தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு நள்ளிரவு நேரத்தில், பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்று பெட்ரோல் குண்டு வீசியதும், இவர்கள் சிறையில் சந்தித்து நண்பர்களானதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 7 பேரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.
The post ஓமலூர் அருகே பெட்ரோல் குண்டுவீசிய வழக்கில் 7 பேர் கைது appeared first on Dinakaran.