×

நாகை அருகே தண்டவாளத்தில் படுத்து தூங்கிய போது டெமு ரயில் ஏறி வாலிபர் உடல் சிதறி பலி

*கை, கால்கள் துண்டாகி 2 நண்பர்கள் படுகாயம்

வேதாரண்யம் : நாகப்பட்டினம் அருகே போதையில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியபோது டெமு ரயில் மோதி உடல் சிதறி வாலிபர் உயிரிழந்தார். இவரது 2 நண்பர்கள் கை, கால்கள் துண்டாகி படுகாயமடைந்தனர்.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு கடந்த ஓராண்டாக டெமு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில், கடந்த சில வாரங்களாக திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் அதிகாலை 4.30 மணிக்கு திருத்துறைப்பூண்டியிலிருந்து புறப்பட்டு 5.50 மணிக்கு அகஸ்தியம்பள்ளி வந்தடையும்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருத்துறைப்பூண்டியிலிருந்து புறப்பட்ட டெமு ரயில் அதிகாலை 4.55 மணிக்கு வேதாரண்யம் அருகே மணக்காடு என்ற இடத்தில் வந்தபோது தண்டவாளத்தில் படுத்திருந்த 3 பேர் மீது ரயில் ஏறியது. இதில் ஒருவர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் கை, கால்கள் துண்டாகி படுகாயமடைந்தனர். தகவலறிந்த திருவாரூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் பலியானவர் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக போலீசார் முதல் கட்ட விசாரணை நடத்தியதில், உடல் சிதறி பலியானவர் வேதாரண்யம் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த காளிதாசன் மகன் குமாரசாரதி(18) என்பதும், காயமடைந்தவர்கள் அவரது நண்பர்களான துளசியாபட்டினத்தை சேர்ந்த பிரபாகரன்(18), வேதாரண்யத்தை சேர்ந்த தூளசிநாரயணன்(18) என்பதும், திருப்பூரில் வேலை பார்த்து வந்த 3 பேரும் மணக்காடு மகாமாரியம்மன்கோயில் சித்திரை திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வந்து இருந்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு கோயிலில் சாமி தரிசனம் செய்த 3 பேரும் போதையில் தண்டவாளத்தில் தூங்கிகொண்டிருந்த நேரத்தில் விபத்து நடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாகை அருகே தண்டவாளத்தில் படுத்து தூங்கிய போது டெமு ரயில் ஏறி வாலிபர் உடல் சிதறி பலி appeared first on Dinakaran.

Tags : Nagai ,Vedaranyam ,Temu ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED சிறுமியை கடத்திய கண்டக்டர் கைது: ரயிலில் மடக்கிய போலீஸ்