×
Saravana Stores

வித்தியாசமான தகவல்கள்

*சின்னசேலம் ஆறகழூரில் உள்ள காமநாதேஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்களையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம்.
* சக்தியோடு கூடிய தட்சிணாமூர்த்தியை திருக்கள்ளில் தலத்திலும் சுருட்டப்பள்ளி தலத்திலும் பார்த்துப் பரவசமடையலாம்.
* காங்கேயம் முருகன் ஆலயத்தில் கால்நடைகள் நோய்நொடியின்றி வளமாக வாழ கதனை என்று கூறப்படும் அதிர்வெடி வழிபாடு நடைபெறுகிறது.
* சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அழகிரிநாதசுவாமி ஆலயத்தில், சிம்ம முகத்துடன் அனுமனை தரிசிக்கலாம்.
* வந்தவாசிக்கு அருகில் உள்ள ஆவணியாபுரத்தில் சிம்ம முகத்தோடு அருள்கிறாள் மகாலட்சுமி! பக்தர்களைக் காக்க, யாகத் தீயால் எரிந்த, அடையாளம் காண முடியாத, முகமில்லாத நரசிம்மர் மடியில் அமர்ந்திருக்கிறாள். அந்த நரசிம்மரின் முகத்தை தேவிதான் ஏற்று அருள்பாலிக்கிறாள்.
* ஆந்திராவில் உள்ள மங்களகிரி பானக நரசிம்மருக்கு நாம் எவ்வளவு பானகம் நிவேதனம் செய்தாலும், அந்தப் பானக அளவில் பாதியை விழுங்கி, மீதியை பிரசாதமாக நிறுத்தி விடுகிறார். இனிப்பான பானகம் எத்தனையோ லிட்டர் கொண்டு சேர்த்தாலும் அத்தலத்தில் ஈ எறும்பு இல்லாதது அற்புதம்.
* ராமபிரான் நான்கு கரங்களுடன் மூலவராக செங்கல்பட்டிற்கு அருகே உள்ள பொன்பதர்கூடத்திலும் உற்சவராக கும்பகோணத்தருகே உள்ள புள்ளம்பூதங்குடியிலும் அருள்கிறார்.
* மனித முகத்துடன் விநாயகரை கும்பகோணம் திருமீயச்சூர் அருகே உள்ள செதிலபதியிலும் சிதம்பரம் தெற்கு வீதியிலும் தரிசிக்கலாம்.
* வேதாரண்யம் அருகில் உள்ள கோடிக் காட்டில் ஆறு கரங்களும் ஒரு முகமும் கொண்ட முருகப் பெருமான் அருள்கிறார்.
* கும்பகோணம் அருகில், நாச்சியார் கோயில் கல் கருடன் வீதிஉலா வரும்போது கருடனின் எடை கூடிக்கொண்டே செல்வதும் பின் ஆலயம் திரும்பும்போது குறைந்து கொண்டே வருவதுமான அற்புதம் நிகழ்கிறது.
* சென்னை – மயிலை கோலவிழி அம்மனின் திருவிழிகள் மனிதர்களுக்கு இருப்பதுபோலவே உயிரோட்டமுள்ளதாக அமைந்துள்ளன.
* விருத்தாசலம் அருகே உள்ள ஸ்ரீ முஷ்ணத்தில் சப்தகன்னியர்களும் தாயாரின் தோழிகளாக பூஜிக்கப்படுகின்றனர்.
* செங்கல்பட்டு – மதுராந்தகம் பாதையில், படாளம் சர்க்கரை ஆலையின் இடதுபுறத்தில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள அரசர்கோயிலில் ஆறு விரல்கள் கொண்ட மகாலட்சுமியை தரிசிக்கலாம்.
* சிதம்பரத்தில் உள்ள தில்லைக்காளி ஆலய பிராகாரத்தில் கடம்பவன தட்சிணாமூர்த்திரூபிணி எனும் பெயரில் பெண் வடிவ தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
*தன் பக்தனுக்காக தீபாவளி அன்று திதி கொடுக்கும் கும்பகோணம் சார்ங்கபாணி பெருமாளுக்கு அன்றைய நிவேதனம், திதி சமையல்தான் நிவேதிக்கப்படுகிறது.
* விநாயகரின் முகத்தையும் தேள் போன்ற வரிவரியான உடலமைப்புடன் உள்ள விருச்சிகப் பிள்ளையாரையும் கும்பகோணம் ஆடுதுறையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவக்குடியில் தரிசிக்கலாம்.
* ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு கிழக்கே 14 கி.மீ. தொலைவில் உள்ள நயினார் கோயில் நாகநாதர் சந்நதியில் குழந்தைகளை ஆலயத்திற்கு நேர்ந்துவிட்டு, பின் ஏலம் கேட்டு அவர்களை திரும்பப் பெறும் பிரார்த்தனை வழக்கத்தில் உள்ளது. இதை விற்று வாங்குதல் என அழைக்கின்றனர்.
* திருச்சி, சிறுவாச்சூர் மதுரகாளிக்கு ஆலயத்திலேயே மாவிடித்து மாவிளக்கு ஏற்றுகின்றனர். வீட்டிலிருந்து மாவு எடுத்துச் செல்ல அங்கு அனுமதி இல்லை.
* சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம் மார்க்கத்தில் உள்ள பண்ருட்டிக் கண்டிகையில் மகாமேரு, மாதங்கி, வாராஹி திதிநித்யா தேவிகள் போன்ற அனைத்து தேவியர்களுமே யந்திர வடிவிலேயே அருள்கின்றனர்.
*வேலூர் அருகில் உள்ள சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் ஒரே கருவறையில் அருள்கின்றனர்.

 

The post வித்தியாசமான தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Ashta ,Kamanatheswarar temple ,Chinnasalem Aarakaur ,Dakshinamurthy ,Thirukkallil ,Suruttapalli ,Gangeyam Murugan temple ,
× RELATED கடலில் கண்டெடுத்த கடகோலு கிருஷ்ணர்