×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டது கோடை மழையில் குளமான நெல்லை சந்திப்பு பஸ் ஸ்டாண்ட்

*மழை நீர் வடிய வடிகால் இல்லை

நெல்லை : நெல்லையில் நேற்று பெய்த கோடை மழையில் நெல்லை சந்திப்பு பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் குளமாக மாறியது. மழை நீர் வடிய வடிகால் வசதி இல்லாதால் நுழைவுவாயில் பகுதி குளம் போல் காட்சியளிக்கிறது.நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கிருந்து தான் நெல்லை டவுன், பாளையங்கோட்டை, புதிய பஸ் ஸ்டாண்ட், தச்சநல்லூர் உள்ளிட்ட நகர பகுதிகளுக்கும், நகரங்களை ஒட்டி அமைந்திருக்கும் சிவந்திப்பட்டி, கிருஷ்ணாபுரம், தாழையூத்து உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை ஒட்டி சந்திப்பு பஸ் ஸ்டாண்ட் அமைந்திருப்பதால் ரயில் ஏற வரும் பயணிகள், ரயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகள் சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிப்பது வழக்கம்.சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 4.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட நெல்லை சந்திப்பு பஸ் ஸ்டாண்ட் ரூ.78 கோடியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அதிமுக ஆட்சியின் போது கட்டப்பட்டது.

தரை தளம் மற்றும் 3 தளங்களுடன் இந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகள் நடந்த போதே பஸ் ஸ்டாண்டின் அஸ்திவாரத்தில் இருந்த ஆற்று மணலை பல கோடி ரூபாய்க்கு விற்று விட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் பஸ் ஸ்டாண்ட் கட்டி முடித்த போதிலும் திறக்க முடியாத சூழல் எழுந்தது.
ஒரு வழியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் நெல்லை சந்திப்பு பஸ் ஸ்டாண்ட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இந்நிலையில் நெல்லையில் நேற்று கோடை மழை பெய்தது. இந்த கோடை மழையில் நெல்லை சந்திப்பு பஸ் ஸ்டாண்டில் நுழைவுவாயில் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. அதாவது பஸ் ஸ்டாண்டில் மழை நீர் வெளியேறி வடிகாலில் பயணிக்க தகுந்த வசதிகள் செய்யாதது அப்பட்டமாக வெளிப்பட்டது. இதனால் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலின் பெரும் பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இந்த வழியாக பஸ் ஸ்டாண்டிற்கு வந்த பயணிகள் தேங்கியிருந்த மழை நீரில் வேறு வழியில்லாது நடந்து சென்றனர். பஸ்களும் உள்ளே செல்லும் போது பயணிகள் மீது மழைநீரை வாரி இறைத்தன.

நெல்லை புதிய பஸ் ஸ்டாண்டும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் நடந்தது. அங்குள்ள பிளாட்பார்ம்களில் தண்ணீர் வடிந்து செல்ல சாலைகளின் ஓரத்தில் புதை குழிகள் அமைக்கப்பட்டு பைப்லைன் வழியாக தண்ணீர் வடிகாலில் சென்று சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் மழை நீர் செல்ல எந்த வசதியும் இல்லாததால் மழை நீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது. சிறு மழைக்கே பஸ் ஸ்டாண்டிற்குள் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், மழைக் காலங்களில் பஸ் ஸ்டாண்டிற்குள் பயணிகள் செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டது கோடை மழையில் குளமான நெல்லை சந்திப்பு பஸ் ஸ்டாண்ட் appeared first on Dinakaran.

Tags : Nellai Junction ,Smart City ,Nellai ,junction ,Dinakaran ,
× RELATED ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது