×
Saravana Stores

சிலைகளால் சிலிர்க்க வைக்கும் கோயில்கள்..!

நந்தியின் வாயில் இருந்து தண்ணீர் கொட்டும் அதிசயம் பெரும்பாலும் கோயிலில் நந்தி மூலவரை வணங்குவது போல சிலை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருக்காரிக்கரையில் இருக்கும் அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி மிகவும் ஆச்சரியமிக்கதாக இருந்து வருகிறது. இக்கோயிலானது சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சாலையில் ஊத்துக்கோட்டை வழியில் உள்ள ராமகிரி என்ற கிராமத்தின் அருகே அமைந்துள்ள ஒரு பழமையான பெரிய சிவாலயமாகும். இக்கோயிலானது காலபைரவ தலம் என்று போற்றப்படுகிறது.

இக்கோயிலில் மிகவும் சிறப்பம்சமாக அங்கு நந்தியின் வாயில் இருந்து வருடத்தின் அனைத்து நாட்களிலும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. அனைவரையும் வியக்க வைக்கும் இந்த நந்தியின் வாயில் இருந்து வரும் நீர் எங்கிருந்து வருகிறது? என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாத மர்மமாகவே உள்ளது. இக்கோயிலுக்கு வெளியே ஒரு தீர்த்த குளம் உள்ளது. நந்தி சிலையின் வாயில் இருந்து வரும் நீர் அந்த குளத்தில் கொட்டுகிறது. நந்தியின் வாயிலிருந்து நீர் அருவியாய் பாய்கிறது. இந்த நந்தியின் வாயிலிருந்து கொட்டும் நீர் வருடம் முழுவதும் அளவு மாறாமல் அதே அளவில் வெளியேறுகிறது. நந்தியின் வாயிலிருந்து கொட்டும் நீரானது மிகவும் சுவை மிகுந்ததாகவும் இருக்கிறது.

இசை எழுப்பும் தட்சிணாமூர்த்தி

கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் ஆலப்பாக்கம் என்ற ஊருக்கு முன் உள்ள ஊர் திருச்சோபுரம் இங்குள்ள திருச்சோபுர நாதர் ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி இசை தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார் இவரது சிலையை தட்டினால் சப்த ஸ்வரங்களின் ஓசை எழுகின்றது. இசைப் பயிற்சியில் ஈடு படும் மாணவர்கள் இவரை வந்து வணங்கி வழிபட்டால் அதில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் இத்தல தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரத்திற்கு பதில் வெள்ளை வஸ்திரங்களை அணிவித்து வழிபடுகின்றனர்.

வெண்கல ஓசை தரும் பைரவர்

சென்னை கோயம்பேட்டில் இருந்து பொன்னேரி வழியாக 7 கிலோமீட்டர் கடந்து அரசூர் கிராமத்தை அடைந்தால் அருள்மிகு ஸ்ரீ திருவாலீஸ்வரர் கோயிலை அடையலாம். இங்குள்ள பைரவர் சிலை கருங்கல்லில் உள்ளது. ஆனால் இந்த சிலையை தட்டினால் வெண்கலத்திற்குரிய சப்தத்தை வெளிப்படுத்துவது தனிச்சிறப்பு.

கல் நடராஜர் சிலை

சிவன் கோயிலில் பஞ்சலோக நடராஜர் விக்கிரகங்களை மட்டும் காண முடியும். ஆனால் கருங்கல்லால் ஆன நடராஜர், சிவகாமி சிலைகளும் அவற்றிற்கு தனி சந்நதியும் அமைந்துள்ள கோயில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு மேற்கில் உள்ள ஆடுதுறை கிராமத்தில் அமைந்துள்ள தயாநிதீசுவரர்-சடைமுடி நாயகி கோயிலில் காணலாம். இக்கோயில் வாலி வழிபட்ட தலம் என்ற பெருமையை பெற்ற தலம்.

ஆச்சரிய சிற்பமுள்ள கோயில்

நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரத்திலிருந்து வடமேற்கு பகுதியில் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பிரம்ம தேசம் கயிலாய நாதர் கோயில். இங்குள்ள திருவாதிரை மண்டபத்தில் ஒரு தூணில் ராமர் மறைந்திருக்கும் காட்சியும், மற்றொரு தூணில் வாலியும், சுக்ரீவனும் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் ராமர் சிலை செதுக்கப்பட்டுள்ள தூணில் இருந்து பார்த்தால் வாலியும், சுக்ரீவன் உருவம் தெரியும். அதே நேரத்தில் வாலியும் சுக்ரீவன் உருவம் கொண்ட தூணில் இருந்து பார்த்தால் ராமர் உருவம் தெரியாது.

சிரிக்கும், அழும் சிலை

ஈரோட்டில் இருந்து 14 கி மீ தூரத்தில் உள்ளது பவானி கூடல் என்ற இடம். இங்கு வேதநாயகி அம்மன் சமேத சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது இது பவானியில் பிரசித்தி பெற்ற கோயில். இந்த கோயில் பின் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சந்நதி படித்துறையில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

ஆண்டுதோறும் மாசி மகம் ரத சப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி, சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் மீது விழுவது சிறப்பம்சம். பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் வேதநாயகி அம்மன் சந்நதியில் சிரிக்கும் சிலை ஒன்றும் அழும் சிலை ஒன்றும் உள்ளது. சிரிக்கும் சிலை மீது தண்ணீர் ஊற்றினால் அது உயிர் பெற்று சிரிப்பது போல் இருக்கும். அழும் சிலை மீது தண்ணீர் ஊற்றினால் உண்மையிலேயே அது அழுவது போன்று இருக்கும்.

காலம் காட்டும் கல்

தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. விரிஞ்சிபுரம் மார்க்கபந்தேஸ்வரர் கோயில் இது அதன் சிற்பக்கலைக்கு பெயர் போனதாகும்.இக்கோயிலில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு அதிசயம்தான், காலம் காட்டும் கல். இந்த காலம் காட்டும் கல்லின் மீது ஒரு குச்சியை வைத்தால் அதன் நிழல் சரியான நேரத்தின் மீது விழும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி துல்லியமாக நேரத்தை கணிக்கும் இந்த கல்லை எப்படி 1300 வருடங்களுக்கு முன்பே கண்டுப்பிடித்தனர் என்பது வியப்பளிக்கும் விஷயம்.

அபூர்வ நந்தா விளக்கு

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ராமகிரியில் உள்ளது கல்யாணம் நரசிங்க பெருமாள் கோயில். இங்கே சிற்பங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் ‘‘அபூர்வ நந்தா விளக்கு’’ உள்ளது, ஐம்பொன்னால் சுமார் 3அடி உயரத்தில் உள்ள இந்த விளக்கு சிற்பம். இது யாளி முகம் கொண்டது. இந்த யாளி சிங்கங்கத்தின் மீது ஒரு பெண் ஏறி நிற்பது போன்ற தோற்றத்தில் நந்தா விளக்கு உள்ளது.

பெண் உருவத்தின் மீது தலையில் ஒரு துவாரம் உள்ளது அதில் எண்ணெயை ஊற்றினால் தொப்புள் பகுதியில் உள்ள சொட்டு விளக்கிற்கு வந்து சேரும். அந்த சொட்டு விளக்கில் திரி ஏற்றப்பட்டு தொடர்ந்து எரியும். இதில் ஆச்சர்யமான விஷயம் ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் எண்ணெய் சேமித்து வைக்க முடியும் இந்த விளக்கில் என்பது தான்.

சடையுடன் நிற்கும் பெண் சிலை

கடலூர் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருக்கோயிலாகும். பெருமாளின் தசாவதாரங்களில் மூன்றாம் அவதார தலமாகும். இவ்விடம் இஸ்லாமியர்கள் பெருமாளை வணங்குவது குறிப்பிடத்தக்கது. உலகத்திலேயே வைணவ கோயிலான இக்கோயிலில் தான் சைவம் மற்றும் மருத்துவ முறையில் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயிலுக்கு வருபவர்கள் 100 கால் மண்டபத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதியை வணங்கிய பின்னரே பூவராக சுவாமியை வணங்க வேண்டுமாம். பதினாறு கால் மண்டபத்தின் உட்பகுதியிலுள்ள தூண்களில் அரச குலப் பெண்களின் முழு உருவச் சிற்பங்கள் உள்ளன.

அரச குலப் பெண்டிரின் கூந்தல் சடைப்பின்னல், குஞ்ச அலங்காரம், சூடாமணி, காதணி ஆபரணங்கள், புடவை ஆடை மடிப்புகள் என ஒவ்வொரு அம்சத்திலும் அழகுணர்ச்சியுடன் மிக நேர்த்தியாகச் செதுக்கியுள்ளனர். அதில் ஒன்று எத்தனை கலைநயம், எத்தகைய நேர்த்தி, பார்த்து கொண்டேயிருக்கலாம் என்று தோன்றும் அழகு, இடுப்புக்கு கீழ் வரை செல்லும் கூந்தல், அதை பின்னி போட்டிருக்கும் அழகு. அத்துடன் தலையிலே இருக்கும் அணிகலன்கள் என்று ஒரு சிற்பமே உயிர்பெற்று பெண்ணாக நிற்பது போல தோன்றுகிறது.

இசைத் தூண்கள்

திருநெல்வேலியில் அருள்மிகு காந்திமதி அம்மன் சமேத நெல்லையப்பர் திருக்கோயில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலாகும். நெல்லையப்பர் கோயிலில் உள்ள இசை தூண்கள் உலகில் வேறு எங்கும் காண முடியாத அதிசயங்களில் ஒன்றாகும். இந்தத் தூண்களில் இருந்து வெளிப்படும் சப்தஸ்வரங்கள் எப்படி ஒலிக்கிறது என்பது இன்று வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நெல்லையப்பர் சந்நதிக்கு செல்லும் வழியில் மணிமண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் நின்றசீர் நெடுமாற பாண்டியனால் கட்டப்பட்டது. இங்குதான் தட்டினால் பல வகை ஓசை தரும் கறுத்தத் தூண்கள் உள்ளன.

கோவீ.ராஜேந்திரன்

The post சிலைகளால் சிலிர்க்க வைக்கும் கோயில்கள்..! appeared first on Dinakaran.

Tags : Nandi ,Arulmiku Waleeswarar Temple ,Thirukarikarai ,Chennai ,Tirupati ,
× RELATED செங்கல்பட்டு அருகே வீணாக கடலில்...