×
Saravana Stores

10 பேர் பலியான பட்டாசு ஆலையில் புகுந்து பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை கொள்ளையடிக்க வந்த மர்ம கும்பல்: போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய டூவீலர்கள், ஆட்டோ பறிமுதல்

சிவகாசி: சிவகாசி அருகே 10 பேரை காவு வாங்கிய பட்டாசு ஆலையில் நள்ளிரவில் கொள்ளையடிக்க வந்த கும்பலை கிராம மக்கள் விரட்டி அடித்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 9ம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன், போர்மேன் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் தலைமறைவாக உள்ள உரிமையாளர் சரவணனை தேடி வருகின்றனர்.

விதிமுறைகளை மீறியதாக பட்டாசு ஆலையின் உரிமத்தை மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. ஆலைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைக்க உள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு பட்டாசு ஆலைக்கு மர்ம நபர்கள் டூவீலர்கள் மற்றும் லோடு ஆட்டோவில் வந்து சென்றபடி இருந்தனர். சந்தேகமடைந்த கிராமமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது பட்டாசு ஆலையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெடிக்காத பேன்சிரக வெடிகளை கொள்ளையடிக்க மர்மக் கும்பல் வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கிராம மக்கள், கொள்ளையர்களை விரட்டினர். இதனால் அவர்கள் டூவீலர்கள், லோடு ஆட்டோவை விட்டுவிட்டு தப்பினர். இதையடுத்த சிவகாசி கிழக்கு போலீசார் வந்து டூவீலர்கள், லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். ஒரு டூவீலரில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குவியலாக கிடந்த மது பாட்டில்கள்
வெடி விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலை முன்பு முள்புதர்களில் 100க்கும் மேற்பட்ட காலி மது பாட்டில்கள் குவிந்து கிடந்தன. இவற்றை கொள்ளையர்கள் போட்டு சென்றனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post 10 பேர் பலியான பட்டாசு ஆலையில் புகுந்து பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை கொள்ளையடிக்க வந்த மர்ம கும்பல்: போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய டூவீலர்கள், ஆட்டோ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Sengamalapatti ,Sivakasi, Virudhunagar district ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரூ.6,000 கோடிக்கும் மேல் பட்டாசுகள் விற்பனை