×

தொழிலாளர் மேலாண்மை கல்வி பட்ட, பட்ட மேற்படிப்பு, முதுநிலை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்

சென்னை: வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு, முதுநிலை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகின்றது. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகிய பட்ட / பட்ட மேற்படிப்பு / பட்டய படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.

இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வருகிறார்கள். மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் நல அலுவலர் (தொழிற்சாலைகள்) பதவிகளுக்கு பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. ஆகிய பட்ட மேற்படிப்பு / முதுநிலை பட்டயப்படிப்புகளை முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டய படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவர். தங்கும் விடுதி வசதி இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் ஆண் மாணவர்களுக்கு மட்டும் உண்டு. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் 15ம் தேதி ஆகும். விண்ணப்ப கட்டணம் ரூ.200, எஸ்சி, எஸ்டி கட்டணம் ரூ.100. மதிப்பெண், அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு, ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை) முனைவர் இரா.ரமேஷ்குமார், மொபைல் எண் 9884159410, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ பின்புறம்) அம்பத்தூர், சென்னை-600 098, தொலைபேசி எண்கள் 044-29567885/29567886. Email: tilschennai@tn.gov.inல் தொடர்பு கொள்ளலாம்.

The post தொழிலாளர் மேலாண்மை கல்வி பட்ட, பட்ட மேற்படிப்பு, முதுநிலை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Labour Education Centre Directorate ,Tamil Nadu Labour Education Centre's P. A. ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...