ரேபரேலி: ‘அம்பானி, அதானிக்காக மட்டுமே பாடுபடும் பிரதமர் மோடியை போல் இல்லாமல், எனது குடும்பம் எப்போதும் ரேபரேலி மக்களுக்காக பாடுபடுகிறது’ என ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு மற்றும் உபியின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் இம்முறை போட்டியிடுகிறார். ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, முதல்முறையாக ராகுல் காந்தி நேற்று அங்கு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: ரேபரேலி மக்களுடன் எனது குடும்பம் ஆழமான தொடர்பை கொண்டிருப்பதால், இத்தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். எனது பாட்டி இந்திரா காந்தி, எனது தந்தை ராஜிவ்காந்தி மற்றும் தாய் சோனியா காந்தி ஆகியோர் ரேபரேலி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்டுள்ளனர். எனது குடும்பம் மக்களுக்காக உழைக்கிறது. மாதம் இரண்டரை லட்சம் சம்பளம் வாங்கும் பிரதமர் மோடி தினமும் லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மதிப்பு கொண்ட ஆடைகளை அணிகிறார். அந்த சூட்களை வாங்கித்தருபவர் யார்? இவ்வாறு ராகுல் கூறினார். வரும் 20ம் தேதி, 5ம் கட்ட தேர்தலின் போது ரேபரேலி மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு நடக்கிறது.
* விரைவில் திருமணம்
ராகுல் காந்தி தனது உரையை முடித்ததும், சகோதரி பிரியங்கா காந்தியை அழைத்து பாராட்டினார். ‘‘நான் தேர்தலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறேன். எனது சகோதரி இங்கே எனக்காக நேரத்தை செலவிடுகிறார். இதற்காக அவருக்கு பெரிய நன்றி தெரிவிக்கிறேன்’’ என ராகுல் கூறினார். அப்போது கூட்டத்தில் சிலர், ‘ராகுல் உங்களுக்கு எப்போது திருமணம்’ என கேள்வி கேட்டபடி இருந்தனர். அவர்களுக்கு பதிலளிக்குமாறு பிரியங்கா காந்தி கூற, கேள்வி என்ன என்பது குறித்து அருகில் இருந்தவர்களிடம் கேட்ட ராகுல், ‘‘நான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன்’’ என பதிலளித்தார். அதைக் கேட்டு கூட்டத்தில் தொண்டர்கள் வாழ்த்தி கோஷமிட்டனர்.
The post எனது குடும்பம் மக்களுக்காக உழைக்கிறது அம்பானி, அதானிக்காக மோடி உழைக்கிறார்: ராகுல் காந்தி பிரசாரம் appeared first on Dinakaran.