×
Saravana Stores

குழந்தைகளின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் ‘மான்டசரி’ கல்வி!

நன்றி குங்குமம் தோழி

‘‘என் குழந்தைக்காகத்தான் நான் மான்டசரி பயிற்சி எடுத்தேன். ஆனால் இப்போது பல குழந்தைகளுக்கு அந்தக் கல்வியினை நான் சொல்லித் தருகிறேன்’’ என்கிறார் ஜோஷ்லா. இவர் நாகர்கோவிலில் ‘ஜாலி கிட்ஸ்’ என்ற பெயரில் மான்டசரி பள்ளி மற்றும் அதற்கான பயிற்சி மையமும் நடத்தி வருகிறார். ‘‘நான் பொறியியல் கணினி துறையில் முதுகலைப் பட்டம் முடிச்சிருக்கேன். படிப்பு முடிச்சதும் திருமணமானது. குடும்பம், குழந்தை என்று வந்ததால், என்னால் வேலைக்குப் போக முடியவில்லை.

எனக்கு குழந்தை பிறந்த பிறகுதான் நான் மான்டசரி கல்வி குறித்து பயிற்சி எடுத்தேன். காரணம், என் குழந்தைக்கு மற்ற குழந்தைகள் போல் செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்க்க பழக வைக்கக் கூடாது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருந்தேன். அதற்கு ஒரு மாற்று விரும்பினேன். அந்த சமயத்தில் என்ன செய்யலாம்னு யோசித்த போது யுடியூப்பில் மான்டசரி கல்வி முறை குறித்து தெரிய வந்தது. அதைப் பார்த்துதான் நான் வீட்டில் என் குழந்தைக்கு பயிற்சி அளித்தேன்.

நல்ல வித்தியாசம் தெரிந்தது. எதையும் தைரியமாக எதிர்கொண்டாள். மற்றவர்களிடம் அணுகும் முறையிலும் மாற்றம் இருந்தது. குறிப்பாக செல்போன் பார்க்காமல், புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருந்தது. அதன் பிறகு அவளுக்கு முறையாக பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக நான் மான்டசரி கல்வி குறித்த பயிற்சியினை ஆன்லைனில் பயின்று, சான்றிதழும் பெற்றேன். இந்த துறையில் 11 வருஷமா இருந்தாலும் 2019ம் ஆண்டு தான் நான் மான்டசரி பள்ளி மற்றும் பயிற்சி மையத்தினை துவங்கினேன்.

நாகர்கோவில் நகரமாக இருந்தாலும், இங்கு இந்த கல்வி முறை குறித்து பெரிய அளவில் யாருக்கும் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை பள்ளியில் கற்றுத் தரப்படும் பாடங்களை எழுதவும் மனப்பாடம் செய்து அதற்கான மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இந்தக் கல்வி முறை அவர்களுக்கு புதியதாக இருந்தது’’ என்றவர் முதலில் குழந்தைகளின் பெற்றோர்களுக்குதான் மான்டசரி பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளார்.

‘‘நான் இந்தப் பள்ளியினை ஆரம்பித்த போது, பலருக்கு இந்த பாடத்திட்டம் குறித்து பெரிய அளவில் எதுவுமே தெரியவில்லை. அந்த சமயத்தில்தான் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டன. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு என்ன பாடங்கள் சொல்லித் தருவது என்று பெற்றோர்களுக்கும் புரியவில்லை. அவர்களுக்கு விளையாட்டு முறையில் சின்னச் சின்ன பாடங்களை கற்றுத் தரலாம் என முடிவு செய்தேன்.

அதன் அடிப்படையில் ஆன்லைன் முறையில் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நான் மான்டசரி பயிற்சியினை அளித்தேன். அந்தப் பயிற்சி குறித்து என்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தேன். அதைப் பார்த்து பெற்றோர்கள் என் ஆன்லைன் பயிற்சியில் இணைந்தார்கள். அதில், நான் சொல்லித் தரும் சின்னச் சின்ன செயல்முறைகளை அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

ஆன்லைன் முறை என்பதால் நாகர்கோவில் மட்டுமில்லாமல் சிங்கப்பூர், துபாய் போன்ற இடங்களில் இருந்தும் இந்தப் பயிற்சிக்கு நல்ல வரவேற்பு வந்தது. கோவிட் முடிந்த பிறகு முழு நேரமும் பள்ளி இயங்க ஆரம்பித்ததும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை எங்களின் பள்ளியில் சேர்க்க முன்வந்தார்கள். கடந்த ஐந்து வருடங்களில் 200 குழந்தைகள் எங்க பள்ளியில் மான்டசரி கல்வி முறையில் பயின்று தற்போது, நாகர்கோவிலில் உள்ள சிறந்த பள்ளிகளில் படித்து வருகிறார்கள்’’ என்றவர் தற்போது கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு மட்டுமே மான்டசரி கல்வி முறையினை சொல்லித் தந்து வருகிறார். மேலும் இவர் குழந்தைகளின் உளவியல் மற்றும் போனிக்ஸ் முறையினையும் பயின்றுள்ளார். தற்போது IMTCயில் மான்டசரியில் எலிமென்டரி பயிற்சியும் முடித்துள்ளார்.

‘‘என் குழந்தைக்கு சொல்லித்தர வேண்டும் என்பதற்காகத்தான் நான் மான்டசரி பயிற்சி எடுத்தேன். அப்போது பள்ளிக்கூடம் மற்றும் பயிற்சி மையம் துவங்குவேன் என்று நினைக்கவில்லை. என் குழந்தை கிண்டர்கார்டன் பிறகு முழு நேர பள்ளியில் சேர்ந்தவுடன் எனக்கு வீட்டில் அதிக நேரம் இருப்பதை உணர்ந்தேன். ஐ.டி துறையில் வேலை பார்க்க விருப்பமில்லை. அப்பதான், என் குழந்தைக்காக நான் எடுத்துக்கொண்ட பயிற்சி மூலம் மற்ற குழந்தைகளுக்கும் பயிற்சி அளிக்கலாம் என்று தோன்றியது.

அப்படித்தான் இந்த மான்டசரி பள்ளியினை ஆரம்பித்தேன். நாகர்கோவிலில் மான்டசரி பயிற்சி அளிக்கக்கூடிய பயிற்சி மையங்களும் இல்லை. மாணவர்களை மட்டுமில்லாமல் மான்டசரி ஆசிரியர்களையும் உருவாக்க விரும்பினேன். ஆன்லைனில் பயிற்சி அளித்தாலும், பலரால் அந்த முறையினை பின்பற்ற முடியாது. அதனால் நேரடியாக பயிற்சி அளிக்க துவங்கினேன். மான்டசரி கல்வி பயில அதிக செலவாகும் என்று பலர் நினைக்கிறார்கள். அதற்கு காரணம் அந்தக் கல்வி முறையில் பயன்படுத்தப்படும் பாடங்கள் சம்பந்தமான பொருட்கள். இவை அனைத்தும் மரத்தினால் செய்யப்பட்டவை. இதனைக் கொண்டுதான் குழந்தைகளுக்கு பாடங்கள் சொல்லித்தரப்படும்.

அதனை நம்மால் செய்ய முடியாது. அதற்கென தனிப்பட்ட கடைகளில் இருந்துதான் பெற முடியும். அடுத்து ஆசிரியர்கள். இவர்கள் மான்டசரி பயிற்சி பெற்று இருக்க வேண்டும். இவர்களுக்கான சம்பளமும் அதிகம் என்பதால் இந்த கல்விக்கான கட்டணமும் அதிகமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்தக் கல்வி முறையினை அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதனால்தான் நான் பயிற்சி மையத்தினையே துவங்கினேன்’’ என்றவர் மான்டசரி கல்வி முறை குறித்து விவரித்தார்.

‘‘மான்டசரி கல்வி என்பது பார்த்து, அதை செயல்முறையாக கண்டறிந்து படிப்பது. இதில் பாடங்களை மனப்பாடம் செய்ய மாட்டார்கள். மாறாக, விளையாட்டு முறையில் படிப்பதால், அவர்களுக்கு அந்தப் பாடங்கள் எப்போதும் மனதில் பதிந்துவிடும். நான்கு வயதிற்கு பிறகுதான் குழந்தைகளுக்கு எழுத வைப்போம். அதுவரை அவர்களின் மோட்டார் மற்றும் சென்சரி திறன்களுக்குதான் பயிற்சி அளிக்கப்படும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை பெற்றோர்களுக்கு ஓரியன்டேஷன் நடத்தப்படும்.

அதில் குழந்தைகளுக்கு எப்படி பாடங்கள் சொல்லித் தரவேண்டும் என்று குறிப்பிடுவோம். இதன் மூலம் அவர்களுக்கு தங்களின் குழந்தைகளுக்கு வீட்டில் பயிற்சி அளிக்க உதவியாக இருக்கும். முதலில் பெற்றோர்கள் மற்ற பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எழுதுகிறார்கள், 100 வரை எண்களை ஒப்பிக்கிறார்கள் என்று கூறினார்கள். ஆனால் இரண்டு வருட பயிற்சிக்குப் பிறகு தங்களின்
குழந்தைகளிடம் ஏற்பட்ட மாற்றங்களை கண்கூடாக பார்த்த பிறகுதான் அவர்களுக்கு இந்தக் கல்வி முறை மேல் நம்பிக்கை வந்தது. தற்போது என் பள்ளியில் வேலை பார்ப்பவர்கள் என்னிடம் பயிற்சி எடுத்தவர்கள். மேலும் பயிற்சி எடுப்பவர்களுக்கு மற்ற பள்ளியிலும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறோம்.

பல பள்ளியில் கிண்டர்கார்டனில் மட்டும் மான்டசரி கல்வி திட்டத்தினை பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இதனை +2 வரையும் பின்பற்ற முடியும். இவர்கள் NIOS முறையில் தேர்வு எழுதுவார்கள். அதில் அவர்களுக்கு கணக்கிடப்படும் மதிப்பெண்கள் பொறியியல் மட்டுமில்லாமல் மற்ற கல்லூரியின் சேர்க்கையிலும் எடுத்துக் கொள்ளப்படும். பொதுவாக இன்றைய கல்வி முறை +2க்குப் பிறகு டாக்டர், என்ஜினியர் அல்லது ஏதாவது ஒரு டிகிரி என்றுதான் உள்ளது.

ஆனால் மான்டசரியில் படிக்கும் போது அவர்களின் சிந்திக்கும் திறன் மாறுபடும். பள்ளிப் படிப்பிற்கு பிறகுதான் என்னவாக வேண்டும் என்பதை அவர்கள் தெளிவாக முடிவு செய்து அதற்கு ஏற்ப தங்களின் படிப்பினை பின்பற்ற துவங்குவார்கள். உதாரணத்திற்கு போட்டோசின்தசிஸ் என்பதை பாடமாக படிக்காமல், அதனை செயல்முறை மற்றும் ஆய்வுகள் செய்து படிக்கும் போது அது அவர்கள் மனதில் எளிதில் பதிந்துவிடும். அறிவியல் மட்டுமில்லை கணிதம், ஆங்கிலம், புவியியல் என அனைத்து பாடங்களும் அவர்கள் செயல்முறையில்தான் படிப்பதால் அவர்களின் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.

தற்போது எங்கப் பள்ளியில் கிண்டர்கார்டன் வகுப்பு வரைதான் உள்ளது. வரும் ஆண்டுகளில் 5ம் வகுப்பு வரை மான்டசரி கல்வி முறையினை அறிமுகம் செய்ய இருக்கிறேன். அதன் பிறகு +2 வரை கொண்டு வரும் எண்ணம் உள்ளது. மேலும் பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும். மான்டசரி கல்வி முறையினை அனைத்து தரப்பினரும் பயிலும் படி கொண்டு வரவேண்டும். ஐந்தாண்டுகளில் கண்டிப்பாக மான்டசரி கல்வி முறையினை அனைத்துப் பள்ளிகளிலும் பின்பற்ற துவங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை’’ என்றார் ஜோஷ்லா.

தொகுப்பு: ஷம்ரிதி

The post குழந்தைகளின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் ‘மான்டசரி’ கல்வி! appeared first on Dinakaran.

Tags : Kunkum Dothi ,Joshla ,Jolly Kids' ,Nagercoil ,Dinakaran ,
× RELATED கவனமுள்ள பழக்கவழக்கங்கள்!