நன்றி குங்குமம் தோழி
இரவு மணி பத்தரை. மகாலட்சுமி சாப்பிட்ட பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு படுக்கைக்குச் சென்றாள். படுக்கையில் படுத்தவளுக்கு இமைகள் மூட மறுத்தன. மனதில் முதல் நாள் மாலை இப்ராகிம் பூங்காவில் பூவண்ணன் பேசிய பேச்சுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக அலைபோல நினைவிற்கு வந்தன.
‘‘என்ன மகா நம்முடைய காதலை உன் அப்பாவிடம் சொல்லி விட்டாயா?’’
‘‘இன்னும் சொல்லவில்லை. நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது சொல்லிவிடலாம் என்று இருக்கிறேன்.’’‘‘என்ன நீ இன்னும் விளையாட்டுப் பெண்ணாக இருக்கிறாய். நமக்கு வயதாகிக் கொண்டே போகிறது. இப்படியே போனால் நமக்கு அறுபதாம் கல்யாணம்தான் கடைசியில் நடக்கும் போல இருக்கு’’ என சோகத்துடன் தரையில் வளர்ந்திருந்த புற்களை கிள்ளி கிள்ளி போட்டுக் கொண்டிருந்தான்.
‘‘சரி பார்க்கிறேன்…’’‘‘நீ இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் உன் அப்பா திடீர் என ஒரு நாள் ஒருவனை உன் முன் கொண்டு வந்து நிறுத்தி இவன்தான் நான் பார்த்த மாப்பிள்ளை கழுத்தை நீட்டு எனச் சொல்லி விடுவாரோ என எனக்கு பயமாக இருக்கிறது.’’‘‘அப்படியா சொல்ற… சரி இன்றைக்கு எப்படியும் நம் காதலை என் அப்பாவிடம் சொல்லி விடுகிறேன் போதுமா…’’
‘‘அதைத்தான் நானும் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். காலத்தைக் கடத்தாதே…’’
‘‘சொல்லி விடுகிறேன். கேட்டவுடன் என்ன செய்வார். எல்லா அப்பாக்களைப் போல் தாம்தூம் என குதிப்பார். என்ன எல்லா அப்பாக்களும் தான் பார்க்கும் பையனைத்தான் தன் பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வீம்பு பண்ணுவதும் உண்டு. பெண்ணாக பிறந்தவளுக்கு அவளுக்கு என விருப்பம், எண்ணம் இருப்பதாக பெற்றோர்கள் நினைப்பதில்லை. நம்முடைய காதலை மறுப்பதற்கு சாதி, மதம், உறவு ஆகியவைகள் எதுவும் இடையூறாக இல்லை.
வயதுதான் வித்தியாசம். மற்றும் படிப்பும் இடையூறாக இருக்கும் என்ன…’’‘‘தெரிந்ததையே கூறிக் கொண்டேயிரு. புதியதாக ஒன்றும் இல்லையா காரணம் சொல்ல…’’‘‘புதிதாக சொல்ல காரணம் ஒன்று உள்ளது. அதை துருப்புச் சீட்டாக பயன்படுத்தினால் அவரால் ஒன்றும் சொல்ல முடியாது. நம்முடைய காதலுக்கு சம்மதம் கிடைக்கும். திருமணமும் ஜாம் ஜாம் என்று நடக்கும்.’’
‘‘அது என்ன புதிய காரணம். அதைத்தான் சொல்லேன்’’ என கண்களில் மகிழ்ச்சிப் பொங்க கேட்டான் பூவண்ணன்.‘‘அதை இப்போது சொன்னால் சுவாரஸ்யம் ஒன்றும் இருக்காது. காரியம் முடியட்டும் அப்போது கூறுகிறேன். அதுவரை என்னிடமே ரகசியமாக இருக்கட்டும். அதுதான் சஸ்பென்ஸ்’’ என்றாள் மகாலட்சுமி.‘‘எதற்கும் உன் அப்பாவிடம் நம் காதலை தெரிவிக்கும் முன் உன் இதயத்தில் நான் முழுமையாக நிறைந்திருக்கிறேனா என ஒரு முறை எண்ணிப்பார்த்து அதன் பிறகு உன் போராட்டத்தை தொடங்கு. உன்னிடமிருந்து நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.
அதன் பிறகுதான் எனது வேலையை பார்ப்பேன்’’ எனக் கூறிக் கொண்டே தனது மடியில் கிடந்த புற்களை உதறிவிட்டு எழுந்தவன் தன் கையை மகாலட்சுமியிடம் நீட்ட அதை அவள் இறுக்கமாக பற்றிக் கொண்டு தரையில் இருந்து எழுந்தவள் அவனுடன் சேர்ந்து சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.நடுநிசியில் தண்ணீர் குடிப்பதற்காக படுக்கையை விட்டு எழுந்த அப்பா பாண்டித்துரையின் காலடி சத்தம் கேட்டு விழிகளை திறந்தவள் தன் தலையை தூக்கி அவர் திரும்பி படுக்கைக்கு போகும் வரை பார்த்தவளுக்கு மனவோட்டம் தடைபட்டு தூக்கம் கண்களை தழுவியது.
மறுதினம் விடியற்காலை நேரத்தில் மார்கழி மாதத்தை நினைவூட்டும் வகையில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பக்கத்து கோயிலிலிருந்து காற்றில் மிதந்து வந்தன. அத்துடன் மகாலட்சுமி கலந்து கொண்டிருந்த காபியின் மணமும் சேர்ந்து பாண்டித்துரையை சமையல் அறைப்பக்கம் இழுத்தன.அப்பாவை பார்த்து மகாலட்சுமி ‘‘அப்பா காபியை எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றாள்.காபியை சுவைத்து குடித்தவர் ‘‘உன் திருமணத்தைப் பற்றி நான் கேட்டதற்கு பதில் என்னம்மா’’ என்றார்.நல்ல வேலை நாம் தொடங்குவதற்கு முன்பாக அப்பா முந்திக்கொண்டார்.
இதுதான் நல்ல சமயம் நம் காதலை சொல்லிவிட வேண்டியதுதான் என மனதில் நினைத்துக் கொண்டு அப்பாவிடம் பேச வேண்டியதை ஒரு தடவை ஒத்திகைப் பார்த்துக் கொண்டாள் மனதில்.‘‘அப்பா எனது திருமணத்திற்காக நீங்கள் ேசர்த்து வைத்திருக்கின்ற பணத்தை அதிக வட்டி கொடுக்கும் நம்பகமான வங்கியில் டெபாசிட் செய்து அதில் கிடைக்கும் வட்டியை கொண்டு
சந்தோஷமாக செலவு செய்து கொண்டிருங்கள். அதை நான் வேண்டாம் எனச் சொல்ல மாட்டேன்.’’‘‘அப்ப எதை நீ வேண்டாம் என சொல்ல வருகிறாய்.’’‘‘அப்பா நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிற மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்.’’
‘‘அப்ப நீ திருமணமே செய்து கொள்ளப் போவதில்லையா?’’
‘‘அப்படி ஒன்றும் நான் சொல்லவில்லையே. நீங்கள் பார்க்கும் மாப்பிள்ளைதான் வேண்டாம் என்று சொன்னேன். என் மனதிற்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்து ெகாள்ள போகிறேன். அதுவும் உங்கள் விருப்பத்துடன்.’’‘‘நீயா… உன் மனதிற்கு பிடித்தவன் யார்… எந்த ஊரில் இருக்கிறான்’’ என்றார் படபடப்பாக.அப்பாவின் படபடப்பைக் கண்டு கொள்ளாமல் ‘‘அவர் இந்த ஊரில்தான் இருக்கிறார். உறவுக்காரர் கூட. ஆனால் அவர் அதிகம் படிக்கவில்லை. சொற்ப ஊதியம்தான். வயது வித்தியாசம் உண்டு.’’தன் பெண் சொன்னதைக் கேட்டவுடன் கோபத்துடன் ‘‘உன்னுடைய படிப்பு என்ன? வயது என்ன? ஊதியம் என்ன? உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? அத்துடன் படிப்பும் ஊதியமும் குறைவான, வயது அதிகமாக உள்ளவனை திருமணம் செய்து கொள்ள போகிறாயா? யார் அவன்?’’ என்றார் எரிச்சலுடன்.
‘‘அவர் ஒரு கம்ப்யூட்டர் மெக்கானிக். பெரியக் கடை வீதியில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் வைத்திருக்கிறார். என் அம்மாவின் தம்பி. எனக்கு தாய்மாமன். உங்களுக்கு மச்சினன். எனக்கு முறை பையனும் கூட.’’அதை கேட்ட பாண்டித்துரை உடலில் உள்ள ரத்த நாளங்கள் எல்லாம் கொதித்தது. ‘‘கோபமாக என்ன பேசுகிறாய். அவன் வயது என்ன… உன் வயது என்ன… யோசித்தாயா? அவனை நீ கல்யாணம் செய்து கொண்டால் உன் வாழ்க்கை சிறப்பாக அமையாது.’’‘‘அப்பா நான் நல்லா யோசனை செய்துதான் இறுதி முடிவு எடுத்திருக்கிறேன்.’’ ‘‘அவரின் படிப்பு குறைந்தது யாரால் தெரியுமா? அது அவனுடைய அப்பா, அம்மாவால்தான்.’’‘‘அப்பா நீங்க சொல்றது தப்பு. அவர் படிப்பு தடைபட்டதற்கு முக்கிய காரணம் நீங்கதான்.’’
‘‘என்ன சொல்கிறாய் நீ?’’
‘‘ஆமாம் நீங்கள்தான். நன்றாக தெரிந்துதான் சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்ணை, அதாவது என் அம்மாவை திருமணம் செய்து கொண்டு அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் அதைக் கொண்டு வா… இதைக் கொண்டு வா என அவர்களை அம்மா வீட்டிற்கு அனுப்பி வாங்கி வரச் சொன்னவர் நீங்கள்தானே.’’‘‘ஆமாம் கேட்டேன். அதில் என்ன தப்பு. பெண்ணைப் பெற்றவர்கள் செய்ய வேண்டியதைதான் நான் கேட்டேன்.’’‘‘கேட்டது தப்பு இல்லை. ஆனால் வசதியில்லாதவர்களிடம் நச்சரித்து பொங்கல் சீர், தீபாவளி சீர் வாங்கிக் கொண்டு வா, இல்லையேல் அங்கேயே இருந்துவிடு என பயமுறுத்தி வாங்கியதால் எனது தாத்தா கடைசியில் தான் வாழ்ந்த சொந்த வீட்டை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது நீங்கதானே. இதனால்தான் மனமுடைந்து என் தாத்தா இறந்துவிட்டார்.’’
‘‘அது மட்டுமா… நீங்கள் சம்பாதித்த பணத்தில் சீட்டு ஆடுவதும் குடிப்பதும்… அதுபோக மீதி சொற்ப பணத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வகை வகையாக சமைத்துப் போடும்படி நச்சரிச்சி கடைசியில் உங்கள் தொல்லை தாங்காமல் மன நிம்மதியை இழந்து என்னுடைய சின்ன வயதில் என்னை தவிக்கவிட்டு பூவும் பொட்டோடும் போய் சேர்ந்தார்கள் என் அம்மா. அம்மா இறந்தப் பிறகு நான் வளர்ந்தது, படித்தது எல்லாம் என் பாட்டியிடம்தான். தாத்தா இல்லாததால் குடும்பத்தைக் காப்பாற்றவும் என்னை நல்ல முறையில் படிக்க வைப்பதற்கும் என் மாமா தன் பள்ளிப்படிப்பை பாதியில் முடித்துக் கொண்டு கிடைத்த வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.’’
‘‘ஆமாம் அதற்கென்ன? அப்படியிருந்ததும் நான் ஓய்வுபெற்ற போது கருணை அடிப்படையில் என்னுடைய அலுவலகத்தில் கிடைத்த வேலையை நீ ஏன் ஏற்றுக் கொண்டாய்.’’
‘‘உங்களைப் பற்றி முழுமையாக எனக்கு தெரிந்து இருந்தும் நான் உங்கள் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தது தவறு ஒன்றுமில்லை. ஒரு தந்தை தன் பெண்ணிற்கு வேலை வாங்கித் தருவதும், திருமணம் செய்து வைப்பதும் முக்கிய கடமையாகும். நான் நினைவோடுதான் முடிவெடுத்து சொல்கிறேன். உங்களால் படிப்பை தொடர முடியாமல் வாழ்க்கையை தொலைத்தவரும், என்னுடைய வளர்ச்சிக்காக பாடுபட்ட என் தாய் மாமனுக்காக என்னால் ஆன பிராயச் சித்தம் நான் அவரை திருமணம் செய்து கொள்வதுதான்.’’‘‘இப்ப என்னை என்ன செய்யச் சொல்ற சொல்லு’’ என தழுதழுத்த குரலில் அரைமனதோடு கேட்டார் பாண்டித்துரை.
‘‘அப்பா நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிற மாப்பிள்ளை வேண்டாம் என முடிவெடுங்கள். அப்புறம் என் மனதிற்குப் பிடித்த என் தாய்மாமனை அதாவது, உங்கள் மச்சானை உங்கள் முழு சம்மதத்தோடு எனக்கு திருமணம் செய்து வைத்து சந்தோஷமாக இருங்கள்.’’ ‘‘உன் மாமனை அதாவது, என் மச்சானை உனக்கு திருமணம் செய்து வைத்தால் உங்கள் இருவரின் படிப்பு, வருமானம், வயது வித்தியாசம் எல்லாம் சரியாகி விடுமா? ெசால்.’’
‘‘அப்பா நான் நன்றாக யோசித்துதான் இந்த முடிவு எடுத்திருக்கிறேன். என் அம்மாவின் நல் வாழ்விற்கும் என்னுடைய படிப்பிற்காகவும் தனது சந்தோஷத்தை தொலைத்தது மட்டுமில்லாமல் தன்னுடைய படிப்பை பாதியில் முடித்து தனது வருங்காலத்தைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் தனது ஆசைகளை எல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு சிறிய வயதிலேயே வேலைக்குச் சென்று பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் என் மாமனை திருமணம் செய்த பிறகு அவரை மேலும் படிப்பதற்கு உறுதுணையாக இருந்து சமுதாயத்தில் ஒரு பெரிய ஆளாக்கி காண்பிப்பேன். மனம் ஒத்து இருந்தால் வாழ்க்கை, வயது வித்தியாசம் ஒன்றும் தடையில்லை.
இதுதான் என் முடிவு. அது மட்டுமில்லாமல் என் எண்ணமும் கூட. என்னப்பா நான் சொல்வது சரியா!’’ என்றவள் அப்பாவின் முகத்தை ஆவலோடு பார்த்தாள்.தன் பெண் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பாண்டித்துரை சிறிது நேரம் கழித்து மகளைப் பார்த்து ‘‘அம்மா நீ உன் தாய்மாமனை திருமணம் செய்து கொள்வதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன். எனக்கு முழு
சம்மதம்’’ என்றார்.இதைக் கேட்ட மகாலட்சுமிக்கு சந்தோஷத்தில் சிறிது நேரம் வாய் திறந்து வார்த்தைகள் வெளிவரவில்லை. உடல் லேசாகி வானத்தில் பறப்பது போல்
இருந்தது. நிதானத்துக்கு வந்தவுடன் ஓடி போய் தன் தந்தையை கட்டிக் கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள்.
சிறிது நேரத்தில் பூவண்ணன் கைபேசி சிணுங்கியது. அலட்சியமாக எடுத்தவன் ‘‘என்ன செய்தி?’’ என்றான். மறுமுனையில் இருந்து ‘‘மகாலட்சுமி பூவண்ணன் பேசுகிறேன்’’ என்றாள் மகாலட்சுமி. சந்தோஷத்தில் பூவண்ணனுக்கோ என்ன பேசுவது என்று புரியவில்லை. சிறிது நேரம் கழித்து ‘‘என்ன? எப்படி?உங்களை நேரில் சந்திக்கும் போது விவரமாக கூறுகிறேன்’’ என்றவள் தன் கைபேசியை மகிழ்வுடன் அணைத்துக் கொண்டாள்.
தொகுப்பு: தி. பிரேமா
The post சிறுகதை-பிராயச்சித்தம் appeared first on Dinakaran.