×
Saravana Stores

திருவண்புருஷோத்தமம் புருஷோத்தம பெருமாள்

தன் சீடன் உபமன்யுவின் முகத்தில் ஜொலித்த தீட்சண்யம் கண்டு பிரமித்தார், குரு அயோத தௌமியர். அது என்ன இப்படி ஒரு தேஜஸ்! யுகாந்திரமாக தவம் மேற்கொண்டவனைப் போல அது என்ன இப்படி ஒரு பிரகாசம்! எதனால் இது சாத்தியம்? இவனது பெற்றோர் ஒன்றும் இவனைப் போல களையானவர்கள் அல்லவே. ஆனால் இவனுக்கு மட்டும் எப்படி இந்த ஒரு பாக்கியம்!

தன் போதனையினால், தன் கற்பித்தலால் அவையனைத்தையும் அவன் உள்வாங்கிக் கொண்டதால் ஏற்பட்ட வியத்தகு விளைவா இது? அயோத தௌமியரால் நம்பவே முடியவில்லை. பிற எந்த சீடரும் வெளிப்படுத்தாத அற்புத முகவசீகரம் அல்லவா இது! தன் கல்வி போதனை ஒரே மாதிரியாக இருக்கும் பட்சத்தில் எல்லா மாணவர்களுக்கும் சற்றே கூடுதல், குறைச்சலாகத்தானே திறமைகள் வெளிப்படவேண்டும்? அதுவும் அவரவர் மனப்பக்குவத்தைப் பொறுத்துதானே அமையும்? ஆனால் உபமன்யு மட்டும் எப்படி பாராட்டத்தக்க வகையில் வித்தியாசம் காட்டுகிறான்? கற்றுக் கொடுக்கும் தன் ஆற்றல் மீது அந்த குருவுக்கே சுய பிரமிப்பு ஏற்பட்டது. ஆனாலும் தன் தகுதியைப் பூரணமாக அறிந்தவர் ஆதலால், அது உண்மைதானா என்பதை சோதித்துப் பார்க்கவும் அவர் முற்பட்டார்.

தினந்தினம் அந்தப் பகுதியிலிருந்த வீடுகள் முன்பாக நின்று பிட்சை கேட்டு தனக்கு இடப்படும் உணவையே ஆகாரமாக அருந்திவந்தான் உபமன்யு. இந்த உணவுகளால், அந்த ஆரோக்கியமான சத்தால் அவன் இப்படி ஒளிர்கிறானோ என்று சந்தேகம் வந்தது அயோத தௌமியருக்கு. உடனே சீடனுக்கு அவ்வாறு அவன் பிட்சை எடுத்து உணவு அருந்தக் கூடாது என்றும் அவ்வாறு அவன் தினசரி உணவை எதிர்பார்த்துப் போகும்போது ஏதேனும் ஒரு வீட்டில் அளிக்க ஒன்றும் இல்லாவிட்டால் ‘அயோத தௌமியரின் சீடருக்கு உணவிட முடியவில்லையே’ என்ற வருத்தத்துக்கு அவர்களை ஆளாக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

குருவின் ஆணை எதுவானாலும் அதனை அப்படியே ஏற்று அதன்படி நடக்கும் முழுமையான சீடன் ஆனதால், உபமன்யு அப்போதிலிருந்தே பிட்சை ஏற்கப் போகாமல் நின்றுவிட்டான். நாளாக ஆக, அவன் பட்டினியாகக் கிடந்ததால், அவன் உடலில் தேஜஸ் குறையும் என்று அவர் எதிர்பார்த்தார். இல்லை. ஆனால் பசி என்னும் உணர்வை அந்தச் சிறுவனால் வெல்ல முடியவில்லை. மாடுகளை மேய்த்து வரும் பணியை மேற்கொண்டிருந்த அவன், கன்றுகள் தம் தாய் மடியிலிருந்து பாலருந்துவதைப் பார்த்தான். தனக்கு அந்தப் பால் பசி தீர்க்கும் என்று நினைத்து, தானும் அந்தக் கன்றுகளைப் போலவே தாய்ப் பசு மடியிலிருந்து பால் அருந்தினான்.

இதைக் கேள்விப்பட்ட குரு, அவன் அவ்வாறு பால் அருந்தக்கூடாது என்றும், தன் கன்றுகளுக்காகத் தான் சேகரித்து வைத்திருக்கும் பாலை அவன் அருந்துவதால் அந்தக் கன்றுகளைப் பசு பட்டினி போடும் பாவத்துக்கு அவன் ஆளாவான் என்றும், அதோடு, கன்று அருந்தியதுபோக பசுவின் மடியில் எஞ்சியிருக்கும் பாலை, பாலாக, தயிராக, வெண்ணெய்யாக, நெய்யாகப் பயன்படுத்தும் மக்களின் தேவைகளுக்கும் அவன் குறை வைக்கிறான் என்றும் குற்றம் சாட்டினார். அதனால் பசுவிடமிருந்து பால் அருந்தக்கூடாது என்று அவனைத் தடுத்தார்.

உபமன்யு ஏற்றுக்கொண்டான். தன்னிடமிருந்து அவன் பால் பெறாதது கண்டு பசுக்களும் கண்ணீர் வடிக்க, அவனோ குருவின் ஆணையை அப்படியே நிறைவேற்றுவதே தன் மாணவப் பணி என்பதை நிரூபித்தான். பசியால் உடல் நலிந்தாலும், முகத்தில் அந்தப் பேரொளி குன்றாததை கவனித்தார் அயோத தௌமியர். அந்த ரகசியம் மட்டும் அவருக்குப் புரியவேயில்லை. அவனிடம் மறைமுகமாகக் கேட்டும் பார்த்துவிட்டார். அவனுக்கும் சொல்லத் தெரியவில்லை. ‘அப்படியா, என் முகம் அப்படியா ஒளிர்கிறது?’ என்று அப்பாவியாக அவரிடமே கேட்டான் அவன். ஏதோ மர்மத்தை இவன் மறைக்கிறான் என்று அநியாயமாக சந்தேகப்பட்டார் குரு. ஆனாலும், எத்தனை நாள்தான் இவன் இப்படி பட்டினி கிடப்பான்; என்றேனும் ஒருநாள் இவன் முக தேஜஸ் குறையாதா என்று குரூரமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்.

பால் பசியைத் தீர்க்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்த உபமன்யு, அந்தப் பகுதியில் உலாவியபோது, ஒரு எருக்கம் செடியிலிருந்து பால் வடிவதைப் பார்த்தான். அது தன் பசியைத் தணிக்கும் என்ற ஆவலுடன் அதனருகே போய் அந்தப் பாலைப் பருகினான். அவ்வளவுதான் உடனே அவனுடைய பார்வையை, நஞ்சு மிகுந்த அந்த எருக்கம் பால் பறித்துவிட்டது. ஒன்றுமே பார்வைக்கு உட்படாத அந்த திடீர் அதிர்ச்சியால் தாக்குண்ட உபமன்யு, தட்டுத் தடுமாறி பாதையை தொடு உணர்வால் அறிந்து கொள்ள முயற்சித்து குருவின் ஆசிரமத்துக்கு வந்து கொண்டிருந்தான். ஆனால் வழியில் ஒரு பாழுங் கிணற்றில் தடுமாறி விழுந்துவிட்டான்.

உபமன்யுவை கடுமையான சோதனைகளுக்கு குரு உட்படுத்தினாலும், வெளியே சென்ற அவன் ஒரு நாள் முடிந்தும் ஆசிரமத்துக்குத் திரும்பவில்லை என்ற உண்மை அவரை வதைத்தது. ஏதோ பதைபதைப்பு உந்த அவர் கானகத்துக்குள் சென்று அவனைத் தேடினார். சற்றுத் தொலைவில் ஏதே முனகல் ஒலி கேட்கவே, அப்பகுதிக்கு விரைந்து சென்றார். அங்கே ஒரு பாழுங்கிணற்றுக்குள்ளிருந்து வந்த அந்த குரல் தன் சீடன் உபமன்யுவினுடையதுதான் என்பதைப் புரிந்து கொண்டார். பதறிய அவர், உடனே கிணற்றுக்குள் இறங்கி, அவனை சுமந்து மேலே கொண்டு வந்தார். ஆனால் அப்போதும் அவன் முகத்தில் மலர்ச்சி, ஒளி, காந்தம், ஈர்ப்பு… ‘‘என்ன மாயமடா இது? உன் உடல் தளர்ந்தாலும், உன் முகத்தில் மந்தஹாசம் தவழ்கிறதே, அது எப்படியடா?’’ என்று பொறுக்க மாட்டாமல் அவர் கேட்டுவிட்டார்.

அவருக்கு அப்போது அங்கே தோன்றிய ஒரு பேரொளி பதில் சொன்னது. மஹாவிஷ்ணுவான அந்த ஒளி, உபமன்யுவின் முக தேஜஸுக்கான காரணத்தை, அதற்கு மூலமான ஒரு சம்பவத்தை விவரித்தது: வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் தன் இறைவனான ஈசனை மிகுந்த பக்திக் காதலுடன் வழிபட்டவர். அன்றலர்ந்த மலர்களை ஈசனுக்கு அர்ப்பணித்து அகமகிழ்ந்தவர். ஆனாலும் அந்த மலர்களை பிற யாரும் தொட்டுவிட முடியாத வகையில், பின்னிரவு நேரத்திலேயே அவற்றைக் கொய்து ஈசனுக்கு சமர்ப்பிக்கப் பேராவல் கொண்டவர். பின்னிரவு நேரத்தில் மரங்கள் மீதேறி மலர்களைக் கொய்வது அவ்வளவு எளிதான செயலா என்ன? அதனாலேயே ஈசனிடம் தன்னுடைய பாதங்களை புலியின் பாதங்களாக உருமாற்றித் தருமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டார். அவரது பக்தியால் நெகிழ்ந்த மகாதேவன், அவர் விருப்பப்படியே அவருடைய பாதங்களைப் புலிப் பாதங்களாக உருமாற்றினார். கூர்மையான அந்த நகங்களால் மரத்தைப் பற்றியபடி வெகு எளிதாக மரங்கள் மீதேறி மலர்களைக் கொய்தார், வியாக்ரபாதர்.

இப்படி பின்னிரவு நேரத்தில் இவ்வாறு மலர்களைக் கொய்ய வேண்டிய அவசியம்தான் என்ன? தன் இறைவனுக்கு, யாரும் தொட்டுவிடாத மலர்களை சமர்ப்பிக்க அவர் எண்ணம் கொண்டாரில்லையா, அந்த ‘யாரும்’ என்பதில் தேனீக்களும் அடங்கும். மலரக் காத்திருக்கும் மொட்டுகளைக் குறிவைத்து, பறந்து சென்று அந்த மலர்கள் மீதமர்ந்து தேன் உறிஞ்சும் இயல்பைக் கொண்டவையாயிற்றே அவை! அதற்கு வாய்ப்பளிக்காமல், தேனீக்கள் வாய் வைத்து சுவைக்கும் முன்னாலேயே பரிசுத்தமான அந்த மலர்களைப் பறித்து வருவதற்காகத்தான் இந்த புலிப்பாத ஏற்பாடு!

இத்தகைய பரிபூரண பக்தரான வியாக்ரபாதரின் மகன்தான் உபமன்யு. இந்த முனிவர் தன் மகனுடன், பெருமாள் திருக்கோயில் கொண்டிருக்கும் இந்த தலத்துக்கு வந்தார். ‘அயோத்தி இடமுடை வதரி, இடவகை உடைய எம் புருஷோத்தமன் இருக்கை’ என்று பெரியாழ்வார், அயோத்தியே இந்த திருவண்புருஷோத்தமம் என்ற திருத்தலம், அயோத்தி மன்னனே இந்த புருஷோத்தமன் என்றும் பாடி மகிழ்ந்த தலம் இது. இதனையும், இதனைச் சுற்றியுள்ள வனப் பிரதேசத்தில் எண்ணிறந்த மலர்ச் செடிகளும், மரங்களும் நிறைந்திருந்ததைப் பார்த்தார் வியாக்ரபாதர். உடனே இந்தப் பெருமாளுக்கும் அந்த மலர்களைச் சேகரித்து அர்ச்சித்து மகிழ ஆசைப்பட்டார். உடனே பாலகன் உபமன்யுவை ஓரிடத்தில் அமர்த்திவிட்டு மிகுந்த ஆவலுடன் மலர்களைக் கொய்யச் சென்றார்.

பக்தி மிகுதியாலும், எல்லா வண்ணத்திலும், எல்லா வகையிலும் மலர்களைப் பறித்து மாதவனுக்கு சமர்ப்பிக்கும் ஆர்வத்தாலும் நேரம், காலத்தை மறந்தார். போதுமென்றே அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. ஒரு செடியில் மலர்கள் அனைத்தையும் பறித்து முடித்ததும், சில அடி தூரத்தில் இன்னொரு செடி, ஏகப்பட்ட மலர்களுடன் தலையசைத்து அவரை வரவேற்றது. இவ்வாறு இவர் செடிக்குச் செடி போய் மலர்களைப் பறிக்க, அங்கே காத்திருந்த உபமன்யுவுக்கு, பசி அழுகையை வரவழைத்தது. பசி உபாதை அந்த அழுகையைப் பெரிதாக்க, அது அங்கே கோயில் கொண்டிருந்த புருஷோத்தம நாயகியின் காதுகளில் அது தீனக் குரலாக விழுந்தது. பதறிப்போனது அந்தத் தாயுள்ளம். அவள் உடனே தன் நாயகனைப் பார்த்தாள். ‘அந்தக் குழந்தையின் பசியை ஆற்றக்கூடாதா?’ என்று தாய்மை உணர்வோடு இறைஞ்சினாள். உடனே பரந்தாமன் பாற்கடலையே அங்கே வரவழைத்தார்.

இதுதான் பெருமாளின் கருணை உள்ளம்! குழந்தைப் பசி தணிக்கப் பாற்கடலா தேவை? ராம காவியத்தை எழுதுமுன், ராமாயணம் என்னும் பாற்கடலை அப்படியே குடித்துவிடும் பேராசை மிக்க ஒரு பூனைபோல, தான் திகைத்துத் தடுமாறுவதாகக் குறிப்பிடுவார், கவிச்சக்கரவர்த்தி கம்பர். ‘உனக்கு எவ்வளவு வேண்டுமோ, அவ்வளவையும் எடுத்துக்கொள்.’ என்று தன் அருட்கருணையை அலைகடல்போல விரித்து நம்முன் பரப்பி வைத்துவிடுவான், பரந்தாமன். தன் பக்தர்கள் மேல் அவனுக்கு அத்தனை அன்பு, பரிவு, கருணை… அதுபோல உபமன்யுவும் திகைக்க, அந்தப் பாற்கடலிலிருந்து சில துளிகள் அவன் வாயில் விழுந்து, அவன் பசியைத் தீர்த்தன.

இப்படி பாற்கடல் அவன் பசி தீர்த்ததால்தான் அவன் முகம் இத்தனை தேஜஸோடு பொலிகிறது என்று பேரொளியாகிய மஹாவிஷ்ணு, அயோத தௌமியருக்கு விளக்கினார். கூடவே உபமன்யுவுக்கு பார்வையளித்து தன் பேரருளால் அவனையும், ஏனையோரையும் அவர் உய்வித்தார்.

ஒரு சிறு குழந்தையின் பசி தீர்க்க பாற்கடலையே கொண்டுவந்த பரந்தாமனின் பெருங்கருணை இடம்பெற்ற தலமாதலால், இது திருவண்புருஷோத்தமம் என்றாகியது. இங்கே கோயில் கொண்டிருக்கும் பெருமாள், கேட்போருக்கு அவர்கள் கேட்பதற்கும் மேலாகவே வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்கிறார். இப்படி பெருமாள் அபிரிமிதமாக அருள்கிறார் என்றால் சந்தோஷத்துக்குக் கேட்கவா வேண்டும்! அதனாலேயே இந்தத் தலம் மகிழ்ச்சி பூரிக்க, கேளிக்கையும், கொண்டாட்டமுமாகத் திகழ்ந்திருக்கிறது.

அப்பன் வந்துறை கோயில்
இளைய மங்கய ரிணையடிச் சிலம்பினோ
டெழில் கொள் பந்தடிப்போர் கை
வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர்
வண் புருடோத்தமமே –

என்று நெகிழ்ந்து பாடுகிறார் திருமங்கையாழ்வார். இந்தத் திருத்தலத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவேயில்லை. அதனால் மகளிர் எந்தக் குறையும் இல்லாமல், சந்தோஷமாக பந்தடித்து விளையாடுகிறார்கள். அவ்வாறு அவர்கள் விளையாடும்போது அவர்களது கால் சிலம்போசையும், கை வளையல் ஓசையும் மங்கலமாக என்றென்றும் இங்கே ஒலித்துக் கொண்டேயிருக்கிறது என்று இந்தத் தல குதூகலத்தை விவரிக்கிறார் ஆழ்வார்.

கோயில் மிகவும் எளிமையானதுதான். ஒரு வைணவத் தலத்தின் சம்பிரதாயப்படி கருடன் சந்நதி, ஆஞ்சநேயர் சந்நதி, உள் பிராகாரத்தில் இன்னொரு சிறிய திருவடி சந்நதி, ராமர் சந்நதி என்று அமைந்திருக்கின்றன. இங்குள்ள மூலவரான புருஷோத்தமன், அயோத்தி எம்பெருமானே என்பது பெரியாழ்வாரின் கணிப்பு. 108 திவ்ய தேசங்களிலேயே இங்கு மட்டும்தான் பெருமாள் ‘புருஷோத்தமன்’ என்று அழைக்கப்படுகிறார். அதாவது புருஷர்களிலேயே இவர் உத்தமன். யார் உத்தமன்? தான் துன்பம் கொண்டாலும், பிறர் இன்பம் அடையவேண்டும் என்று விரும்புபவன்! இந்தப் புருஷ உத்தமன் அத்தகையவர்தானே!

தாயார் புருஷோத்தம நாயகி தனி சந்நதியில் எழுந்தருளியிருக்கிறார். பச்சிளம் பாலகனுக்காகத் தான் செய்த பரிந்துரையை உடனே ஏற்று, அதனை, பாற்கடலையே கொண்டுவரும் அளவினதாக நிறைவேற்றிய பெருமாளின் திருக்கருணையை நினைந்து நினைந்து கண்களில் நீர் பனிக்க தாயார் காட்சி தருவதாகவே உணர முடிகிறது. இந்தத் தாயாரின் சிபாரிசுதான் எத்தனை வலியது! வெறும் பசி மட்டுமா, வேறு எல்லா குறைகளுமே இந்த அன்னையின் கடைக்கண் பார்வையாலேயே தீர்ந்துவிடுமே! தாயாரின் தரிசனம் உள்ளத்தை பக்தியால் கசிய வைப்பதை அன்னையை தரிசித்து, உணர்ந்துதான் அனுபவிக்க வேண்டும்!

எப்படிப் போவது: அரிமேய விண்ணகரம் கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் உள்ளது, திருவண் புருஷோத்தமம். முன்கூட்டியே திட்டமிட்டு சீர்காழியிலிருந்து டாக்ஸி அல்லது ஆட்டோ அமர்த்திக்கொண்டு, இக்கோயிலுக்கு வரலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 9.30 முதல் 12.30 மணிவரையிலும், மாலை 5 முதல் 7 மணிவரையிலும். முகவரி: அருள்மிகு புருஷோத்தமப் பெருமள் திருக்கோயில், நாங்கூர் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம் – 609106

தியான ஸ்லோகம்
சுத்த: ஸ்ரீபுருஷோத்தம மாக்ய நகரே தேவோபிதாத் ருக்வித:
தத் வல்லீ மஹிஷீ ஸுதா கமலிநீ தத்ரோபமந்யோ: புரா
ப்ரத்யக்ஷோ விமலம் விமாநமபி தத் பஞ்சக்ரஹாக்யம் பரம்
ப்ராதர் பாஸ்கர ஸம்முகஸ் ஸுர கணை: ஆஸீநரூபோ வஸந்.

The post திருவண்புருஷோத்தமம் புருஷோத்தம பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Thiruvanpurushottam ,Guru ,Ayodhya Daumiya ,Upamanyu ,
× RELATED குரு பூஜையையொட்டி டாஸ்மாக் மூடல்