×
Saravana Stores

ஏன்? எதற்கு? எப்படி?

?வீட்டினுள் தேனீ கூடு கட்டுவது நல்லதா கெட்டதா?
– சுகன்யா, சாத்தூர்.

வீட்டுத் தோட்டத்தில் தேனீ கூடு கட்டுவது நல்லது. வீட்டிற்குள் கட்டக் கூடாது. வீட்டிற்குள் தேனீ மட்டுமல்ல, குருவியும்கூட கூடு கட்டக் கூடாது. நாம் குடியிருக்கும் வீட்டிற்குள் மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு அனுமதி இல்லை. நாய், பூனைகூட வீட்டிற்கு வெளியேதான் இருக்க வேண்டும். நாம் தெய்வமாகக் கொண்டாடும் பசுமாடு கூட புதுமனை புகுவிழா சமயத்தில் கோபூஜை நேரம் தவிர மற்ற நேரத்தில் வீட்டுத் தோட்டத்தில்தானே கட்டி வைக்கப்படுகிறது. மாட்டுப் பொங்கல் நாளன்றுகூட மாட்டுத் தொழுவத்தில்தான் மெழுகி கோலம்போட்டு பொங்கல் வைத்து கொண்டாடுகிறோமே தவிர, மாட்டினை வீட்டிற்குள் கொண்டுவருவதில்லை. தேனீ மாத்திரமல்ல, வண்டு, குளவி, மூட்டைப் பூச்சி, கரப்பான், கொசு என எந்த உயிரினத்திற்கும் வீட்டிற்குள் அனுமதி இல்லை.

?எண்கணிதம், ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதா?
– மலையப்பன், சென்னை.

இல்லை. இந்த மூன்றுமே தனித்தனி பொருளைக் கொண்ட பிரிவுகள்தான். இதில் அணு அளவும் சந்தேகம் வேண்டாம். ஜோதிடம் என்கிற வார்த்தைக்கு “ஒளி அறிவியல்’’ என்று பொருள். சூரியனிடமிருந்து பெறும் ஒளியை மற்ற கிரகங்கள் இந்த பூமியின் மீதும் அதில் வாழும் மனிதர்கள் மீதும் பிரதிபலித்து அதனால் என்னென்ன பலன்கள் விளையும்
என்பதை ஆராய்ந்து சொல்லும் அறிவியலே ஜோதிடம். ஆனால், எண் கணிதம் என்பது எண்களைக் கொண்டும் பெயரின் எழுத்துக்களைக் கொண்டும் பலன் சொல்லப்படும் ஒரு கலை. இதற்கும் ஜோதிடத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. அதே போல, வாஸ்து சாஸ்திரம் என்பது சில்ப சாஸ்திரம் என்று அழைக்கப்படும் சிற்பக்கலையின் ஒரு பகுதி. ஆலயத்தின் கட்டுமானத்தில் இருந்துதான் இந்த வாஸ்து சாஸ்திரம் என்பது உருவானது. சிவில் இன்ஜினியரிங் என்றும் எளிதில் புரிந்துகொள்ளலாம். ஆக, இந்த மூன்றையும் ஒன்றோடொன்று இணைத்து குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

?ருத்ராட்ச கொட்டையை சிலர் சிவப்புக் கயிறு, கறுப்பு கயிறு மற்றும் தங்கச் செயினில் கட்டி கழுத்தில் அணிந்து கொள்கிறார்கள். எது நல்லது?
– வண்ணை கணேசன், சென்னை.

இது எல்லாமே ஒரே விதமான பலனைத்தான் தரும். அவரவர் வசதிக் கேற்றாற்போல் கட்டிக் கொள்ளலாம். ருத்ராட்சம் கழுத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கமே அன்றி அது எதனால் கட்டப் பட்டிருக்கிறது என்பதற்கு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் இல்லை. பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இரும்பினால் ஆன சங்கிலி தவிர மற்றவைகளை ருத்ராட்சம் கட்டிக் கொள்ள உபயோகப்படுத்தலாம். இதனால் பலன் என்பது மாறாது.

?வீட்டில் உள்ள வண்ணங்களுடன் வாஸ்து எவ்வாறு தொடர்புடையது?
– விஜயன், திருப்பூர்.

வீட்டில் வாழும் மனிதர்களின் உளவியல் ரீதியான மாற்றங்களை வண்ணங்கள் தரும். உதாரணத்திற்கு வெள்ளை, ஐவரி, வெளிர்மஞ்சள் போன்ற வண்ணங்கள் மனதை தூய்மையாக வைத்திருக்க உதவும். பச்சை நிறம் என்பது புத்துணர்ச்சியைத் தரும். கரும்பச்சை, நீலம், சிவப்பு போன்ற அடர்ந்த நிறங்கள் திருஷ்டி தோஷத்தில் இருந்து காக்கும். அதனால்தான் அடர்ந்த வண்ணங்களை வீட்டின் வெளிப்புறச் சுவர்களுக்கும், வெளிர் நிறங்களை வீட்டின் உட்புறச் சுவர்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

?ஒன்றும் அறியாத குழந்தைகூட கொடிய நோயினால் அவதிப்படுகிறதே? அது என்ன பாவம் செய்திருக்கும்?
– சங்கீதசரவணன், மயிலாடுதுறை.

‘பூர்வ ஜென்ம க்ருதம் பாபம் வ்யாதி ரூபேண பீடதே’ என்கிறது சாஸ்திரம். முன்ஜென்ம வினை என்பது தொடர்கிறது என்பதையே அது காட்டுகிறது. இதுபோக, முன்ஜென்மாவில் ஏதோ ஒரு வியாதியால் பாதிக்கப்பட்டு, அந்த நோயின் கடுமை தாங்க இயலாமல் தற்கொலை செய்து கொள்பவர்களுக்கும், மறுஜென்மத்தில் பிறக்கும்போதே அந்த வியாதி என்பது தொடர்கிறது. ஆக, எந்த ஒரு கர்மாவிற்கான பலனையும் முழுமையாக அனுபவித்து தீர்த்துவிட வேண்டுமே தவிர, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. எத்தனை ஜென்மாக்களை எடுத்தாலும் வினைப் பயன் என்பது முழுமையாக அதன் பணியைச் செய்யும். அதன் விளைவுதான் இதுபோன்ற நிகழ்வுகள். அதைக் கண்டு நாம் மனம் வருந்துவதைவிட அதனைத் தாங்கக்கூடிய வலிமையைத் தரவேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதே நல்லது.

?பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன?
– வசுமதி, திருத்தணி.

பஞ்சமம் என்றால் ஐந்து. பட்சி என்றால் பறவை. ஐந்து பறவைகளைக் கொண்டு பலன் சொல்லும் முறைக்கு பஞ்சபட்சி சாஸ்திரம் என்று பெயர். அதாவது 27 நட்சத்திரங்களை ஐந்து பறவைகளுக்குள் அடக்குவார்கள். வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகியவையே அந்த ஐந்து பறவைகள். அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் ஆகிய முதல் ஐந்து நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பறவை வல்லூறு. திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பறவை ஆந்தை. உத்திரம், ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பறவை காகம். அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பறவை கோழி. திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பறவை மயில் என்று பிரித்திருக்கிறார்கள். இந்த ஐந்து பறவைகளும் ஐந்துவிதமான தொழில்களைச் செய்கின்றன. அதாவது ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று ஐந்து தொழில்களையும் தந்திருப்பார்கள். இந்த ஐந்து பறவைகளும் வளர்பிறை காலங்களில் ஒரு விதமாகவும், தேய்பிறை காலங்களில் ஒருவிதமாகவும் மேற்சொன்ன ஐந்து தொழில்களை ஒவ்வொரு நேரத்தில் செய்வதாக பஞ்சாங்கத்தில் உள்ள அட்டவணையில் கொடுத்திருப்பார்கள். பகல் பொழுதினை ஐந்து ஜாமங்கள் ஆகவும், இரவுப் பொழுதினை ஐந்து ஜாமங்கள் ஆகவும் பிரித்திருப்பார்கள். பகல்பொழுது அல்லது இரவுப் பொழுது என்பது தோராயமாக 12 மணி நேரம் என்று வைத்துக் கொண்டால், ஒரு ஜாமத்திற்கு 2 மணி நேரம் 24 நிமிடம் என்ற கணக்கில் பிரித்துக் கொள்ள வேண்டும். நாம் எந்த கிழமையில் எந்த நேரத்தில் ஒரு வேலையைச் செய்யப் போகிறோம் என்பதைத்தீர்மானித்து நம்முடைய ஜென்ம நட்சத்திரத்திற்கு உரிய பறவை எது என்பதை அறிந்துகொண்டு வளர்பிறைக் காலமா அல்லது தேய்பிறைக் காலமா என்பதையும் பார்த்து அதற்குரிய தொழில் என்ன என்பதை அந்த அட்டவணையின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஊண், அரசு என்பது உத்தமமான பலனையும் நடை என்பது மத்திமமான பலனையும் துயில் மற்றும் சாவு என்பது அதமமான பலனையும் தரும் என்பதை அறிந்துகொண்டு செயல்பட வேண்டும். இந்த பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது நம் தமிழர்கள் கண்டறிந்த ஒரு பாரம்பரியமான சாஸ்திரம் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும்.
ஏன் எதற்கு எப்படி..? தினகரன், ராசி பலன்கள்
தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை – 600 004.

The post ஏன்? எதற்கு? எப்படி? appeared first on Dinakaran.

Tags : Sukanya ,Chatur ,
× RELATED சாத்தூர் அருகே ஆட்டு தொழுவமான இ.சேவை மையம்