×

ஆலய வழிபாட்டின் அவசியம்!

கூழுக்கும் கஞ்சிக்கும் பாடிய ஒளவையார், ஒருநாள் கால்நடையாக நடந்து வந்து களைப்புத் தீர, இறைவன் நடனமிடும் ஒரு சிவாலயத்திற்குள் வந்தார். வந்தவர் இறைவன் திருவுருவச் சிலைக்கு எதிராக தன் இரு கால்களையும் நீட்டி அமர்ந்தார். அங்கிருந்த பக்தர்களுள் ஒருவர் ஔவையாரைப் பார்த்து, ‘‘பகவான் இருக்கும் திசையை நோக்கிப் பாதத்தை நீட்டி அமர்வது பாவமல்லவா?’’ என்று சற்று பயத்துடன் கேட்டார். காரணம், ‘‘ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ’’ என்று முருகனுக்கே அறிவுரை சொன்ன மூதாட்டி அல்லவா அவர்? அதற்கு ஔவையார், முறுவல் பூத்த முகத்தவராக, ‘‘இறைவன் இல்லாத திசையைக் காட்டு. கால்நீட்டுகிறேன்’’ என்றார். இவ்வாறு ‘இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார்’ என்ற தத்துவத்தைச் சொல்லவே ஔவையார் இந்த விளையாட்டை அரங்கேற்றினார் என்ற ஒரு கதை உண்டு.

இதே ஔவையார்தான் ‘‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’’ என்றும் சொல்லியிருக்கிறார். இது சற்று முரண்பாடாகத் தெரியவில்லை. இல்லை, இது உடன்பாடுதான். கடவுளுக்கு எதிராகக் காலை நீட்டி கடவுள் எங்கும் இருக்கிறார் என்று சொல்லாமல் சொன்னதும் அவரை ஆலயத்தில் சென்று வழிபடுவதுதான் ஆகச் சிறந்தது என்று சொன்னதும் சரிதான்.

அவ்வகையில் ஆன்மாக்கள் லயிக்கும் இடங்களை நாம் ஆலயங்கள் என்கிறோம். இறையாற்றல் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், அவை முழுமையாக வெளிப்படும் இடங்கள் ஆலயங்கள் ஆகும். இதை வாரி யார் கேட்டாலும் வாரிவாரி வழங்கும் வாரியார் சுவாமிகள், ‘‘பசுவின் உடல் முழுவதும் பால் நிரம்பி இருந்தாலும் அதை காது வழியாக கறக்க முடியுமா? முடியாது. மடியின் வழியாகத்தான் கறக்க முடியும். அதுபோல இறையாற்றலானது எங்கும் வியாபித்திருந்தாலும் அதை திருக்கோயிலில்தான் அதிக அளவில் பெற முடியும்’’ என்கிறார்.

மற்ற இடங்களில் இறைவனை தியானித்தால் அரை நிமிடம் கூட அது முடியாது. பல காரணங்களால் சிந்தனை சிதறும். ஆனால், ஆலயத்திலோ, நம் பொறி புலன்களைக் கட்டுப்படுத்தி இறைச் சிந்தனையை மட்டுமே தூண்டும் வகையில் ஏற்பாடுகள் பல உள்ளன. ஆலயம் முழுவதும் ஆண்டவன் மீதும் அணிவிக்கப்படும் மலர் மாலைகள் அதிலிருந்து வரும் மணம், நம் மூக்கை வேறு சுவாசத்தை நுகரவிடாமலும், மணியோசை முதலிய மங்கல ஓசைகள் ஓங்காரம் முதலிய ஒலிகளை எழுப்பி காதுகளை வேறு ஓசையைக் கேட்க விடாமலும் செய்கின்றன. அங்கு வழங்கப்படும் பிரசாதமும் உச்சரிக்கக் கற்றுக் கொடுக்கப்படும் திருநாமமும் நம் நாக்கை இறைச் சுவையிலேயே இருக்கச் செய்கின்றன.

அற்புதமாக செய்யப்படும் அலங்காரமும், பேசும் சிற்பங்களும், பேரழகான ஓவியங்களும் நம் கண்களை கடவுள் காட்சியைக் காணச் செய்கின்றன. இப்படி ஆலயத்தில் ஆண்டவனை வழிபடும்போது எந்தச் சிந்தனையும் தடங்கலும் இல்லாமல் இறை சிந்தனையிலேயே திளைக்கலாம். அதனால் இறைவன் எங்கும் இருக்கிறார் என்ற தத்துவத்தை ஆயுதமாக எடுத்துக் கொண்டு ஆலயத்துக்கு செல்லாமல் இருக்க காரணம் காட்டுவோர் இனியேனும் இறைவன் ஆலயத்தில் சென்று வழிபட வேண்டும்.

தொகுப்பு: முனைவர் சிவ. சதீஸ்குமார்

The post ஆலய வழிபாட்டின் அவசியம்! appeared first on Dinakaran.

Tags : Olavaiyar ,Googum ,Kanji ,Auvaiyar ,
× RELATED எழுத்தாளர் பாமாவிற்கு 2024ம் ஆண்டிற்கான...