சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, தேர்தல் ஆணையம் அனுமதி இல்லாமல் சென்னை விமான நிலையத்தில் பெருமளவு கூட்டத்தைக் கூட்டி போக்குவரத்துக்கும், பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்திய தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருதை டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். விருதை பெற்றுக்கொண்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன்தினம் மதியம் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில், தேமுதிக கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் குவிந்து பிரேமலதாவுக்கு வரவேற்பு அளித்ததோடு, விமான நிலையத்திலிருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு பேரணியாகவும் புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணையம் அனுமதி இல்லாமல் பேரணி நடத்துவது, பெருமளவு கூட்டம் கூடுவது தவறு என்று சென்னை விமான நிலைய போலீசார் தேமுதிகவினரிடம் கூறினர். இதனால் போலீசுக்கும், தேமுதிகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தேமுதிக தொண்டர் ஒருவர், விமான நிலைய வளாகத்திற்குள் நின்ற கார் ஒன்றின் மேல் ஏறி, கொடிக்கம்பத்தால் காரின் மேல் பகுதியை அடித்து சேதப்படுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து விமான நிலைய போலீசார் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தேர்தல் ஆணையம் சார்பில், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி, தேமுதிகவினர் மீது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக சென்னை விமான நிலைய போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார். அதன்பேரில் விமான நிலைய போலீசார், தேமுதிக மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட தேமுதிகவினர் மீது, 143 – சட்ட விரோதமாக கூடுதல், 147 – கலகம் செய்ய கூட்டத்தை கூட்டுதல், 341 – தனிநபரை முறையற்ற விதத்தில் தடுப்பது, 353 – அரசு ஊழியரை கடமையை செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தை பொருத்தமட்டில், இதேபோல் அரசியல் கட்சியினர் வரவேற்பு கொடுப்பதும், கூட்டம் கூடுவதும் வழக்கமாக நடக்கக் கூடியதுதான். ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நேரத்தில், தேர்தல் ஆணையம் அனுமதி இல்லாமல் பெரும் கூட்டத்தை விமான நிலையத்திற்குள் கூட்டி போக்குவரத்துக்கும், பயணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதால் தேர்தல் ஆணையம் புகாரின் பெயரில் சென்னை விமான நிலைய போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post பிரேமலதாவுக்கு வரவேற்பு அளிக்கும்போது போலீசாருடன் வாக்குவாதம்; தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு: தேர்தல் அதிகாரி புகாரில் நடவடிக்கை appeared first on Dinakaran.