- சென்னை
- ராஜஸ்தான்
- சிமர்ஜீத்
- ஐபிஎல் லீக்
- ராஜஸ்தான் ராயல்ஸ்
- சென்னை சூப்பர் கிங்ஸ்
- செபக்கம்
- ம.
- சிதம்பரம் அரங்கம்
- சஞ்சு சாம்சன்
- சிமர்ஜீத் அபாரா
- தின மலர்
சென்னை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ஜெய்ஸ்வால், பட்லர் இணைந்து ராயல்ஸ் இன்னிங்சை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 6.1 ஓவரில் 43 ரன் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் 24 ரன், பட்லர் 21 ரன், கேப்டன் சாம்சன் 15 ரன் எடுத்து சிமர்ஜீத் சிங் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் 14.2 ஓவரில் 91 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.
ஓரளவு தாக்குப்பிடித்த ரியான் பராக் – துருவ் ஜுரெல் இணை 4வது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தது. ஜுரெல் 28 ரன் (18 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி தேஷ்பாண்டே வேகத்தில் ஷர்துல் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஷுபம் துபே சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன் மட்டுமே சேர்த்தது. பராக் 47 ரன் (35 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ஆர்.அஷ்வின் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் சிமர்ஜீத் சிங் 4 ஓவரில் 26 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தேஷ்பாண்டே 4 ஓவரில் 30 ரன்னுக்கு 2 விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 142 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது.
ரச்சின், கேப்டன் ருதுராஜ் இணைந்து துரத்தலை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய ரச்சின் 27 ரன் (18 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அஷ்வின் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். டேரில் மிட்செல் 22 ரன் (13 பந்து, 4 பவுண்டரி), மொயீன் அலி 10, ஷிவம் துபே 18 ரன்னில் (11 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) வெளியேற, சென்னை அணி 14 ஓவரில் 107 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சற்றே பின்னடைவை சந்தித்தது.
ஜடேஜா 5 ரன் எடுத்த நிலையில், ஃபீல்டிங்குக்கு இடையூறு செய்ததாக அவுட் கொடுக்கப்பட்டார். ஜடேஜாவை ரன் அவுட் செய்வதற்காக சஞ்சு சாம்சன் எறிந்த பந்து ஜடேஜா மீது பட்டது. அவர் வேண்டுமென்றே ஸ்டம்புகளை மறைத்தபடி ஆடுகளத்தின் நடுவே ஓடியதாக முடிவு செய்த டிவி நடுவர் அவுட் என அறிவித்தார். இதனால் ஜடேஜா மிகுந்த ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். எனினும், சூப்பர் கிங்ஸ் 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. கேப்டன் ருதுராஜ் 42 ரன் (41 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), சமீர் ரிஸ்வி 15 ரன்னுடன் (8 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் அஷ்வின் 2, பர்கர், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
பந்துவீச்சில் அசத்திய சென்னை வேகம் சிமர்ஜீத் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார். சென்னை அணி 13 போட்டியில் 7வது வெற்றியுடன் (14 புள்ளி) 3வது இடத்துக்கு முன்னேறியதுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது. அதே சமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடித்தாலும், ஹாட்ரிக் தோல்வியால் சோர்வும் விரக்தியும் அடைந்துள்ளது.
The post 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை: சிமர்ஜீத் அபார பந்துவீச்சு appeared first on Dinakaran.