×
Saravana Stores

கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை வென்ற கீர்த்தி ஆசாத், யூசுப் பதான் தேர்தலில் வெல்வார்களா?: மேற்குவங்க தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு

கொல்கத்தா: கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை வென்ற முன்னாள் வீரர்களான கீர்த்தி ஆசாத், யூசுப் பதான் ஆகியோர் மக்களவை தேர்தலில் வெல்வார்களா? என்ற எதிர்பார்ப்பு மேற்குவங்க தேர்தல் களத்தில் எழுந்துள்ளது.
மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப். 19ம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஏழு கட்டங்களிலும் தேர்தலை எதிர்கொள்ளும் பீகார், உத்தரபிரதேச போன்ற மாநிலங்களின் பட்டியலில் மேற்குவங்கமும் சேர்ந்துள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் மேற்குவங்க தேர்தலில் கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை வென்ற இரண்டு கிரிக்கெட் வீரர்கள், தற்போது வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளதால் மாநிலத்தின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

கடந்த 1983ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் (65), பர்தமான்-துர்காபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் 2011ல் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் (41) பஹரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ளனர். மேற்குவங்க பாஜக முன்னாள் தலைவர் திலீப் கோஷுக்கு எதிராக பர்தமான்-துர்காபூரில் கீர்த்தி ஆசாத் போட்டியிடுகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது பேசிவரும் திலீப் கோஷ், மேதினிபூர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்த அவர், பாஜகவை கட்டமைப்பதற்காக அந்தமானுக்கு அனுப்பப்பட்டார். பின்னர் 2016ல் கரக்பூர் சதார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019ல் மெதினிபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இப்போது பர்தமான்-துர்காபூரில் களம் காண்கிறார். இவரை எதிர்த்து போட்டியிடும் கீர்த்தி ஆசாத், தர்பங்காவின் முன்னாள் பாஜக எம்பியாக இருந்துள்ளார். மறைந்த ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீது குற்றம்சாட்டியதால், அவர் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் காங்கிரசில் சேர்ந்த அவர் தன்பாத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து 2021ல் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்து, தற்போது பர்தமான்-துர்காபூர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் மா.கம்யூ சார்பில் சுக்ரிதி கோஷல் போட்டியிடுகிறார்.

அதேபோல் பஹரம்பூர் தொகுதியில் போட்டியிடும் யூசுப் பதான், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் திட்டங்கள் குறித்து பிரசாரம் மேற்கொள்கிறார். முஸ்லீம்கள் அதிகம் வாழும் தொகுதி என்பதால், இளைஞர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் மதரஸாக்களின் முக்கியத்துவம் குறித்து பேசிவருகிறார். அவரது பிரசாரத்தின் போது அடிக்கடி விளையாட்டு போட்டிகள் குறித்தும், அதுதொடர்பான திட்டங்களை செயல்படுத்துவதாகவும் கூறிவருகிறார். இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்படும் பஹரம்பூர் தொகுதியில், 1999ம் ஆண்டுக்கு பின் காங்கிரசின் கோட்டையானது.

மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவரான சிட்டிங் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2009 முதல் 2019 வரை தொடர்ந்து மூன்று முறை வெற்றிப் பெற்ற அவர், தற்போது கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளார். காரணம் இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. திரிணாமுல் சார்பில் யூசுப் பதானும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் நிர்மல் குமார் சாஹா என்பவர் பாஜக சார்பில் களம் காண்கிறார். கடந்த 2011ம் ஆண்டு முதல் ஆளும் கட்சியாக இருந்து வரும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், இதுவரை இந்த தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. பாஜகவும், இந்த தொகுதியில் காலூன்ற முடியவில்லை. மக்கள்தொகையில் இந்துக்கள் 45 சதவிகிதம், முஸ்லிம்கள் 50 சதவிகிதம், மற்ற மதத்தினர் 5 சதவிகிதம் பேர் உள்ளனர்.

அதனால் இந்த தொகுதியின் வெற்றிவாய்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நான்காம் கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்கும் 96 தொகுதிகளில் பஹரம்பூர் தொகுதியும் அடங்கும். அதேபோல் பர்தமான்-துர்காபூர் தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எப்படியாகிலும் இரண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், இந்த தேர்தல் சீசனில் வெற்றி பெறுவார்களா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

The post கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை வென்ற கீர்த்தி ஆசாத், யூசுப் பதான் தேர்தலில் வெல்வார்களா?: மேற்குவங்க தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Cricket world cup ,Kirti Azad ,Yusuf Pathan ,West Bengal ,KOLKATA ,World Cup ,Keerti Azad ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED டி-20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றில் மே.இ.தீவு அணி தகுதி