×

செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த 3 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

ஈரோடு, மே 12: பெருந்துறையில் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த பழக்கடை உரிமையாளர் உள்ளிட்ட 3 கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கோடை கால வெயில் காரணமாக பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். அதன்பேரில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்கிருஷ்ணன் பெருந்துறையில் செயல்பட்டு வரும் 10க்கும் மேற்பட்ட பழக்கடைகள் மற்றும் மூன்று மாம்பழ குடோன்களில் ஆய்வு மேற்கொண்டார். இதில், ஒரு குடோனில் ரசாயணம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 80 கிலோ மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. ஒரு குளிர்பான கடையில் ஜூஸ் போட வைக்கப்பட்டிருந்த தரம் குறைவான மற்றும் கெட்டுப்போன 10 கிலோ எடையிலான மாம்பழம், ஆப்பிள், பப்பாளி பழங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

ரசாயனம் தெளித்து மாம்பழங்களை பழுக்க வைத்த கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும், கெட்டுப்போன பழங்களை ஜூஸ் போட வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூ.1000ம் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ச்சியாக 5க்கும் மேற்பட்ட சிக்கன் மற்றும் சவர்மா விற்பனை கடைகளில் மேற்கொண்ட ஆய்வின்போது, ஒரு கடையில் செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட சுமார் 1.5 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு, கடை உரிமையாளருக்கு ரூ.1,000மும் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர்களுக்கு இயற்கையான முறையில் மாம்பழம் வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை பழுக்க வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். தரமான பழ வகைகளை பயன்படுத்தி ஜூஸ் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும், தடை செய்யப்பட்ட கேரி பேக் பயன்படுத்த கூடாது என கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ச்சியாக இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மாம்பழ கிடங்குகளில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை
மாம்பழ கிடங்குகளில் உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டதில் அழுகிய நிலையில் இருந்த 23 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழ மண்டிகளில் நேற்று முன்தினம் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அழுகிய நிலையிலான 23 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், இயற்கையான முறையில் மட்டுமே மாம்பழங்கள் உள்ளிட்ட அனைத்து வகை பழங்களையும் பழுக்க வைக்க வேண்டும். செயற்கை முறையில், ரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைக்க கூடாது என்றும் எச்சரித்தனர்.

The post செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த 3 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Food Safety Officer ,Perundhurai ,Dinakaran ,
× RELATED சாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்