சென்னை, மே 12: மழை வந்தாலே சென்னை மக்கள் பாடாய் படும் நிலையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் சென்னையில் மழை தேங்காத வகையில் நடவடிக்கை எடுப்போம் என்ற வாக்குறுதியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றது முதல் சென்னையில் போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகிறது.
ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டு விட்டது. புயல் மற்றும் பெருமழை காரணமாக சென்னை நகரமே வெள்ளக்காடானது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கியது.
பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால்கள் இருந்தும் எப்படி மழைநீர் தேங்கியது என பார்த்தால், மழைநீர் வடிகால்கள் இணைக்கப்பட்டுள்ள கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வெளியேற முடியாமல் திணறியதுதான் காரணம் என கண்டறியப்பட்டது. முக்கியமாக, இந்த நீர்நிலைகளில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருப்பதால், வெள்ளநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, நீர்நிலைகளை தூர்வாருவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. கோடை காலம் முடிந்து விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.
அதற்கு, முன்னதாக, மழைநீர் வடிகால்களை தூர்வாருவதற்கு சென்னை மாநகராட்சி ஆயத்தமாகி உள்ளது. இதற்காக, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ₹50 லட்சம் என மொத்தம் ₹7.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை வேகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. இவைகளில் குடிசைகள் மட்டுமின்றி பெரிய அளவிலான கட்டிடங்களும் உள்ளன. வீடுகள், சிறு தொழிற்சாலைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக தான் வெள்ளம் வடிவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதற்கிடையே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதில் சமரசம் செய்ய முடியாது என்றும் உறுதிபட கூறியுள்ளது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்கும் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு உள்ளன. அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கிய நிலையில், அங்கு செல்வதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர். மேலும் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வரும் நிலையில், அங்கு வசிப்பவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகளை ஒதுக்குவதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்குகிறது. இதை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது நாடாளுமன்ற தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே தேர்தல் முடிவுகள் வெளியாகி, தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் திரும்ப பெறப்பட்டதும் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கும். அதற்கு முன்பாக, ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்றனர்.
The post பருவ மழை காலத்தில் வெள்ள நீர் விரைந்து வெளியேற வசதியாக நீர்நிலை, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி விரைவில் தொடக்கம்: அகற்றப்படும் குடும்பங்களுக்கு வேறு இடங்களில் வீடு ஒதுக்கீடு appeared first on Dinakaran.