×

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்: கலெக்டர் அதிரடி உத்தரவு

பாடாலூர், மே 12: ஆலத்தூர் ஒன்றியத்தில் நீர்நிலை மற்றும் புறம்போக்கு நில ஆக்கிரமிப்புகளை ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என்று கலெக்டர் கற்பகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், ஓவர்சியர்களுடனான ஆய்வுக்கூட்டம் ஆலத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பேசுகையில், ஆலத்தூர் ஒன்றியத்தில் தலா ரூ.18லட்சம் வீதம் ரூ.36லட்சம் மதிப்பில் அருணகிரிமங்கலம் மற்றும் நொச்சிக்குளம் ஆகிய கிராமங்களில் 2 புதிய குளங்கள் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை மழைக்காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும். புதிய குளங்களை அமைப்பதோடு இருந்து விடாமல், தற்போது உள்ள குளங்களையும் சீரமைக்க வேண்டும். குளங்கள், ஏரிகளுக்கு வரும் வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும். ஒரு வார காலத்திற்குள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டு அதற்கான அறிக்கையினை சம்மந்தப்பட்ட கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் வழங்க வேண்டும். அதேபோல, கிராமப்பகுதிகளில் குடிநீர் சீராக வழங்கப்படுகின்றதா, குடிநீர் குழாய்கள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்றும், பழுதடைந்த நிலையில் குடிநீர் குழாய்கள் இருந்தால் அதனை உடனடியாக சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும் பணிகளை அந்தந்த பகுதிகளின் ஓவர்சியர்கள், உதவிப் பொறியாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்தப் பணிகளை முறையாக மேற்கொண்டு உரிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கிராமப்பகுதிகளில் குடிநீர் வரவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தால் சம்மந்தப்பட்ட பகுதிகளின் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களின் நிலை உணர்ந்து அனைவரும் பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.தொடர்ந்து செட்டிகுளத்தில் 116 குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தை கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், பிரேமலதா தாசில்தார் சத்தியமூர்த்தி, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளின் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், ஓவர்சீயர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்: கலெக்டர் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Badalur ,Karpagam ,Alatur union ,Aladhur ,Perambalur district ,Dinakaran ,
× RELATED பாடாலூர் செல்போன் கடையில் திருட்டு