×
Saravana Stores

96 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது நாளை 4ம் கட்ட மக்களவை தேர்தல்: ஆந்திரா, ஒடிசா சட்டப்பேரவைக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடக்கிறது

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் நான்காம் கட்டமாக 96 தொகுதிகளில் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. ஆந்திராவில் 175 சட்டப்பேரவை தொகுதிக்கும், ஒடிசாவில் 28 தொகுதிக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இறுதி பிரசாரத்திற்காக நேற்று ஆந்திரா, தெலங்கானாவில் அமித்ஷா, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் முற்றுகையிட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, நடந்து முடிந்துள்ள மூன்று வாக்குப்பதிவில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் மக்களவை தொகுதியில் பா.ஜ வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்று விட்டதால், அந்த இடத்தை தவிர மற்ற 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. நாளை நான்காம் கட்டவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டப்பேரவை தொகுதி, தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளிலும் நேற்று மாலை பிரசாரம் ஓய்ந்தது. இதை முன்னிட்டு முக்கிய தலைவர்கள் ஆந்திரா, தெலங்கானாவில் முற்றுகையிட்டனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் ஆந்திராவிலும், பிரியங்கா காந்தி தெலங்கானாவிலும் நேற்று இறுதிகட்ட பிரசாரம் மேற்கொண்டனர். மேலும் நாளை ஒடிசா சட்டப்பேரவையில் 28 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. நாளை தேர்தல் நடைபெற உள்ள 96 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் ஜெகன், முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு, மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், முதல்வர் ஜெகனின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, பா.ஜ மாநில தலைவர் புரந்தேஸ்வரி, தெலங்கானாவில் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். இதே போல் ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரிலும், அர்ஜுன் முண்டா ஜார்கண்டிலும் போட்டியிடுகின்றனர். நடிகர் சத்ருகன் சின்ஹா, மக்களவைகாங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோர் மேற்குவங்கத்தில் களம் காண்கிறார். உபியில் 13 தொகுதிகளிலும் மொத்தம் 130 பேர் போட்டியிடுகிறார்கள். கெரி தொகுதியில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவும்.

கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ், உன்னாவ் தொகுதியில் சாக்‌ஷி மகாராஜ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மகாராஷ்டிராவில் உள்ள 11 தொகுதிகளில் 298 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஜால்னா தொகுதியில் ஒன்றிய அமைச்சர் ராவ் சாகேப் தன்வே, பீத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பங்கஜா முண்டே, ஷிர்சூர் தொகுதியில் நடிகர் அமோல் கஹே ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மபியில் 8 தொகுதியில் 74 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாளை நடக்கும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

* 379 தொகுதிகளில் நாளையுடன் ஓவர்
குஜராத் மாநிலம் சூரத் தொகுதியை தவிர தேர்தல் நடக்கும் 542 தொகுதிகளில் 4ம் கட்டங்களையும் சேர்த்து 379 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இன்றும் 163 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. 5ம் கட்டமாக மே 20ம் தேதி 49 தொகுதிகளுக்கும், 6ம் கட்டமாக மே 25ம் தேதி 57 தொகுதிகளுக்கும், 7ம் கட்டமாக ஜூன் 1ம் தேதி 57 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

எந்த மாநிலங்களில்
எத்தனை தொகுதிகள்?
1. ஆந்திரா 25
2. பீகார் 5
3. ஜம்மு காஷ்மீர் 1
4. ஜார்கண்ட் 4
5. மத்திய பிரதேசம் 8
6. மகாராஷ்ட்ரா 11
7. ஒடிசா 4
8. தெலங்கானா 17
9. உத்தரபிரதேசம் 13
10. மேற்குவங்கம் 8

* மோடியுடன் விவாதம் ராகுல் காந்தி சம்மம்
மக்களவை தேர்தல் தொடர்பாக பொது தளத்தில் விவாதம் நடத்தவும், அதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி லோகுர், அஜித் பி ஷா மற்றும் பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் சமீபத்தில் அழைப்பு விடுத்தனர். இதற்கு தனது டிவிட்டரில் பதிலளித்துள்ள ராகுல் காந்தி, ‘‘இந்த முயற்சியை காங்கிரஸ் வரவேற்கிறது. இதில் நாங்கள் பங்கேற்கிறோம். நானோ அல்லது காங்கிரஸ் தலைவர் கார்கேவோ விவாதத்தில் பங்கேற்க ஆர்வத்துடன் உள்ளோம். அதே போல இதில் பிரதமர் மோடியும் பங்கேற்பார் என இந்த நாடு எதிர்பார்க்கிறது’’ என கூறி உள்ளார்.

The post 96 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது நாளை 4ம் கட்ட மக்களவை தேர்தல்: ஆந்திரா, ஒடிசா சட்டப்பேரவைக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Andhra ,Odisha Legislative Assembly ,New Delhi ,Lok Sabha elections ,Andhra Pradesh ,Odisha ,Amit Shah ,Rahul ,Priyanka ,Telangana ,
× RELATED மக்களவை தேர்தலில் சூதாட்டம் ஆன்லைன் நிறுவனத்தின் 4 கோடி சொத்து பறிமுதல்