×
Saravana Stores

வெற்றி தரும் வெற்றிலை மாலை வழிபாடு!

வாலி, ராமாயண காவியத்தின் முக்கிய கதாபாத்திரம். பராக்ரமசாலி. சிறந்த சிவபக்தன். யாருடன் நேருக்கு நேர் போர் புரிந்தாலும் எதிராளியின் பலத்தில் பாதி தனக்குக் கிடைப்பதாகிய ஈசனிடம் வரம் பெற்றவன். அதனால்தான் ராமச்சந்திரமூர்த்தியே வாலியை மறைந்திருந்து வதம் செய்ய வேண்டியிருந்தது. அத்தகைய வாலி வணங்கிய ஈசன் திருக்கோயில் சென்னை மயிலாப்பூரில் உள்ளது. மேருமலையில் உள்ள தடாகத்தில், பேரழகி ஒருத்தி நீராட வந்தாள். ரிக்ஷாஜசு என்பது அவள் பெயர். அவளை மணக்க விரும்பிய தேவேந்திரனிடம், தன்னை மணக்க வேண்டுமானால் தான் கூறும் நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும்; அதற்குச் சம்மதித்தால் தன்னை மணக்கலாம் என்றாள் அந்தக் கன்னி. அந்த நிபந்தனைகளையும் விவரித்தாள்:

‘‘தாங்கள் என்னை மணக்க வேண்டுமெனில், நமக்குப் பிறக்கும் குழந்தை சிவபூஜை செய்வதில் நிகரற்றவனாக இருக்க வேண்டும். அரிய பெரிய சிவலிங்க மூர்த்தங்களை வழிபடும் வழக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் கொண்டவனாகவும், வைத்திய சாஸ்திரங்கள் தெரிந்தவனாகவும் இருக்கவேண்டும். அது மட்டுமல்ல மற்றவர்களைப் போல நோயாலோ, மூப்பாலோ அல்லது வேறு எந்த அற்ப காரணங்களாலோ அவன் இறுதி மூச்சை விடக்கூடாது. யாரேனும் ஓர் அவதார புருஷனாலேயே அவன் வாழ்வும் முடிய வேண்டும். அப்படிப்பட்ட பராக்கிரமசாலியான ஒரு குழந்தையை தாங்கள் எனக்கு அளிக்க முடியுமானால் நான் உங்களைத் திருமணம் முடிக்கத் தடையேதும் இல்லை.’’

தேவேந்திரனும் அவ்வண்ணமே ஒரு குழந்தையை அவளுக்குத் தருவதாக வாக்குறுதி அளித்து அவளை மணந்தான். அந்த இருவருக்கும் பிறந்த வீராதி வீரன்தான் வாலி. இளவயது முதற்கொண்டே அன்னையின் விருப்பப்படியே சிவபூஜை செய்தும் சகல கலைகளை கசடறக் கற்றும் வளர்ந்து வந்தான். தன் தாயையே குருவாகக் கொண்டான் வாலி. வாலியின் அறிவிற்கும், அழகிற்கும் ஏற்ற மருமகள் கிடைத்தால் வாலியின் வாழ்வு மென்மேலும் சிறக்கும் என எண்ணம் கொண்டாள் ரிக்ஷாஜசு. வாலியை அழைத்து தன் விருப்பத்தை கூறினாள். ‘‘மகனே, நீ மேலும் சிறப்போடு வாழ வேண்டும். திருவண்ணாமலை சென்று அண்ணமலையாரையும், கௌதம முனிவரையும் தரிசித்து, மேலும் சில சிவபூஜைகளை கற்றுணர்வாய். பின் மயூரபுரி கடற்கரை ஓரத்தில் அமைந்த கைவரளி எனும் நீரோடையில் தினமும் சந்தியாவந்தனம் போன்ற நித்ய கர்மாக்களை முடித்து அந்த மயூரபுரியில் அருளும் ஏழு ஈஸ்வரர்களுள் ஒருவரான பவதாரண்யேஸ்வரரை வழிபட்டு வா. அவர் அருளால் உனக்கு நல்ல மனைவி கிடைப்பதோடு, சிறந்த அறிவும், ஆயுளும் அதிகரிக்கும். எவர் உன் எதிரில் நின்று போரிடுகின்றாரோ, அவரின் பாதி பலத்தை நீ பெற்றிடும் வரத்தையும் ஈசன் உனக்கு அருள்வார்,’’ என கூறி ஆசியளித்து அனுப்பினாள்.

தாயின் வாக்கை சிரமேற்கொண்டான் வாலி. முதலில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசித்து, பின் கௌதம முனிவரிடம் சில சிவபூஜா முறைகளையும் கற்றான். பின் மயூரபுரி வந்து நீராடி முறையாக ஈசனை வில்வதளங்களாலும், வாசமுள்ள மலர்களாலும் ஆத்மார்த்தமாக பூஜைசெய்து வந்தான். தினமும் காராம்பசுவின் பாலினால் ஈசனுக்கு அபிஷேகம் செய்து உடல் உறுதியை பெற்றான். பஞ்சாமிர்த அபிஷேகத்தால் பலவிதமான சித்திகளையும், தேன் அபிஷேகத்தால் பேரறிவையும், இளநீர் அபிஷேகத்தால் இன்னல்களைத் தகர்க்கும் ஆற்றலையும், கரும்புச்சாறு அபிஷேகத்தால் சந்தான சித்தியையும், மாதுளம்பழ முத்துக்களால் அர்ச்சித்து ராஜ்ய சித்தியையும், அன்னாபிஷேகம் செய்து தாரை எனும் நல்ல மனைவியையும் அடைந்தான். ஈசன் வாலியின் பூஜையில் மகிழ்ந்தார். வாலிக்கு பிரத்யட்சமாகி வாலி கேட்ட வரங்களை வாரி வழங்கினார். ‘வானர அரசனான நீ பூஜித்ததால் இன்று முதல் நீ பூஜித்த என் லிங்கத்திருமேனி வாலீஸ்வரர் என உன் பெயரிலேயே அருள்புரியும்’ என அருளாசி கூறி மறைந்தார். அன்று முதல் பவதாரண்யேஸ்வரர், வாலீஸ்வரர் என வணங்கப்படுகிறார். அன்றைக்கு மயூரபுரி என வழங்கப்பட்ட இடமே தற்போதைய மயிலாப்பூர்.

தன் தந்தை நலமோடும், தாய் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என இத்தலத்தில் அருளும் அம்பிகை பெரியநாயகிக்கு வளையல்களை சாத்தி சுமங்கலிகளுக்கு பிரசாதமாக அளித்தான் வாலி. ஈசனுக்கும் அம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் செய்து மகிழ்ந்தான். பக்தர்கள் வேண்டிடும் வரங்கள் வேண்டியபடியே அருள வேண்டும் என ஈசனிடம் கோரிக்கை வைத்தான். தனக்காக மட்டுமன்றி பிறருக்காகவும் வாலி வணங்கி வேண்டிய இத்தலத்தில் சனிக்கிழமை தோறும் காம்பு இல்லாத வெற்றிலையை மாலையாகக் கோர்த்து வாலீஸ்வரருக்கும், வாலிக்கும் சாத்தினால் சங்கடங்கள் சடுதியில் தீர்ந்து விடுகின்றன என பக்தர்கள் நம்புகின்றனர். இத்தலத்து நந்தியம்பெருமான் அதிகார நந்தியாக அருள்புரிகிறார்.கருங்கல்லால் ஆன பல்லியின் உருவம் ஒன்று ஆலய பிராகாரத்தின் வெளிப்புறச் சுவரில் காணப்படுகிறது. அதன் உருவத்தை கைகளால் தொட்டு வணங்க பல்வேறு தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம். இத்தலத்தில் அருளும் சனிபகவான் மேற்கு நோக்கிய நிலையில் காகத்தின் மீது அமர்ந்து திருக்காட்சியளிக்கிறார். மேலும் சந்தானக் குரவர்கள் என போற்றப்படும் மெய்கண்டசிவம், அருள்நந்தி சிவம், ஞானசம்பந்தசிவம், உமாபதி சிவம் ஆகிய நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம்.

பிராகாரத்தில் உள்ள மண்டபத்தின் மேல் சுற்றில் பதினெட்டு சித்தர்களும் சுதை உருவில் தரிசனமளிக்கின்றனர். அங்கே ஒரு சித்தபுருஷரின் ஜீவசமாதி ஐந்து லிங்கபாண மூர்த்திகளுடன் அருளலையைப் பரப்பி வீசிக் கொண்டிருக்கிறது.தல விருட்சமாக வன்னி மரம் திகழ்கிறது. திருஞான சம்பந்தர் இந்த வாலீஸ்வரரை வணங்கி பதிகம் பாடியிருக்கிறார். வேண்டும் வரங்கள் தருகிறார்கள் வாலீஸ்வரரும், அவர் இடப் பாகம் பிரியாத பெரிய நாயகி அம்மையும்.மயிலாப்பூர் பஜார் வீதிக்கு அருகே உள்ள கோலவிழியம்மன் ஆலயத்திற்கு அருகே மகத்தான இத்தலம் உள்ளது.

 

The post வெற்றி தரும் வெற்றிலை மாலை வழிபாடு! appeared first on Dinakaran.

Tags : Vali ,Shiva ,Eason ,Ramachandramurthy ,
× RELATED வேதை மேல மறைக்காடர் கோயிலில்...