×
Saravana Stores

எல்லோரும் வாருங்கள்!

ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி – 12.5.2024

“அனைத்து உலக மக்களும் இறைவனுடைய பேரருளைப் பெற்று நன்றாக வாழ வேண்டும். இணக்கமாக வாழ வேண்டும்’’ என்ற நல்ல எண்ணத்துடன் ஒரு மகான் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் என்கிற திவ்ய தலத்தில் அவதரித்தார். அவர்தான் ஸ்ரீ ராமானுஜர். 120 ஆண்டுகள் இந்த நிலவுலகில் வாழ்ந்தார். பொதுவாக, எம்பெருமானின் பெருமையை வேதங்களால்கூட பேச முடியாது. ‘‘யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சக’’ என்ற வேத வாக்கியத்தைச் சொல்வார்கள். ஆனால் அந்த எம்பெருமானான ஸ்ரீமந் நாராயணனின் பெருமையைக்கூட ஒருவகையில் பேசிவிடலாம். ஆனால் எம்பெருமானாராகிய பகவத் ராமானுஜரின் பெருமையைப் பேசமுடியாது என்பது ஸ்ரீவைஷ்ணவ சான்றோர்களின் கருத்து. மனிதகுலம் உய்வதற்கான உயர்ந்த நெறியை மிக எளிய வழியில் காட்டினார். சுவாமி விவேகானந்தர் ஒரு முறை மிக அழுத்தமாகச் சொன்னார்.

நம்முடைய சமய மரபில் ஸ்ரீ ராமானுஜரைப் போல ஒரு உத்தம புருஷரைப் பார்க்கவே முடியாது. ராமானுஜரின் கருணையானது அண்டத்தைப் போல் விரிந்து பரந்து இருக்கிறது. இந்த உயிர்களிடத்தில்தான் அவருக்கு எத்தனை அன்பு? உண்மைதான். சாஸ்திரங்களை பிழிந்து, அதனுடைய சாரத்தை எடுத்து, ‘‘இறைவனை அடைய இந்த எளிய வழியைப் பின்பற்றினால் போதும்’’ என்று இனிமையாக எடுத்துரைத்த மாண்பு அவருடையது. கி.பி 1017 ஆம் ஆண்டு பிங்கள வருடம், சித்திரை மாதம், வியாழக்கிழமை, வளர்பிறை பஞ்சமியன்று, திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார் ராமானுஜர்.

ஆரம்பத்தில் தன் தந்தையிடம் வேதங்கள் கற்றார். தன்னுடைய பதினாறு வயதில் தஞ்சமாம்பாள் என்பவரை மணந்தார். திருமணமான சில மாதங்களில் தந்தையை இழந்தார். பின், கல்வி கற்பதற்காக காஞ்சிபுரத்திற்கு குடும்பத்துடன் குடியேறினார். காஞ்சிபுரத்திற்கு பக்கத்திலுள்ள திருப்புட்குழி என்ற ஊரில் யாதவப் பிரகாசர் என்ற அத்வைத பண்டிதரிடம் கற்றார். அவருடன் அவர் சிற்றன்னையின் மகன் கோவிந்தன் என்பவரும் சக மாணவராகச் சேர்ந்தார். ஆசிரியர் வேத வார்த்தைகளுக்கு பொருள் கூறுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதினால் பகவத் ராமானுஜர் அவரிடமிருந்து விலகினார். அதன்பின் தனக்குத்தானே கற்றுவந்தார். அதில் வரும் சந்தேகங்களை காஞ்சி ஸ்ரீவரதனுக்கு ஆலவட்ட கைங்கரியம் செய்யும் வேளாள குலத்தவரான திருக்கச்சி நம்பி என்ற கஜேந்திரதாசாரிடம் தீர்த்துக் கொண்டார்.

ஏதாவது கைங்கரியம் செய்ய வேண்டும் என்று கேட்க, திருக்கச்சி நம்பிகளின் ஆலோசனைப்படி, தினமும் காஞ்சி ஸ்ரீவரதனுக்கு சாலைக் கிணற்றிலிருந்து அபிஷேகத் தீர்த்தம் கொண்டு வந்து சமர்ப்பித்து வந்தார். சாலை கிணறு காஞ்சிபுரத்துக்கு அருகே செவிலிமேட்டிலிருந்து ஓரிக்கை செல்லும் வழியில் இருக்கிறது. ராமானுஜர் இங்கிருந்து வரதராஜ பெருமாள் கோயிலுக்கு தினசரி தீர்த்தம் கொண்டு சென்றதை நினைவு கூரும் வண்ணம் மார்கழி மாதத்தில் அனுஷ்டான உற்சவம் விமரிசையாக நடைபெறும்.

வேடன் வடிவத்தில் வரதராஜ பெருமாள் இங்கு வருவார். சிறப்பு அபிஷேகங்கள் நடக்கும். தமக்கு பலவகையிலும் ஆலோசனை சொன்ன திருக்கச்சி நம்பிகளிடம், தன்னைச் சீடராக ஏற்றுக்கொள்ளும்படி ராமானுஜர் வேண்டினார். திருக்கச்சி நம்பிகள் அதனை ஏற்காமல், ‘‘உமக்கு ஏற்ற குருவை ஸ்ரீவரதன் அனுப்புவார்’’ என்று ஆறுதல் கூறினார். அதன் பின் அவர் வாக்குப்படி, ஆளவந்தாரின் சீடராகிய ஸ்ரீரங்கம் ஸ்ரீபெரியநம்பிகள், தானே வந்து குருவானார். காலக்கிரமத்தில் பகவானின் திருவுளப்படி துறவறம் பூண்டார்.

இவருடைய துறவறத்தைக் கண்ட காஞ்சி ஸ்ரீவரதனும், இவரை யதிராஜர் (துறவிகளின் அரசர்) என்று கொண்டாடினார். இக்கால கட்டத்தில் ஸ்ரீஆளவந்தார், ஸ்ரீரங்கத்தை தலைமைப் பீடமாகக் கொண்டு, ஸ்ரீவைஷ்ணவத்தை வளர்த்து வந்தார்.வைணவ எழுச்சிக்கு வித்திட்ட, காலத்தால் மறைந்து போன ஆழ்வார்களின் பாசுரங்களை வெளிக்கொணர்ந்த, வைணவ சமயத்தின் முதல் குருவான நாதமுனிகளின் பேரன் ஸ்ரீஆளவந்தார். பகவத் ராமானுஜரின் பல்வேறு பெருமையை அறிந்திருந்த ஆளவந்தார், தம் காலத்துக்குப்பின் வைணவ சமயத்தை, கட்டுக்குலையாமல் காப்பாற்ற, ராமானுஜரை வைணவ சமயத் தலைவராக நியமிக்க எண்ணினார்.

தம்முடைய இறுதிக்காலத்தை உணர்ந்த ஆளவந்தார், தன்னுடைய சீடர்களில் ஒருவரான ஸ்ரீபெரிய நம்பிகளை காஞ்சிபுரத்திற்கு அனுப்பி ராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்குஅழைத்துவர நியமனம் செய்தார். ஆனால், ராமானுஜர் பெரிய நம்பிகளுடன் ஸ்ரீரங்கம் வந்து சேர்வதற்கு முன்னமே ஆளவந்தார் மறைந்தார். இறுதிச் சடங்கிற்காகக் கொள்ளிடக் கரையில் வைக்கப்பட்டிருந்த பூத உடலை (சரமத் திருமேனி) மட்டுமே பகவத் ராமானுஜரால் பார்க்க முடிந்தது. ராமானுஜர் கதறி அழுதார். ஆறுதலுக்காக திருவரங்கத்தைச் சேவிக்கலாம் என்று மற்றவர்கள் அழைத்த பொழுது, தான் விரும்பிய தன்னுடைய ஆசாரியனை உயிருள்ள போதே சேவிக்க விடாத திருவரங்கனை சேவிக்க விரும்பவில்லை என்று வெறுத்துப் பேசினார்.

அப்பொழுது அவர் ஸ்ரீ ஆளவந்தாரின் பூதவுடலை உற்றுக் கவனித்தார். ஸ்ரீஆளவந்தாரின் வலது கையிலுள்ள மூன்று விரல்கள் ஏனோ மடங்கியிருந்தன. அதை வேறு யாரும் கவனிக்கவில்லை. அந்த மடங்கிய விரல்கள் ஏதோ சில செய்திகளை குறிப்பாக, தமக்கு உணர்த்துவதாக எண்ணிய ராமானுஜர், பெரிய நம்பிகளிடம் கேட்டார். ஆளவந்தாரின் மனதில் ஏதேனும், நினைத்து, நிறைவேற்ற முடியாத ஆசைகள் இருந்ததா? என்று விசாரித்தார். அப்பொழுது அவருடைய பிரதான சீடர்கள் சொன்னார். ‘‘ஆம், ஆளவந்தாரிடம் மூன்று ஆசைகள் இருந்தன.’’ அவைகள் என்னென்ன என்று ராமானுஜர் கேட்டார்.

1. வேதாந்த விஷயமான ஸ்ரீவியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை எழுதுதல்.
2. சாமவேத சாரமான ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்க உரை (வியாக்கியானம்) எழுதுதல்.
3. நமக்கு வேதங்கள் தந்த ஸ்ரீபராசரர் மற்றும் ஸ்ரீவியாசர் ஆகியோரின் பணிகளை சரியான முறையில் நினைவுகூர்வது.

ஸ்ரீ ராமானுஜர் அந்த இடத்திலேயே, ‘‘எனது மானசீக குருவின் மூன்று ஆசைகளையும் நிறைவேற்றுவேன்’’ என்று சங்கல்பம் செய்தார். எல்லோரும் வியக்கும் படியாக ஆளவந்தாரின் மடங்கியிருந்த மூன்று விரல்களும் நிமிர்ந்தன. அந்த ஆசைகளைத் தன் வாழ்நாளில் நிறைவேற்றினார் பகவத் ராமானுஜர். பிரம்ம சூத்திரத்திற்கு மிக அற்புதமாக விளக்க உரை எழுதினார் அது “ஸ்ரீ பாஷ்யம்’’ என்று புகழ் பெற்றது. ராமானுஜருக்கு “பாஷ்யக்காரர்’’ என்ற திருநாமம் அமைந்தது. திருவாய்மொழிக்கு தம்முடைய சீடரான திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்பவரை கொண்டு ஆறாயிரப்படி என்கின்ற விளக்கவுரையை எழுத வைத்தார். மூன்றாவதாக தம்முடைய வலதுகரமாக விளங்கிய சீடர் கூரத்தாழ்வானின் குமாரர்களுக்கு பராசரபட்டர், வேத வியாச பட்டர் என்ற பெயர் களைச் சூட்டி, வைணவ தரிசனம் பரவும்படி அவர்களை நியமித்தார். இப்படி ஆளவந்தாரின் மூன்று ஆசைகளையும் தம்முடைய வாழ்நாளில் ஸ்ரீராமானுஜர் நிறைவேற்றினார்.

ஆயினும் அன்றைய தினம் அவர் திருவரங்கம் செல்லாமலேயே மிகுந்த வருத்தத்துடன் காஞ்சிபுரம் திரும்பினார். காஞ்சிபுரத்தில் ஒரு மடத்தை நிறுவி வைணவ தரிசனம் வளர்த்து வந்தார். இங்கு இவருக்கு இவருடைய தங்கை மகன் தாசரதி என்ற முதலியாண்டான், சிற்றன்னையின் மகன் கோவிந்தன் மற்றும் கூரத்தாழ்வான் ஆகியோர் மிக முக்கிய சீடர்கள் ஆனார்கள். இதற்கிடையில் வைணவத்திற்கு தகுதியான தலைமை வேண்டும் என்று எண்ணிய ஆளவந்தாரின் சீடர்கள் எப்படியாவது ராமானுஜரை திருவரங்கம் அழைத்து வரவேண்டும் என்று நினைத்து, ஸ்ரீஆளவந்தாரின் குமாரரும், அவருடைய சீடருமான திருவரங்கப்பெருமாள் அரையர் என்கின்ற ஆசாரியரை காஞ்சிபுரம் அனுப்பி வைத்தனர்.

திருவரங்கப் பெருமாள் அரையர் இசைபாடுவதிலும் நாட்டியத்திலும் வல்லவர். இசையில் ஆர்வம்மிக்க காஞ்சி வரதராஜ பெருமாளை இசைபாடி மயக்கி, ராமானுஜரை அனுப்பும் படியாக பிரார்த்திக்க, வரதனும் இசைந்தார். வரதனிடம் அனுமதி பெற்று பகவத் ராமானுஜரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார். அங்கு ஆளவந்தாரின் சீடர்கள், ராமானுஜர் தலைமை வகித்து, வைணவ தரிசனத்தை வளர்ப்பதற்காக, சேரன் மடம் என்கின்ற மடத்திற்கு ஜீயராக (சிம்மாசனாதி பதியாக) நியமித்தார்கள். ராமானுஜர் ஆளவந்தாரின் அன்புக்குரிய ஐந்து சீடர்களை தமக்கு குருவாகக் கொண்டார். ஸ்ரீ பெரிய நம்பிகளிடம் பஞ்ச சம்ஸ்காரம் மற்றும் திருமந்திர உபதேசம் பெற்றார். தமது தாய் மாமனும் ஆளவந்தாரின் சீடரான ஸ்ரீபெரிய திருமலை நம்பிகளிடம் ராமாயணத்தின் நுண் பொருளை ஒரு வருடகாலம் தெரிந்துகொண்டார்.

திருக்கோட்டியூர் நம்பிகளிடம் 18 முறை நடந்து வைணவத்தின் ரகசியங்களை தெரிந்துக் கொண்டார். அவரிடம் பெற்ற மந்திரத்தை “ஆசை உடையவர்கள் எல்லாம் வாருங்கள்” என்று எல்லோருக்கும் வாரி வழங்கிய வள்ளல் ஆனார். பகவத் ராமானுஜரின் சுயநலமில்லா பெருந்தன்மையை எண்ணிய திருக்கோட்டியூர் நம்பிகள் பகவானைவிட கருணை மிக்கவர் ராமானுஜர் என்ற பொருளில், “எம்பெருமானாரே” என்று அழைத்துக் கட்டித் தழுவினார். இத்தனை சிறப்புகளைப் பெற்ற பகவத் ராமானுஜர், தன்னுடைய 120வது வயதில், ஸ்ரீவைகுண்டம் அடைந்தார். ஸ்ரீரங்கராஜனின் ஆணைப்படி அவருடைய சரமத் திருமேனியை (பூத உடலை), ஸ்ரீரங்கம் கோயில் வசந்த மண்டபத்தில் பள்ளிப் படுத்தினர். அந்த இடம் தற்பொழுதுள்ள உடையவர் சந்நதி ஆகும். இந்த சந்நதியில் உள்ள அவரது திருவுருவம் நேரில் பார்ப்பது போலவே இருக்கும். இவருடைய முக்கிய திருமேனிகள் நான்கு இடங்களில் உள்ளன.
அவை;

ஸ்ரீரங்கத்திலுள்ள “தானான திருமேனி’’.
திருநாராயணபுரத்தில் உள்ள “தமர்உகந்த’’ (அடியார்கள் ஆசைப்பட்டது)
திருமேனி.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள “தான்உகந்த’’ (அவரே ஆசைப்பட்டது) திருமேனி.
ஆழ்வார் திருநகர் ராமானுஜ சதுர்வேதி மங்கலத்தில் உள்ளது “பவிஷ்யதாசார்யர் திருமேனி’’.
இந்தத் திருமேனி பகவத் ராமானுஜர் பிறப்பதற்கு முன்னமே ஸ்ரீநம்மாழ்வாரால் இப்படி ஒரு மகான் தோன்றப் போகிறார் என்று கொடுக்கப்பட்ட வருங்கால குரு திருமேனி. உலகம் உய்ய வந்த ஸ்ரீராமானுஜரின் அவதாரத் திருநாளான இன்று, ஒவ்வொரு திருக்கோயிலிலும் இருக்கக்கூடிய அவருடைய திருமேனியை வணங்கி, அவருடைய பேரருளைப் பெற்று வாழ்வோம்!

 

The post எல்லோரும் வாருங்கள்! appeared first on Dinakaran.

Tags : Sri Ramanujar Jayanti ,God ,Mahan ,Sriperumbudur ,Tamil Nadu ,
× RELATED தனுசு ராசி முதலாளிகளின் முதலாளி