- பிஜேபி மாவட்டம்
- திருவாரூர்
- ஜனாதிபதி
- மது (ஏ) மதுசுதனன்
- காவனூர், குடவாசல் தாலூக், திருவாரூர் மாவட்டம்
- பாஜக
- தின மலர்
திருவாரூர்: பணப்பட்டுவாடா மோதலில் சொந்த கட்சி பிரமுகரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் திருவாரூர் பாஜ மாவட்ட தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா காவனூரை சேர்ந்தவர் மது (எ) மதுசூதனன் (40) பாஜவின் மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளராக இருந்த இவருக்கும், மாவட்ட தலைவராக உள்ள பாஸ்கருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடத்திற்கு முன்னர் மதுசூதனன் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார். கட்சி உறுப்பினராக இருந்து வரும் இவர், தஞ்சையில் போட்டியிட்ட கருப்பு முருகானந்தம் மற்றும் நாகை தொகுதியில் போட்டியிட்ட ரமேஷ் ஆகியோரது பண விநியோகத்தை கவனித்து வந்துள்ளார். நிர்வாகிகளிடம் பணத்தை கொடுக்காமல் முறைப்படி செலவு செய்து வந்ததால் கட்சியில் உள்ள நிர்வாகிகள் சில பேர் இவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 8ம்தேதி இரவு குடவாசல் ஓகை பாலம் அருகே இருந்து வரும் கடை ஒன்றில் மதுசூதனன் நின்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அவரது மனைவி ஹரினி குடவாசல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் செந்திலரசன் மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் உட்பட மொத்தம் 6 பேர் மீது வழக்கு பதிவுசெய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பகோணம் தாரசுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சரவணன் (எ) பைகா சரவணன் (30), பாஜ விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட பொறுப்பாளரான திருவாரூர் காட்டூரை சேர்ந்த ஜெகதீசன் (31) ஆகிய இருவரையும் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.
இதில் அவர்களிடம் இருந்து கொலை முயற்சி சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட டூவீலர் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக இருவரிடமும் நடத்திய விசாரணையில், கட்சி பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் செந்திலரசன் ஆகியோரை மதுசூதனன் தொடர்ந்து தனது முகநூல் பக்கம் உட்பட பல்வேறு சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்ததால் மிரட்டலுக்காக கும்பகோணத்தை சேர்ந்த கூலி படையினர் மூலம் கொலை முயற்சியில் ஈடுப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் தலைமறைவாக உள்ள கும்பகோணம் கொரநாட்டு கருப்பூரை சேர்ந்த தீனதாயளன் (25), திருவிடைமருதூர் பவண்டரியாபுரத்தை சேர்ந்த விஜய் (21) மற்றும் மற்றொரு விஜய், ஹரி, மற்றும் பாஜ பிரமுகர்களான குடவாசல் பிரகாஷ், ஓலையாமங்கலம் சாமிநாதன் உட்பட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாஜ திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கரை கோவையில் நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.
The post பணப்பட்டுவாடா மோதலில் சொந்த கட்சி பிரமுகருக்கு வெட்டு: பாஜ மாவட்ட தலைவர் உள்பட 3 பேர் கைது: 9 பேருக்கு வலை appeared first on Dinakaran.