- ஜவ்வாதுமலை
- சிபிஐ
- திருவண்ணாமலை
- கோவிந்தசாமி
- ஜமுனாமரத்தூர்
- ஜவ்வாது மலை ஒன்றியம்
- திருவண்ணாமலை மாவட்டம்
- மணிகண்டன்…
- ஜவ்வாதுமலை
திருவண்ணாமலை, மே 11: ஜவ்வாதுமலை பகுதியில், சிபிஐ வேலை வாங்கித் தருவதாக, ₹9.95 லட்சம் மோசடி செய்து 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை ஒன்றியம், ஜமுனாமரத்தூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி விவசாயி. அவரது மகன் மணிகண்டன் பிஎஸ்சி முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில், ஜமுனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக (சிஐஎஸ்எப்) பணிபுரியும் அன்பு (52) என்பவர், கோவிந்தசாமிக்கு கடந்த ஆண்டு அறிமுகம் ஆனார்.
அப்போது, ஜவ்வாதுமலை பகுதி வீரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (37), சிபிஐ இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருவதாகவும், அவர் மூலம் மத்திய அரசில் பலருக்கு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதை உண்மை என நம்பிய கோவிந்தசாமி, தன்னுடைய மகன் மணிகண்டனுக்கு, மத்திய அரசு வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, அன்பு மற்றும் விக்னேஷ் ஆகியோர் கோவிந்தசாமியை நேரில் சந்தித்து பேசி உள்ளனர். சிபிஐயில் சப் இன்ஸ்பெக்டர் வேலை காலியாக இருப்பதாகவும், அதில் மணிகண்டனை சேர்த்து விட ₹10 லட்சம் தருமாறு தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு இறுதியில் மற்றும் கடந்த ஜனவரி மாதம் என இரண்டு தவணைகளில் ₹9.95 லட்சத்தை, விக்னேஷ் என்பவரது வங்கி கணக்குக்கு கோவிந்தசாமி அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், அவரது மகனுக்கு வேலை வாங்கித் தர எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அதனால், சந்தேகம் அடைந்த கோவிந்தசாமி, இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது, விக்னேஷ், சிபிஐயில் வேலை செய்யாமல் பொய் சொன்னது தெரியவந்தது. மேலும், இதேபோல் பலரிடமும் ஏமாற்றி ₹1 கோடி வரை மோசடி செய்திருந்த தகவலும் தெரியவந்துள்ளது. அதனால், அதிர்ச்சி அடைந்த கோவிந்தசாமி இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும், தலைமறைவாக உள்ளபோலி சிபிஐ இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் அன்பு ஆகியோரை தேடி வருகின்றனர்.
The post சிபிஐ இன்ஸ்பெக்டராக நடித்து ₹9.95 லட்சம் நூதன மோசடி 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை ஜவ்வாதுமலை பகுதியில் பரபரப்பு appeared first on Dinakaran.