×
Saravana Stores

வெளிநாட்டில் வேலை பார்த்தவரிடம் ₹2.50 கோடி மோசடி

கடலூர், மே 11: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையை சேர்ந்தவர் முகமது ஷரீப் மகன் அப்துல் அஜீது (60). இவர் கடந்த 35 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு 2021ம் ஆண்டு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இவருக்கு கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கிராமத்தை சேர்ந்த முகமது சுஹைல் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது முகமது சுஹைல், தான் ஆண்டவர்கள் டிரேடர்ஸ் என்ற பெயரிலும், கிராமிய கோல்ட் என்ற பெயரிலும் பெரிய அளவில் மளிகை பொருட்கள் வியாபாரம் செய்து கோடிக்கணக்கில் வரவு செலவு செய்வதாகவும், தற்போது வியாபார அபிவிருத்திக்காக முதலீடு தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அப்துல் அஜீது பெயரில் தனியாக நிறுவனம் ஒன்று தொடங்கலாம் என்றும், இந்த நிறுவனம் மூலம் 40 சதவீதம் லாபம் தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய அப்துல் அஜீது, 25 தவணைகளில் வங்கி மூலமாக ரூ.1 கோடியே 69 லட்சத்து 6 ஆயிரத்து 940ஐ முகமது சுஹைலுக்கு கொடுத்துள்ளார். இதன் பிறகு முகமது சுஹைல், அப்துல் அஜீதுக்கு லாபமாக அவரது வங்கி கணக்கிற்கு 63 லட்சத்து 83 ஆயிரத்து 107 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், முகமது சுஹைல், தன்னுடைய வியாபாரத்தில் உள்ள 277 கோடியே 33 லட்சம் ரூபாய் வருமானவரி துறையால் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீட்பதற்கு ஒன்றரை கோடி ரூபாய் பணம் தேவைப்படுவதாக அப்துல் அஜீத்திடம் கூறியுள்ளார். இதை நம்பி அப்துல் அஜீது நகைகளை விற்று ரூ.1 கோடியே 14 லட்சத்து 48 ஆயிரம் கொடுத்துள்ளார்.

இதன் பிறகு அப்துல் அஜீது, முகமது சுஹைலிடம் லாபம் குறித்து கேட்டபோது, அவர் பணத்தை தர மறுத்து ஆட்களை வைத்து செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் முகமது சுஹைல் கொடுத்த சுமார் ஒன்றரை கோடி ரூபாய் காசோலையும் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது. இதையடுத்து அப்துல் அஜீது, இது குறித்து கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராமிடம் புகார் மனு அளித்தார். அதில், தன்னை ஏமாற்றிய முகமது சுஹைல் மிகப்பெரிய மோசடிக்காரர் என்றும், அவர் எந்த தொழிலும் செய்யவில்லை, ஆடம்பரமான கார்களை வைத்து பெரிய வியாபாரம் செய்வது போல் தோற்றம் ஏற்படுத்தி, என்னை ஏமாற்றி விட்டார். நான் எனது மகள் மற்றும் மனைவி நகைகளை விற்று ரூ.2 கோடியே 83 லட்சத்து 54 ஆயிரத்து 940 அவரிடம் கொடுத்துள்ளேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. எனவே, எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை பெற்ற எஸ்பி, இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி முகமது சுஹைல் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

The post வெளிநாட்டில் வேலை பார்த்தவரிடம் ₹2.50 கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Mohammad Sharif ,Abdul Ajeed ,Lalpettai ,Kattumannarkoil ,Dinakaran ,
× RELATED கடலூரில் அருந்து விழுந்த மின் கம்பியில் சிக்கி நாய்கள் பலி...