- இந்தியா
- சிவன்
- பரசுராமேஸ்வரா
- சுவாமி கோயில்
- குடிமல்லம், ஆந்திரப் பிரதேசம் மாநிலம்
- திருப்பதி
- இந்திய தொல்லியல்
ஆலயம்: பரசுராமேஸ்வர ஸ்வாமி கோயில், குடிமல்லம், ஆந்திரப் பிரதேச மாநிலம். (திருப்பதிக்கு கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவு). இந்திய தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் இவ்வாலயம் உள்ளது.சிந்து சமவெளி நாகரிகத்திற்குப்பிந்தைய வரலாற்றுக் காலத்தில் கிடைத்த மிகப் பழமையான சிவலிங்கங்களாக மூன்று லிங்கங்கள் கருதப்படுகின்றன. இவற்றில் மிகவும் பழமையானது ஆந்திராவின் குடிமல்லம் கிராமத்தில் உள்ள லிங்கத்தின் காலம் பொ.ஆ.மு.2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக ஆய்வாளர்களால் கணக்கிடப்பட்டுள்ளது.
அடுத்தது, உத்திரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத் அருகே உள்ள பொ.ஆ.மு 2-ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ.1-ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த லிங்கம் ஆகும். மற்றொரு பழமையான லிங்கமாக உத்திரப்பிரதேச மாநிலத்தின் மதுராவில் பொ.ஆ.1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்கம் கருதப்படுகிறது. ஆரம்ப காலத்தில் குடிமல்லத்தில் உள்ள லிங்கம் எவ்வித கட்டுமானமும் இன்றி வெட்டவெளியில் அமைக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன. பின்னர் சாதவாகனர்களின் காலத்தில் (பொ.ஆ.2-ஆம் நூற்றாண்டு) லிங்கத்தைச்சுற்றி ஆலய வடிவில் செங்கல் கட்டுமானம் ஏற்படுத்தப்பட்டது.
கல்லால் ஆன அரைவட்ட வடிவ கருவறை பல்லவர், பாணர்கள் ஆட்சிக்காலத்தில் (பொ.ஆ.8-ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்டது. இன்று தரைமட்டத்திற்கு கீழே அரைவட்ட கருவறையைக் கொண்ட எளிய அமைப்பினுள், 2000 ஆண்டு பழமையான லிங்கம் 1.5 மீட்டர் உயரமும் 0.3 மீட்டர் விட்டமும் அளவுகளுடன் ஒரு தாழ்வான நாற்கர பீடத்தின் மீது ‘பரசுராமேஸ்வரர்’ என பெயரிடப்பட்டு வணங்கப்படுகிறார்.
கோஷ்டங்களிலும், சிற்றாலயங்களிலும், நான்முகன், துர்க்கை, பார்வதி தேவி, ஆறுமுகம் கொண்ட கார்த்திகேயர், நின்ற நிலையில் இருகரங்களில் தாமரை மலர்களுடன் வீற்றிருக்கும் சூரியக்கடவுள் ஆகியோர் பேரழகுடன் காட்சியளிக்கின்றனர்.இக்கோயிலின் மேம்பாட்டிற்கு பல்வேறு அரச வம்சத்தினர் ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளனர். பல்லவ மன்னன் தந்திவர்மனின் (பொ.ஆ.795-846) கல்வெட்டு இந்த கோயிலுக்கு அவர் செய்த பங்களிப்புகளை பதிவு செய்கிறது. பின்னர், சோழர்கள் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்கள் இக்கோயிலில் பல திருப்பணிகளைச் செய்துள்ளனர்.
The post பாரதத்தின் பழமையான சிவலிங்கம் appeared first on Dinakaran.