×
Saravana Stores

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ12 கோடி மோசடி: சென்னை தொழிலதிபர் கடத்தி அடித்து கொலை

* மனைவியை அடைத்து வைத்து சித்ரவதை
* ஆசிரியர் உட்பட 3 பேர் கைது

ஊத்தங்கரை: ரூ12 கோடி பண மோசடி விவகாரத்தில் சென்னை தொழிலதிபரை கடத்தி கொலை செய்து அவரது மனைவியை அடைத்து வைத்து சித்ரவதை செய்த ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவரது மனைவி லட்சுமி (48). இவர்களுக்கு சந்தோஷ் (20), சந்திரகுமார் (16) என்ற மகன்கள் உள்ளனர். சந்தோஷ் பி.டெக்., படித்து வருகிறார். சந்திரகுமார் பிளஸ் 2 முடித்துள்ளார். வாகனம் தயாரிப்பு கம்பெனியில் பணியாற்றி வந்த வெங்கடேசன், வேலையை விட்டு விட்டு, தேங்காய் வியாபாரத்திற்கு மாறினார். தொடர்ந்து தொழிலதிபர் என கூறிக்கொண்டு வலம் வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு பலருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர்களிடம் தனக்கு அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை தெரியும் என கூறி வந்துள்ளார். மேலும், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் பணம் வசூலித்துள்ளார்.

இந்நிலையில், வெங்கடேசனின் இளையமகன் சந்திரகுமார். கடந்த 5ம் தேதி நீட் தேர்வு எழுதியுள்ளார். அவரையும், மூத்த மகன் சந்தோஷையும் காரில் அழைத்துச் சென்று, தேர்வு மையத்தில் விட்டு விட்டு, நிலம் கிரயம் தொடர்பாக சேலம் வரை சென்று வருவதாக, வெங்கடேசன்-லட்சுமி தம்பதி கூறி விட்டு சென்றனர். இதையடுத்து, தேர்வெழுதியதும் சந்திரகுமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர், பெற்றோரை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக எங்கு சென்றாலும், இரவில் பெற்றோர் வீடு திரும்பி விடுவது வழக்கம். ஆனால், அன்றிரவு வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த மகன்கள், கடந்த 7ம் தேதி, பெற்றோரை காணவில்லை என குன்றத்தூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் வேல் வழக்குப்பதிந்து, விசாரணையை முடுக்கி விட்டார்.

அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சுன்னாலம்பட்டியைச் சேர்ந்த ஆசிரியர் கணேசன் என்பவருக்கும், தனது தந்தைக்கும் நிலப்பிரச்னை இருந்து வந்ததாக மகன் சந்தோஷ் தெரிவித்தார். பணத்திற்காக அவர் தங்களது பெற்றோரை கடத்திச் சென்று அடைத்து வைத்திருக்கலாம் என கூறினார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான தனிப்படை போலீசார், ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். சுன்னாலம்பட்டியில் உள்ள கணேசன் தோட்டத்து வீட்டை சுற்றி வளைத்தபோது, போலீசாரை கண்டதும் அங்கிருந்து 3 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்த போது, ஆசிரியர் கணேசன் மற்றும் அவரது கூட்டாளிகளான பொள்ளாச்சி நித்தியானந்தம், சேலத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது.

தீவிர விசாரணையில், வெங்கடேசன்- லட்சுமி தம்பதியை கடத்தி வந்து, தோட்டத்து வீட்டில் தனித்தனி அறையில் அடைத்து வைத்து, நிலத்தை எழுதி தரும்படி கேட்டு, அடித்து சித்ரவதை செய்தது தெரியவந்தது. கடந்த 6ம் தேதி அதிகாலை, பலமாக தாக்கியதில் வெங்கடேசன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, பக்கத்து அறையில் இருந்த லட்சுமிக்கு தெரியாமல், அவரது உடலை அருகில் உள்ள திப்பம்பட்டிக்கு கொண்டு சென்று, அங்குள்ள தனியார் கிரஷரில் தைல மரத்திற்கு அடியில், குழி தோண்டி புதைத்து விட்டு வந்துள்ளனர். அதன் பின்னர், லட்சுமியிடம் நிலத்தை எழுதி கேட்டு, டார்ச்சர் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல், நிலத்தை எழுதி கொடுக்க லட்சுமி ஒப்புக்கொண்டுள்ளார். அப்போது, தனது 2 மகன்கள் கையெழுத்து போட்டால் தான், கிரயம் செய்ய முடியும் என அவர் கூறியதால், அவர்களை நேரில் வரவழைக்கும் முயற்சியில் ஆசிரியர் கணேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்கள் போலீசில் புகார் கொடுத்திருந்ததால், வசமாக சிக்கிக்கொண்டனர்.

அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்து உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியரான கணேசன், அரசு வேலைக்காக பலரிடம் பணம் வாங்கி, சுமார் ரூ12 கோடி வரை வெங்கடேசனிடம் கொடுத்தது தெரியவந்தது. பணத்தை பெற்றுக்கொண்ட வெங்கடேசன், பணி நியமன ஆணைகளை, கணேசனிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, சம்மந்தப்பட்டவர்கள் வேலையில் சேரச் சென்ற போது, அது போலியான ஆணை என்பது தெரிய வந்தது. இதனால், பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இதுகுறித்து பணம் கணேசனிடம் கூறியுள்ளனர். உடனே, அவர் வெங்கடேசனை தொடர்பு கொண்டு, கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டு வந்துள்ளார். ஆனால், வெங்கடேசன் பணத்தை கொடுக்காமல், அலைக்கழித்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கணேசன் அவரை தீர்த்து கட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அவர்களிடம் இருந்து லட்சுமியை போலீசார் மீட்டனர். பின்னர், நேற்று காலை 3 பேரையும், கிரஷருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வெங்கடேசன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை 3 பேரும் அடையாளம் காண்பித்தனர். தொடர்ந்து ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன், இன்ஸ்பெக்டர் கந்தவேல், தாசில்தார் திருமால் மற்றும் ஆர்ஐ கெஜலட்சுமி, விஏஓ ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் வெங்கடேசனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சடலத்தை நின்ற நிலையில் வைத்து புதைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர், ஊத்தங்கரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் பிரவீனா, சதீஷ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர், சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உடலை பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்பு, மனைவி மற்றும் மகன்களிடம் வெங்கடேசன் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, அவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதையடுத்து, வெங்கடேசனின் உடலை, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு எடுத்துச் சென்றனர். ஆசிரியர் கணேசன் என்பவருக்கும், தனது தந்தைக்கும் நிலப்பிரச்னை இருந்து வந்ததாக மகன் சந்தோஷ் தெரிவித்தார். பணத்திற்காக அவர் தங்களது பெற்றோரை கடத்திச் சென்று அடைத்து வைத்திருக்கலாம் என கூறினார்.

The post அரசு வேலை வாங்கி தருவதாக ரூ12 கோடி மோசடி: சென்னை தொழிலதிபர் கடத்தி அடித்து கொலை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி