×

எப்போது வேண்டுமானாலும் மோடியை நான் சந்திக்கலாம்: ஆந்திராவில் அன்புமணி பிரசாரம்


திருமலை: மோடியை எப்போது வேண்டுமானாலும் நான் சந்திக்கலாம். கோதாவரி- காவேரி இணைப்பு திட்டத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறேன் என ஆந்திராவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபுவை ஆதரித்து நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது குப்பத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: குப்பம் தொகுதியில் போட்டியிடக்கூடிய சந்திரபாபு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஆந்திர மாநிலத்தின் முதல்வராக வரவேண்டும்.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் சந்திரபாபு செய்த வளர்ச்சி திட்டங்களால், தற்போது ஐதராபாத் சிறந்த நகரமாக மாறி உள்ளது. ஒரு காலத்தில் தவறு செய்யும் அதிகாரிகளை தமிழகத்தில் ராமநாதபுரத்திற்கு பணியிடம் மாற்றம் செய்வது, போன்று மிகவும் வறண்ட பகுதியாக இருந்த குப்பம் தொகுதியும் இருந்தது. சந்திரபாபுவின் 30 ஆண்டுகால அரசியல் அனுபவத்தால் தொடர்ந்து அவர் எம்எல்ஏவாக வெற்றி பெற்று இந்த தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளார். சந்திரபாபு, மோடி இருவரும் எனது நண்பர்கள். மோடியை எப்பொழுது வேண்டுமென்றாலும் நான் சந்திக்கலாம்.

சந்திரபாபுவிடம் எப்பொழுது வேண்டுமென்றாலும் போனில் பேசிக் கொள்ளலாம். கட்டாயம் ஆந்திராவில் சந்திரபாபு முதல்வரான பிறகு வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும். கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்த அழுத்தம் கொடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக குப்பத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் கிரேன் மூலம் பிரம்மாண்ட கஜ மாலை அணிவித்து அன்புமணி ராமதாஸை வரவேற்றனர்.

The post எப்போது வேண்டுமானாலும் மோடியை நான் சந்திக்கலாம்: ஆந்திராவில் அன்புமணி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Anbumani ,Andhra Pradesh ,Tirumala ,PMK ,Anbumani Ramadoss ,Kuppam ,Chittoor district, ,
× RELATED ஆந்திராவில் வன்னியர் சங்கத்தினர்...