தாஹோத்: வரும் 11-ம் தேதி பர்தாம்பூர் வாக்குச்சாவடியில் மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குஜராத்தில் 25 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் தாஹோத் தொகுதிக்கு உட்பட்ட பர்த்தம்பூர் பகுதியில் உள்ள வாக்குசாவடிக்கு விஜய் பபோர் என்ற வாலிபர் வாக்களிக்க சென்றார். வாக்களிப்பதை இன்ஸ்டாகிராமில் அவர் நேரலை செய்துள்ளார். அதில், தான் வாக்களித்ததோடு, வாக்குச்சாவடி அதிகாரிகளை மிரட்டி 2 கள்ளஓட்டு போட்டதையும் அவர் காண்பித்து இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விஜய் பபோர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தாஹோத் காங்கிரஸ் வேட்பாளர் பிரபா தாவியத்,”கைது செய்யப்பட்ட விஜய் பபோர் உள்ளூர் பாஜ பிரமுகரின் மகன். தேர்தல் அதிகாரிகளை அவர் மிரட்டும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஜனநாயக முறையை அவர் அவமானப்படுத்தியுள்ளார்.எனவே,பூத் எண் 220ல் மறு வாக்குபதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்’’ என்றார்.இந்த நிலையில், வரும் 11-ம் தேதி பர்தாம்பூர் வாக்குச்சாவடியில் மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
The post கள்ள ஓட்டு போட்டதை இன்ஸ்டாவில் நேரலை : பாஜக பிரமுகர் அத்துமீறிய வாக்குச்சாவடியில் 11-ம் தேதி மறு வாக்குப்பதிவு!! appeared first on Dinakaran.