×

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கு: 3 இந்தியர்களிடம் நீதிமன்றம் விசாரணை

ஒட்டாவா: காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்களிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில், கடந்தாண்டு ஜூன் 18ல் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டின் பார்லிமென்டில் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தால், கனடா-இந்தியா தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், ஆல்பர்ட்டா மாகாணத்தின் எட்மன்டன் என்ற பகுதியில் வசிக்கும் கரண் பிரார் (22), கமல்ப்ரீத் சிங் (22), கரன்ப்ரீத் சிங் (28) ஆகிய 3 இந்தியர்களை கனடா போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்களை பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நீதிமன்றத்தில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக சிறை அதிகாரிகள் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் விசாரணை நடத்துவதற்கு 3 பேரும் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்களுடைய வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளும் வகையில், வழக்கின் விசாரணையை 21ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 25 ஆண்டுகள், பரோல் இல்லாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கனடா குற்றவியல் சட்டத்தின்படி, கொல்லப்பட்டுள்ள ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மகன் பால்ராஜ் நிஜ்ஜார் உட்பட 6 பேருடன், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எந்த வகையிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்வதற்கு தடை விதிக்க கோரி, அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றது.

நீதிமன்றத்தில் விசாரணையை பார்ப்பதற்காக, 50க்கும் மேற்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள், கொடியை ஏந்தியபடி நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே கோஷம் எழுப்பினர்.

The post காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கு: 3 இந்தியர்களிடம் நீதிமன்றம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ottawa ,Indians ,Surrey, British Columbia, Canada ,Hardeep Singh Nijjar ,
× RELATED காலிஸ்தான் ஆதரவாளரான நிஜ்ஜார்...