×
Saravana Stores

ரூ.1 கோடி மதிப்புள்ள ‘அம்பர்கிரிஷ்’ பறிமுதல்; மீனவர் கைது

திருவொற்றியூர்: ஒரு கோடி ரூபாய் மதிப்பு திமிங்கலம் எச்சம் வைத்திருந்த மீனவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சென்னை எண்ணூர் காவல் உதவி ஆய்வாளர் வீரக்குமார் தலைமையில் ஏட்டு ரீகன் ஜோஸ், போலீஸ்காரர் கணேசன் ஆகியோர் எர்ணாவூர் நேதாஜி நகர் பகுதியில் நேற்றிரவு ரோந்து சென்றனர். நேதாஜி நகர் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்ற நபரை அழைத்து போலீசார் விசாரித்தபோது பதற்றத்துடன் காணப்பட்டார். இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரித்தபோது நாகப்பட்டினம், சாமந்தன்பேட்டையை சேர்ந்த சிலம்பரசன் (33) மீனவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது பையில் வைத்திருந்த கிரிஸ் போன்ற பொருளை பற்றி விசாரித்தபோது அது அம்பர்கிரிஷ் எனப்படும் திமிங்கலத்தின் எச்சம் என்று தெரிந்தது. கடந்த வாரம் கடலில் மீன் பிடிக்க சென்றபோது வலையில் திமிங்கலத்தின் எச்சம் கிடைத்துள்ளது. அவற்றை விற்பதற்காக எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள அத்தை முத்துலட்சுமி வீட்டுக்கு வந்து சிலம்பரசன் தங்கியுள்ளார். திருவொற்றியூரில் உள்ள தனது மைத்துனர் சோபன் என்பவரை சந்தித்து திமிங்கலத்தின் எச்சத்தை விற்பது குறித்து ஆலோசித்து விட்டு பேருந்து நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருந்தபோது சிக்கியுள்ளார்.

சிலம்பரசன் வைத்திருந்த சுமார் 800 கிராம் எடை கொண்ட திமிங்கலம் எச்சத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்று தெரிகிறது. இதையடுத்து திமிங்கலம் எச்சத்தை பறிமுதல் செய்து திருவள்ளூர் மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இதுசம்பந்தமாக சிலம்பரசனை கைது செய்தனர். இதற்கு முன் திமிங்கலம் எச்சம் விற்பனை செய்துள்ளாரா என்று விசாரிக்கின்றனர்.

The post ரூ.1 கோடி மதிப்புள்ள ‘அம்பர்கிரிஷ்’ பறிமுதல்; மீனவர் கைது appeared first on Dinakaran.

Tags : Fisherman ,Tiruvottiyur ,Chennai ,Ennore Police ,Assistant Inspector ,Veerakumar ,Ettu ,Regan Jose ,Ganesan Ernavur ,Netaji Nagar ,
× RELATED சென்னை திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு: 35 மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு