×
Saravana Stores

யூ டியூப் சேனலில் நடிக்கவைப்பதாக கூறி 18,000 ரூபாய் வாங்கி ஏமாற்றியதால் பல் டாக்டரை கடத்தி சித்ரவதை: ரவுடி உள்பட 3 பேர் கைது

அண்ணாநகர்: சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் நவீன்(26). இவர் பல் டாக்டருக்கு படிக்கின்றார். மேலும் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். நேற்று இவரது செல்போனுக்கு பேசிய நபர், ‘’சார் உங்க யூடியூப் சேனலில் நடிக்க வேண்டும். எனவே, உங்களை நேரில் பார்க்க வேண்டும்’ என்று கேட்டுள்ளார். இதையடுத்து முகப்பேர் பகுதிக்கு டாக்டர் சென்றபோது அங்கிருந்த 3 பேர், நவீனை இழுத்துச் சென்று நடுரோட்டில் சரமாரியாக தாக்கி ஆட்டோவில் கடத்தி சென்றுவிட்டனர்.

இதனிடையே நவீன் தந்தையின் செல்போனுக்கு தொடர்புகொண்ட கடத்தல் கும்பல், ‘’உங்க மகனை கடத்தி செல்கிறோம். எங்களுக்கு கொடுக்க வேண்டிய 18 ஆயிரத்தை கொடுத்துவிட்டால் விடுவிப்போம். இல்லை என்றால் சித்ரவதை செய்வோம்’’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டனர். இதனால் பயந்துபோன நவீனின் தந்தை சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுபற்றி சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தியபோது பணம் கொடுக்கல் பிரச்னை தொடர்பாக நவீன் கடத்தப்பட்டது தெரியவந்தது.

மேலும் கடத்தப்பட்ட பகுதி முகப்பேர் என்பதால் சூளைமேடு போலீசார் ஜெ.ஜெ.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்து விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதன்பிறகு நவீன் தந்தை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்ததுடன் தன்னுடன் பேசிய நபரின் செல்போன் நம்பரையும் கொடுத்தார். இதையடுத்து அந்த நம்பருக்கு போலீசார் தொடர்புகொண்டு கடத்தப்பட்ட டாக்டர் நவீனை உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரித்தனர்.

இதனால் பயந்துபோன நபர்கள் உடனடியாக நவீனை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து 3 பேரை கைது செய்து விசாரித்தபோது சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கோபிநாத்(29), இவரது கூட்டாளிகள் செனாய் நகரை சேர்ந்த விக்னேஷ்(23), சஞ்சய் (23) என்று தெரிந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில்,’’ தனது யூ டியூப் சேனலில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி 18 ஆயிரம் ரூபாய் டாக்டர் வாங்கினார்.

பின்னர் நடிக்க வைக்காததுடன் நாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிவந்தார். இதனால் பல் டாக்டரை கடத்தி டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள கோபிநாத் வீட்டில் அடைத்துவைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்’ என தெரியவந்துள்ளது. இதையடுத்து விக்னேஷ், சஞ்சய், கோபிநாத் ஆகியோரை கைது செய்தனர்.

The post யூ டியூப் சேனலில் நடிக்கவைப்பதாக கூறி 18,000 ரூபாய் வாங்கி ஏமாற்றியதால் பல் டாக்டரை கடத்தி சித்ரவதை: ரவுடி உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : YouTube ,Annanagar ,Naveen ,Choolaimedu ,Chennai ,Rowdy ,
× RELATED 135 அடி உயரமுள்ள அண்ணாநகர் டவரில் ஏறி...