கோவை: சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் தங்க செயின்களை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் நடைபெற்ற சோதனையில் சிக்கிய 1.4 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை விமான நிலையத்தில், கோவை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு மற்றும் விமான புலனாய்வு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த ஆண் விமான பயணியிடம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், உடமை மற்றும் உள்ளாடைகளில் மறைத்து கொண்டு வரப்பட்ட 1 கிலோ 220 கிராம் எடை கொண்ட சுமார் ரூ.90,28,000 மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் 2 தங்கச் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல், கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பயணி ஒருவர் கேஸ் சிலிண்டருக்கு பயன்படுத்தப்படும் ரெகுலேட்டரில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 198 கிராம் எடையுள்ள சுமார் 14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள், செயின்கள் பறிமுதல்! appeared first on Dinakaran.