×

கோடை வெயிலில்குறைந்த நீரை பயன்படுத்தி மாற்றுபயிர்கள் சாகுபடி செய்து பயன்பெறலாம்: வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

பொன்னமராவதி, மே 9: பொன்னமராவதி வட்டாரத்தில் கோடை வெயிலில் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி குறுகியகால மாற்றுபயிர்கள் சாகுபடி செய்யுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் ரஹ்மத் நிசா பேகம் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது: நடப்பாண்டில் பொன்னமராவதி வட்டாரத்தில் கோடை பயிர் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர் வசதி உள்ள விவசாயிகள் கோடை காலத்தில் நீர் தேவை குறைவாக உள்ள பயிர்களான உளுந்து,எள், நிலக்கடலை ஆகிய பயிர்களை பயிரிட்டு குறைந்த காலத்தில் நிறைந்த வருமானம் பெறலாம். இத்திட்டமானது பயறு வகை பயிர்கள் உளுந்து – 9 எக்டர் பரப்பளவிலும், எள்- 12 எக்டர் பரப்பளவிலும், நிலக்கடலை -68 எக்டர் பரப்பளவிலும் ஆக மொத்தம் 89 எக்டர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்த வசதியாக விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் உளுந்து, நிலக்கடலை விதைகள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவைகள் பொன்னமராவதி மற்றும் காரையூர் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்ப வைத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இம்மாற்று பயிர்கள் செய்வதன் மூலம் மண் வளம் அதிகரித்து பூச்சி நோய் தாக்குதல் குறைந்து மகசூல் அதிகரிக்க வழி வகுக்கிறது. பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை வேர் முடிச்சுகளில் சேமிப்பதனால் தொடர்ந்து சாகுபடி செய்யப்படும் பயிர்களின் வளர்ச்சி சீராகும், அதிக மகசூல் கிடைக்கும், மேலும் தழைச்சத்து தேவை குறைக்கிறது.

நிலக்கடலை, பயறு வகைகள் போன்ற பயிர் வகைகளினால் அதற்குப் பின் மேற்கொள்ளப்படும் பயிர்களுக்கு உழவு பணிகள் எளிதாகுவதுடன் மண்வளம் மேம்பாடு அடைவதால் தொடர் பயிரினுடைய வேரின் வளர்ச்சி நன்றாக அமைந்து அதன் மகசூல் அதிகரிக்கும். எனவே பொன்னமராவதி வட்டார விவசாயிகள் கோடை பருவத்தில் உளுந்து, நிலக்கடலை, எள் விதைகளை வாங்கி பயிர் சாகுபடி செய்து பயனடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post கோடை வெயிலில்குறைந்த நீரை பயன்படுத்தி மாற்றுபயிர்கள் சாகுபடி செய்து பயன்பெறலாம்: வேளாண்மை உதவி இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Assistant Director of ,Ponnamaravati ,Rahmat Nisa Begum ,Assistant Director ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி பகுதியில் மழை