×
Saravana Stores

ராகுலுக்கு அதானி, அம்பானி டெம்போவில் கறுப்புபணம்: மோடி

ஐதராபாத்: தொழிலதிபர்கள் அதானி, அம்பானியை விமர்சிப்பதை ராகுல்காந்தி திடீரென நிறுத்தி விட்டது ஏன் என்றும் டெம்போக்கள் நிறைய கறுப்பு பணத்தை அவர்களிடம் இருந்து வாங்கி விட்டாரா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். தெலங்கானாவில் உள்ள வேமுலாவாடாவில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,‘‘ காங்கிரசின் இளவரசர்(ராகுல் காந்தி) கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றிய அரசுக்கும் அதானி- அம்பானிக்கும் ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதா என்பது உள்பட பல விஷயங்கள் பற்றி கேள்வி எழுப்பி கொண்டிருந்தார். ஆனால், திடீரென அதானி மற்றும் அம்பானியை விமர்சிப்பதை ராகுல்காந்தி நிறுத்தி விட்டது ஏன்.

தெலங்கானா மண்ணில் இருந்து இந்த கேள்வியை எழுப்புகிறேன். 2 தொழிலதிபர்களிடம் இருந்தும் ராகுல் காந்தி எவ்வளவு பணம் பெற்றார் என்பதை அறிய விரும்புகிறேன். அதானி, அம்பானியிடம் இருந்து டெம்போக்கள் நிறைய கறுப்பு பணம் காங்கிரசுக்கு வந்து சேர்ந்து விட்டதா. அவர்களுக்கு இடையில் என்ன ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 5 வருடங்களாக என்னை விமர்சித்து வந்தீர்கள். திடீரென அவர்களை தாக்குவதை நிறுத்தியது எதனால்?. எத்தனை கட்டுக்கள் கறுப்பு பணம் வாங்கினீர்கள். இது பற்றி நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார். கறுப்பு பணத்தை ஒழித்து விட்டதாக கூறிவிட்டு, தற்போது அதானி, அம்பானியிடம் கறுப்பு பணம் இருப்பதாக பிரதமர் மோடியே கூறியிருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

* அதானி, அம்பானியிடம் டெம்போவில் பணம் வாங்கித்தான் மோடிக்கு பழக்கமா? ராகுல் பதிலடி
புதுடெல்லி: தொழிலதிபர்கள் அதானி, அம்பானியிடம் டெம்போவில் பணம் வாங்கித்தான் பழக்கமா என்று மோடிக்கு ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: தொழிலதிபர்கள் அதானி, அம்பானி அனுப்பும் பணத்தைப் பற்றி மோடி தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறாரா?. அவர்களிடம் இருந்து டெம்போவில் இருந்துதான் பணம் வாங்கி பழக்கமா?மோடி ஜி, நீங்கள் இப்போது கொஞ்சம் பயப்படுவது போல் தெரிகிறதே? பொதுவாக நீங்கள் அதானி மற்றும் அம்பானியைப் பற்றி மூடிய கதவுகளுக்குள் தான் பேசுவீர்கள்.

ஆனால் முதல் முறையாக அதானி மற்றும் அம்பானியைப் பற்றி பொது வெளியில் பேசியுள்ளீர்கள். அவர்கள் டெம்போவில் பணம் தருகிறார்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும். அது உங்கள் தனிப்பட்ட அனுபவமா?. ஒரு காரியம் செய்யுங்கள். சிபிஐ, ஈடியை அவர்களிடம் அனுப்பி, முழுமையான விசாரணை நடத்துங்கள், பயப்பட வேண்டாம். ஆனால் நீங்கள், அதானி, அம்பானிக்கு வழங்கிய பணத்தை, காங்கிரஸ் கட்சி வாக்குறுதியளித்தபடி பல்வேறு திட்டங்கள் மூலம் இந்திய மக்களுக்கு அதே தொகையை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் பதிவிடுகையில்,‘‘3 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் நாற்காலி ஆட்டம் காண தொடங்கியுள்ளது. இதையடுத்து தனக்கு நெருக்கமான நண்பர்களையே மோடி தாக்க ஆரம்பித்து விட்டார். இது தேர்தலில் ஏற்படும் மாற்றங்களை காட்டுவதற்கான ஒரு சமிக்ஞையாகும்’’ என குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் அதானி, அம்பானி பெயரை குறிப்பிட்டு ராகுல் செய்த பிரசார வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

The post ராகுலுக்கு அதானி, அம்பானி டெம்போவில் கறுப்புபணம்: மோடி appeared first on Dinakaran.

Tags : Adani ,Rahul ,Modi ,Hyderabad ,Rahul Gandhi ,Ambani ,Vemulawada ,Telangana ,Dinakaran ,
× RELATED ரூ.7,000 கோடி பாக்கி வங்கதேசத்துக்கு மின்...