புதுடெல்லி: இந்தியர்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து, இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா பதவி விலகியிருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா சமீபத்தில் போட்காஸ்ட் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவில் அங்குமிங்கும் சில சண்டைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு கடந்த 75 ஆண்டாக மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழல் நீடிக்கிறது. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டையும் நாம் ஒற்றுமையாக வைத்திருக்க முடியும்.
இந்தியாவில் கிழக்கில் இருப்பவர்கள் சீனர்களை போலவும், மேற்கில் இருப்பவர்கள் அரேபியர்கள் போலவும், வடக்கில் இருப்பவர்கள் ஆங்கிலேயர்கள் போலவும், தெற்கில் இருப்பவர்கள் ஆப்ரிக்கர்கள் போலவும் தோற்றமளிக்கின்றனர். ஆனால் அதெல்லாம் ஒரு பிரச்னையில்லை. நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள். நாங்கள் மற்ற மொழி, மதம், கலாச்சாரம், உணவு பழக்கவழக்கங்ளை மதிக்கிறோம்’’ என்றார். இதில், இந்தியர்கள் நிறம் குறித்து சாம் பிட்ரோடா கூறியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. சமூக வலைதளங்களிலும், பல்வேறு அரசியல் கட்சியினரும் சாம் பிட்ரோடா கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘‘இந்தியாவின் பன்முகத்தன்மையை சாம் பிட்ரோடா விளக்கிய விதம் துரதிருஷ்டவசமானது, ஏற்றுக் கொள்ள முடியாதது. அவரது இந்த கருத்திலிருந்து காங்கிரஸ் முற்றிலும் விலகி நிற்கிறது’’ என விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து, சில மணி நேரத்தில் சாம் பிட்ரோடா இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார். சாம் பிட்ரோடாவின் பதவி விலகல் அவராகவே சுயமாக எடுத்த முடிவு என்றும், அதை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏற்றுக் கொண்டதாகவும், ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
* பிரதமர் மோடி கண்டனம்
தெலங்கானா மாநிலம் வாரங்கலில் நேற்றைய தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘என்னைப் பற்றி பேசியிருந்தாலும் பொறுத்துக் கொண்டிருப்பேன். ஆனால் நம் நாட்டு மக்களை நிறத்தின் அடிப்படையில் பேசியிருப்பது எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப் பற்றி ராகுல் பதில் அளிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஏன் முயற்சித்தன என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டேன். முர்மு கருப்பு நிறமுடையவர் என்பதால் தோற்கடிக்க முயற்சித்துள்ளனர். இந்த அவமரியாதையை நாடு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது’’ என்றார்.
The post சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து பதவி விலகினார் சாம் பிட்ரோடா: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.